நட்புணர்வு, கனிவு மற்றும் துரிதமாகச் செயல்பட்ட சிந்தனையின் விளைவாகத் தமது அண்டை வீட்டுக்காரரான [Ϟ]திருவாட்டி லீனா நல்லபடியாகக் பெண் குழந்தையைப் பெற்றெடுக்க உதவியுள்ளார் திருவாட்டி லதாஷ்னி கோபி நாதன், 35.
பொங்கோலில் உள்ள தமது வீவக புளோக்கிலிருந்து ஆகஸ்ட் 10ம் தேதி தேசிய தினக் கொண்டாட்டங்களைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, திருவாட்டி லீனா, பிரசவ வலி ஏற்பட்டதுபோல் உணர்வதாக அங்கிருந்தவர்களிடம் கூறினார்.
அடுத்தநாள் அவர்கள் மருத்துவமனைக்குச் செல்ல நேரிட்டால், தேவைப்பட்டால் தமது இருமகள்களையும் பார்த்துக்கொள்ளுமாறு திருவாட்டி லதாஷ்னியிடமும் அவரது கணவரிடமும் லீனா சொன்னதாகவும் அறியப்படுகிறது.
அதன்பிறகு இரவு 10.15 மணியளவில் தமது கணவருடன் திருவாட்டி லதாஷ்னி இரவு உணவை உண்டுகொண்டிருக்கையில் திருவாட்டி லீனாவின் கணவர் ஸுக், அவர்களிடம் உதவிகேட்டிருக்கிறார்.
உடனே, தமது தோழி சங்கீதாவையும் அழைத்துக்கொண்டு அண்டை வீட்டுக்காரரான லீனாவுக்கு உதவி செய்ய விரைந்தார் லதாஷ்னி.
‘’நான் சென்றபோது வீட்டின் வாயிலருகே முழங்காற்படியிட்டவாறே வலியால் துடித்துக்கொண்டிருந்தார் லீனா,” என்றார் லதாஷ்னி.
உடனடியாகத் தோழிகள் இருவரும் லீனாவுக்கு உதவிக்கரம் நீட்ட, சில நிமிடங்களில் இரவு 10.30 மணிவாக்கில் வீட்டிலேயே பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார் லீனா.
“ஏறத்தாழ ஒரு மணி நேரம் ஆனதுபோல இருந்தது. ஆனால் 15 நிமிடத்தில் குழந்தை பிறந்துவிட்டது. சில மணித்துளிகள் அதிர்ச்சியாக இருந்தது. எனினும் எல்லாம் விரைவாகவே முடிந்துவிட்டது.
தொடர்புடைய செய்திகள்
‘‘குழந்தையும் அழத்தொடங்க, துணை மருத்துவர்களும் வந்து சேர்ந்துவிட்டனர்,” என்று அந்தத் தருணத்தை விவரித்தார் திருவாட்டி லதாஷ்னி.
தாயும் சேயும் நலமுடன் இருப்பதை துணை மருத்துவர்கள் உறுதிசெய்தனர் என்ற திருவாட்டி லதாஷ்னி, “வாழ்வில் இதுவரை கண்டிருந்த மகத்துவமான தருணம், அது,’’ என்று தமது சமூக வலைப்பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
சிங்கப்பூரின் பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் அண்டை வீட்டாரின் உறவுகள் குறித்த முக்கியத்துவத்தைப் பற்றி இந்தத் தருணம் சிறப்பாகப் புரியவைத்தது என்றும் திருவாட்டி லதாஷ்னி குறிப்பிட்டுள்ளார்.