வட்டார அளவில் உணவுப் பாதுகாப்பு, வேளாண்மை, வனவியல் துறைகளை மேலும் தீவிரமாக வலுப்படுத்தும் நோக்கில் முக்கிய உயர்நிலை வட்டாரக் கூட்டத்தைச் சிங்கப்பூர் அதிகாரபூர்வமாக ஏற்று நடத்துகிறது.
‘வேளாண், வனவியல் துறைக்கான ஆசியான் அமைச்சர்நிலைக் கூட்டம்’ எனும் அது, செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 27) தொடங்கி சனிக்கிழமை (அக்டோபர் 31) வரை நடைபெறுகிறது.
ஆசியானின் 11 உறுப்பு நாடுகளின் அமைச்சர்களும் மூத்த அதிகாரிகளும் அதில் பங்கேற்கின்றனர். அவர்களுடன் அமைப்பின் பங்காளித்துவ நாடுகளான சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகிய மூன்றும் கூட்டத்தில் கலந்துகொள்கின்றன.
48வது முறையாக நடைபெறும் அந்தக் கூட்டத்திற்கும் அதன் தொடர்பான மற்றச் சந்திப்புகளுக்குமான கருப்பொருள், ‘பங்காளித்துவத்தில் வேரூன்றி, நமது மீள்திறனை வளர்த்தல்’ என்பதாகும்.
இதற்கு முன்னர், சிங்கப்பூர், அத்தகைய கூட்டத்தை 2016ல் ஏற்று நடத்தியதாகச் சிங்கப்பூர் உணவு அமைப்பு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதி, பிலிப்பீன்சிடமிருந்து ஆசியான் தலைமைப் பொறுப்பைச் சிங்கப்பூர் ஏற்கவிருக்கிறது.
தற்போதைய ஆசியான் அமைச்சர்நிலைக் கூட்டத்திற்கு நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ தலைமை தாங்குவார்.
“பருவநிலை மாற்றத்தாலும் விநியோக நடவடிக்கைகளுக்கு ஏற்பட்ட தடைகளாலும் உலகச் சூழல் சிக்கலானது. இந்நிலையில் உணவுப் பாதுகாப்பு என்பது ஆசியானின் பொதுவான முன்னுரிமையாகத் தொடர்கிறது. வலுவான வட்டார ஒத்துழைப்புக்கும் அதிக மீள்திறன் கொண்ட வேளாண்-உணவுக் கட்டமைப்புகளுக்குமான நமது கூட்டுக் கடப்பாட்டை 48வது அமைச்சர்நிலைக் கூட்டம் மீண்டும் உறுதிசெய்கிறது,” என்றார் அவர்.
“உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு நமது வட்டாரத்தின் நிலையான வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் நடைமுறைத் தீர்வுகளை முன்னெடுப்பதற்கு, நமது ஆசியான் பங்காளித்துவ நாடுகளுடன் அணுக்கமாகப் பணியாற்றச் சிங்கப்பூர் ஆர்வத்துடன் இருக்கிறது,” என்றும் திருவாட்டி ஃபூ கூறினார்.
பருவநிலை மாற்றம், நிச்சயமற்ற சந்தை நிலவரம், வட்டார உணவுக் கட்டமைப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றால் ஆசியானின் வேளாண், வனவியல் துறை பல்வேறு நெருக்குதல்களை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில் இக்கூட்டங்கள் நடைபெறுவதாகச் சிங்கப்பூரின் உணவு அமைப்பு தெரிவித்தது.
பல்வேறு அம்சங்களில் நடைமுறைக்கேற்ப எவ்வாறு ஒத்துழைக்கலாம் என்பதை வைத்தே விவாதங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், அறிவுப் பகிர்வை எளிதாக்குதல், புதுமைகளை ஊக்குவித்தல், கிராமப்புற மற்றும் விவசாய சமூகங்களுக்கு ஆதரவளித்தல், ஆசியானின் நீண்டகால மீள்திறனுக்குப் பங்களிக்கும் கூட்டு முயற்சிகளை வலுப்படுத்துதல் முதலியவை அந்த அம்சங்களில் அடங்கும்.
