சிங்கப்பூரில் உடற்பருமனைச் சமாளிக்க நிபுணத்துவ உதவியை அதிகமானோர் நாடுவதாகத் தெரியவந்துள்ளது.
உடற்பருமன் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துவருவதால், அதற்குரிய சேவைகளுக்கான தேவை கூடியிருப்பதாகச் சுகாதாரப் பராமரிப்பு வல்லுநர்கள் தெரிவித்தனர்.
டான் டோக் செங் மருத்துவமனையில் உள்ள உடற்பருமன் தொடர்பான மருந்தகத்திற்கு வருவோரின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் 50 விழுக்காடு உயர்ந்திருப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
உடற்பருமன் சிக்கலான மருத்துவ நிலை என்பதை உணர்ந்தோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளை அதிகமானோர் நாடுவதாக வல்லுநர்கள் சுட்டினர்.
டான் டோக் செங் மருத்துவமனையின் உடற்பருமன் உள்ளோருக்கான மருந்தகத்தில் பத்தில் ஏழு நோயாளிகள் மருத்துவ உதவியை நாடுவதற்குமுன் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றை மேற்கொண்டுள்ளனர்.
உடற்பருமன் குறித்த தவறான புரிதலால் பலரும் தங்களையே குறைகூறிக்கொள்வதாக மருத்துவர்கள் கூறினர்.
ஆரோக்கியமற்ற உணவு வகைகளை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதாலும் போதுமான உடற்பயிற்சி செய்யாததாலும் உடல் பருமனாவதாகப் பலரும் நினைக்கின்றனர் என்ற அவர்கள், உண்மையான நிலைமை அதைவிடச் சிக்கல் நிறைந்ததாக இருக்கலாம் என்றனர்.
உடற்பருமன் என்பது மரபியல் சார்ந்தது என்றும் உயிரியல் செயல்முறைகள், ஹார்மோன் மாற்றங்கள், சுற்றுச்சூழல் காரணிகள் ஆகியவையும் உடல் எடையைக் குறைக்கத் தனிநபர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளையும் அடிப்படையாகக் கொண்டது என்று அவர்கள் விவரித்தனர்.
உடற்பருமன் சிகிச்சைக்கான அதிகரிக்கும் தேவை தனியார் துறையிலும் காணப்படுகிறது.
மருத்துவ ரீதியாக உடல் எடையை நிர்வகிப்பதில் கைகொடுக்கும் டிரிம்லி நிறுவனம், இவ்வாண்டுத் தொடக்கத்திலிருந்து நோயாளிகளின் எண்ணிக்கை 30 விழுக்காடு அதிகரித்துள்ளதாகச் சொன்னது.
அதிகரித்துவரும் தேவையைப் பூர்த்திசெய்ய அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் அலுவலகத்தின் பரப்பளவை விரிவுபடுத்தவும் மனிதவளத்தைப் பெருக்கவும் மருந்தகம் திட்டமிடுகிறது.
