இவ்வாண்டு அக்டோபர் மாதத்தில் சிம்பா தொலைத்தொடர்பு நிறுவன அதிகாரிகள் போலவும் அரசாங்க அதிகாரிகள் போலவும் ஆள்மாறாட்ட மோசடிகள் நடந்து, அவற்றில் $1.3 மில்லியன் மதிப்புள்ள தொகை கைமாற்றப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் ஏமாந்துள்ளனர்.
காவல்துறை வியாழக்கிழமை (அக்டோபர் 29) வெளியிட்ட செய்தி அறிக்கையில் அம்மாதம் மட்டும் இதுபோன்ற 59 புகார்கள் செய்யப்பட்டதாகத் தெரிவித்தது.
அவ்வகை மோசடியில் முதலில் சிம்பா ஊழியர்கள் எனக் கூறியபிறகு பாதிக்கப்பட்டோர் போலி அரசாங்க அதிகாரிகளிடம் பேச திருப்பிவிடப்படுகின்றனர். ஆள்மாறாட்டம் செய்யும் அந்த அதிகாரிகள், பெரிய அளவில் பணத்தை பாதிப்படைந்தோரிடம் இருந்து ஏமாற்றி அதனை அனுப்பச் செய்கின்றனர்.
அறிவிப்பில்லா வகையில் சிம்பா ஊழியர் என்ற பெயரில் மோசடிக்காரர்கள் தொலைபேசியில் தொடர்புகொள்கின்றனர். ஐபோன் கைப்பேசிகளை வாங்கியது அல்லது தொலைபேசி திட்டத்துக்கு விண்ணப்பித்தது போன்ற காரணங்களைச் சொல்லி, பாதிக்கப்பட்டோர்மீது குற்றம் சுமத்தப்படுகிறது. பிறகு மேல் அதிகாரிகளிடம் பேசும்படி அழைப்பு மாற்றிவிடப்படுகிறது.
அப்போது காவல்துறை, அல்லது சிங்கப்பூர் நாணய ஆணைய அதிகாரிகள் என அடையாளப்படுத்திக்கொள்வோர் பாதிக்கப்பட்டோரிடம் பேசுகின்றனர்.
பாதிப்படைந்தோர் அதற்குமுன் தெரிந்திராத வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை அனுப்பிவைக்கும்பேடி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் அல்லது நேரடியாக ரொக்கத்தை, நகைகளை, விலைமதிப்புள்ள கைக்கடிகாரங்கள் போன்றவற்றை அதிகாரிகள் என்று கூறிக்கொள்வோரிடம் கொடுக்கும்படி வழிகாட்டப்படுகின்றனர்.
அவ்வாறு தொடர்புகொண்டோர்களை மீண்டும் கண்டுபிடிக்கமுடியாத நிலையில் அல்லது உண்மையான அரசாங்க அதிகாரிகளிடம் விவரங்களைக் கேட்டபிறகுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக பாதிக்கப்பட்டோர் உணர்வர்.
ஒரு சம்பவத்தில் தனிமையில் வாழும் பாதிக்கப்பட்ட ஒருவர் $285,000 மதிப்புள்ள பணத்தை மோசடிக்காரர்களுக்கு அனுப்பியுள்ளார்.
இதுபோன்ற வழக்குகளில் 10 புகார்களில், எட்டு 65க்கும் மேற்பட்ட வயதினர் சார்ந்தது. அனைத்து வயதினரிலும் அப்பிரிவினரே அதிகமாக பணத்தை மோசடியில் இழக்கின்றனர்.
அரசாங்க அதிகாரிகள் எந்த நிலையிலும் பணத்தை பரிமாற்றம் செய்யும்படி யாரையும் கேட்டுக்கொள்ளமாட்டார்கள். தொலைபேசி உரையாடல்களை மற்ற அதிகாரிகளுக்கு மாற்றிவிட மாட்டார்கள் என்று காவல்துறை உறுதிப்படுத்தியது.
காவல்துறைத் தரவுகளின்படி, சிங்கப்பூரில் நடக்கும் மிகப் பரவலான குற்றச்செயல்களில் மோசடியே முதலிடம் வகிக்கிறது. இவ்வாண்டின் முதற்பாதியில் மட்டும் $410.6 மில்லியன் வரை மக்களால் இழக்கப்பட்டுள்ளது.
