வேலையிட விபத்துகள் மற்றும் அதன்தொடர்பில் நிகழும் மரணங்கள் ஆகியவற்றைக் குறைப்பதற்கான தொடர் முயற்சியின் ஓர் அங்கமாக, நிறுவனங்களுக்குக் கூடுதல் மானியங்கள் வழங்கப்படவுள்ளன.
இதன் தொடர்பில் லாரி பாரந்தூக்கி நிலைநிறுத்து அமைப்பை நிறுவுதல் தொடர்பான மனிதவள அமைச்சின் மானியம் கூடுதலாக $1.8 மில்லியன் நிதியைப் பெற்றுள்ளது.
மேலும் இந்தத் திட்டம் மார்ச் 2027 வரை இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்றும், எனினும் 50 விழுக்காட்டளவு குறைவான மானியத்துடன் அது செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை (ஜூலை 11) அன்று நடைபெற்ற வருடாந்திர சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்புப் பிரசார நிகழ்வில் இந்தப் புதிய நிதி மற்றும் திட்டம் விரிவாக்கம் குறித்து அறிவித்தார், கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் மனிதவள அமைச்சுகளுக்கான துணை அமைச்சர் தினேஷ் வாசு.
கடந்த மார்ச் 2023 இல் அறிமுகப்படுத்தப்பட்ட $4 மில்லியன் மானியம், நிலைநிறுத்த அமைப்பு நிறுவுவதற்கான கட்டணத்தில் 70 விழுக்காட்டிற்கான நிதியாதரவு அளித்தது. மார்ச் 2025 அதற்கான காலக்கெடுவாக இருந்தது.
நிலைநிறுத்தும் அமைப்பைப் பாரந்தூக்கியில் பொருத்துவதற்கான செலவு $10,000 வரை ஆகும். இந்நிலையில் தற்போது வந்துள்ள புதிய அறிவிப்பால், இத்திட்டம் தொடர்பில் ஒவ்வொரு நிறுவனமும் $20,000 வரை நிதியைப் பெறலாம்.
புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது உட்பட, அதிக ஆபத்துள்ள தொழில்துறையாகக் கருதப்படும் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் வேலையிடப் பாதுகாப்பை அதிகரிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளின் ஓர் பகுதியாக, இந்த அண்மைய அறிவிப்பு வந்து சேர்ந்துள்ளது.
லாரி பாரந்தூக்கி என்பது அதிகளவிலான சுமைகளைத் தூக்குவதற்கும் அவற்றை எடுத்துச் செல்வதற்கும் பயன்படுத்தப்படும் நோக்கில் அவ்வாகனத்தில் பொருத்தப்படும் ஒன்று.
தொடர்புடைய செய்திகள்
பாரம் ஏற்றும்போதும் இறக்கும்போதும் அவை நிலைகுலைந்து சரியாதபடிக்கு லாரி பாரந்தூக்கி நிலைநிறுத்து அமைப்புகள் பொருத்தப்படுகின்றன என்பது நினைவுகூரத்தக்கது.
இதன் வழி நிகழும் வேலையிட விபத்து உள்ளிட்ட நிகழ்வுகளைத் தடுக்கவும், நிலைத்தன்மையை வலுப்படுத்தவும் இவ்வகை அமைப்புகள் தற்போது கூடுதல் நிதியுடன் களமிறக்கப்படுகின்றன.