நேப்பாளப் பேரிடரில் பாதிக்கப்பட்டோர்க்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி

நேப்பாளப் பேரிடரில் பாதிக்கப்பட்டோர்க்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி

படம்: ஹியூமானிட்டி மேட்டர்ஸ்

26 Sep 2026 - 6:31 am

1 mins read

நேப்பாளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், சிங்கப்பூரில் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 27) வீதி நிதி திரட்டும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

‘ஹியூமானிட்டி மேட்டர்ஸ்’ எனும் அறநிறுவனம் இதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த சனிக்கிழமை ஹியூமானிட்டி மேட்டர்ஸ் நடத்திய கலந்துரையாடலில், நேப்பாளப் பேரிடரில் பாதிக்கப்பட்டோர்க்கான மறுவாழ்வுப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் சிங்கப்பூர் மக்களும் குடியிருப்பாளர்களும் இணைந்து செயல்படுவதற்கான இரு முயற்சிகளை அது அறிவித்தது.

அவற்றில் முதலாவது முயற்சியே இந்த நிதி திரட்டு. அதில் கிட்டத்தட்ட 200 தொண்டூழியர்கள் பங்கேற்பர்.

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில், தொண்டூழியர்கள் நன்கொடைப் பெட்டிகளுடன் பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டுவர்.

அத்துடன், ‘ஒரு நாடு, ஒரு மனிதநேயம்’ எனும் வாசகம் கொண்ட ஒட்டுபடங்களையும் அவர்கள் விநியோகிப்பர். பல இனங்கள், சமயங்கள், தலைமுறைகளைச் சேர்ந்த சிங்கப்பூர் மக்களை ஒன்றிணைத்து நன்றி, பரிவு போன்ற மனிதநேயப் பண்புகளை வலியுறுத்துவதே இதன் நோக்கமாகும்.

‘ஹியூமானிட்டி மேட்டர்ஸ்’ அமைப்பின் தலைவர் ஓங் கெங் யோங்கும் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஸாக்கி முகம்மதும் ‘ஹியூமானிட்டி மேட்டர்ஸ்’ மையத்திலிருந்து தொண்டூழியர்களின் நிதி திரட்டு நடவடிக்கையைத் தொடங்கிவைப்பர்.

இதில் தொண்டூழியராகப் பங்கேற்க விரும்புவோர் ‘ஹியூமானிட்டி மேட்டர்ஸ்’ இணையத்தளம் வழியாகப் பதிவுசெய்யலாம்.

குறிப்புச் சொற்கள்