ஒரு காலத்தில் பெரியம்மை, காசநோய், எயிட்ஸ் போன்ற நோய்களுக்கு ஆளானோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையமான மோல்மேன் ரோட்டில் இருக்கும் முன்னாள் தொற்றுநோய் நிலைய வளாகம் விரைவில் விளையாட்டுக் கூடங்கள், உணவகங்கள், ஓவியக் கண்காட்சிகள் போன்றவை இடம்பெறும் வாழ்க்கைமுறை நிலையமாகப் பயன்படுத்தப்படலாம்.
இந்த வளாகம், முன்பு மிடல்ட்டன் மருத்துவமனை என்ற பெயரிலும் செயல்பட்டது. 91,541.27 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள இந்தக் கட்டடத்தை குறுகிய காலத்துக்கு வாழ்க்கைமுறை மையமாகப் பயன்படுத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை சிங்கப்பூர் நில அமைப்பு புதன்கிழமை (மே 28) வாடகைக்கு விட்டது.
அதன்கீழ் இவ்வளாகத்தில் அலுவலகப் பகுதிகள், ‘செர்விஸ் அப்பார்ட்மென்ட்ஸ்’ எனப்படும் ஹோட்டல்களைப் போல் செயல்படும் அடுக்குமாடி வீடுகள், உடல்பிடிப்பு மற்றும் உடல்நலக் காப்பு (spa and wellness) வசதிகள், நகர்ப்புற விவசாய இடங்கள் உள்ளிட்டவற்றை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் தொற்றுநோய் நிலைய வளாகத்தில் உள்ள 44 கட்டடங்களில் 23ஐப் பாதுகாக்கும் நோக்கில் நகர மறுசீரமைப்பு ஆணையம் அடையாளங்கண்டு கவனித்துவருகிறது. அதன்படி கட்டடங்களை மாற்றியமைப்பது போன்றவற்றின் தொடர்பில் ஆணையம் வழிமுறைகளைப் பிறப்பிக்கக்கூடும். சம்பந்தப்பட்ட கட்டடங்களின் வரலாற்றுச் சிறப்பைத் தக்கவைத்துக்கொள்வது, கட்டடக் கலை சார்ந்த முக்கிய அம்சங்களைப் பாதுகாப்பது ஆகியவை இலக்குகள்.
இதர 21 கட்டடங்களை இடிக்க முடியாது. ஆனால் அவை, நகர மறுசீரமைப்பு ஆணையம் விடுக்கும் வழிமுறைகளுக்கு உட்படுத்தப்படமாட்டா.
நூறாண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்புத் துறையின் வரலாற்றில் முன்னாள் தொற்றுநோய் நிலைய வளாகம் முக்கியக் கழகமாக விளங்குகிறது என்றது சிங்கப்பூர் நில ஆணையம்.
இந்நிலையம், 1913ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. தொற்றுநோய் மருத்துவமனையாக அமைக்கப்பட்ட இந்நிலையத்துக்கு 1920ல் மிடல்ட்டன் மருத்துவமனை என்று பெயர் சூட்டப்பட்டது. பொதுச் சுகாதார ஆர்வலரான டாக்டர் வில்லியம் ராபர்ட் கொல்வின் மிடல்ட்டனின் பெயரைக் கொண்டு அந்தப் பெயர் சூட்டப்பட்டது.
முன்னாள் தொற்றுநோய் நிலையம் அமைந்திருக்கும் பகுதியில் உள்ள கட்டடங்களின் மொத்தப் பரப்பளவு 12,978.88 சதுர மீட்டர். அதில் அதிகபட்சமாக (சுமார் 30%) 3,893.66 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட பகுதியை சில்லறை விற்பனைக் கடைகள் அல்லது உணவு, பானக் கடைகள் அல்லது இருவகை வசதிகளுக்காகவும் பயன்படுத்தலாம்.