இணையவழி ஊழியர்கள் சார்ந்த வேலையிட விபத்துகள் அதிகரிப்பு: பாதுகாப்புக் கட்டமைப்புகள் மறுஆய்வு

இணையவழி ஊழியர்கள் சார்ந்த வேலையிட விபத்துகள் அதிகரிப்பு: பாதுகாப்புக் கட்டமைப்புகள் மறுஆய்வு

2 mins read
41e4e67e-7197-47c7-852e-4edc7586d484
கடந்த ஆண்டு நிகழ்ந்த வேலையிட விபத்தில் உயிரிழந்தோரில் இருவர் இணையவழி ஊழியர்கள். பதிவாகியுள்ள 74 கடுமையான வேலையிட விபத்துகளில் 62 அத்தகைய ஊழியர்கள் தொடர்புடையவைகள். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

2025ஆம் ஆண்டில் இணையவழி ஊழியர்களுக்கு ஏற்பட்ட வேலையிடக் காயங்களின் விகிதம் 100,000 பேருக்கு 84.6 காயங்கள்  எனப் பதிவாகியுள்ளன.

புதன்கிழமை (ஏப்ரல் 8) நடைபெற்ற நாடாளுமன்றக் கேள்விநேரத்தின்போது மனிதவள அமைச்சர் டான் சீ லெங் அதனைத் தெரிவித்தார். 

இணையத்தளம் வழியாகச் சேவை வழங்கும் ஊழியர்களின் பாதுகாப்பு, விநியோக ஓட்டுநர்கள் எதிர்கொள்ளும் பணிசார்ந்த ஆபத்து உள்ளிட்டவை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்த கேள்விகளுக்கு டாக்டர் டான் பதிலளித்தார்.

சென்ற ஆண்டு நிகழ்ந்த வேலையிட விபத்தில் உயிரிழந்தோரில் இருவர் இணையவழி ஊழியர்கள். பதிவாகியுள்ள 74 கடுமையான வேலையிட விபத்துகளில் 62 அத்தகைய ஊழியர்களைச் சார்ந்தது என்று கூறினார் டாக்டர் டான். எஞ்சியுள்ள 12 விபத்துகள் வாடகை வாகனச் சேவைகளை வழங்கும் ஊழியர்கள் தொடர்புடையவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனால், அவர்களது பாதுகாப்புச் சார்ந்த  நடவடிக்கைக் கட்டமைப்புகளை மறுஆய்வுக்கு உட்படுத்துகிறது மனிதவள அமைச்சு.

எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான டாக்டர் டான்,  வேலையிட விபத்துகளால் நேரிடும் கடுமையான காயங்கள் சார்ந்த விகிதம், அவர்கள் பணி சார்ந்த ஆபத்துகளையும் பிரதிபலிக்கிறது என்று தெரிவித்தார்.

சாலைகள், பொதுப் பாதைகளில் அத்தகைய ஊழியர்கள், நீண்ட நேரம் இருப்பதோடு வேலைச் சூழலின் மீது குறைந்த அளவிலான கட்டுப்பாட்டையே கொண்டுள்ளதையும் சுட்டினார் அமைச்சர் டான்.

2025ஆம் ஆண்டில் இணையவழி ஊழியர்கள் தொடர்புடைய  வேலையிட மரணங்களும் கடும் காயங்களும் பெரும்பாலும் வாகனங்கள் அல்லது நடமாட்டச் சாதனங்களை இயக்கும்போது ஏற்பட்டவை. அதனால் சாலைப் பாதுகாப்பு என்பது முக்கிய அக்கறையாக உள்ளது என்றும் டாக்டர் டான் விவரித்தார்.

ஊழியர்களுக்கு ஏற்படும் காயங்களை வேலையிடம் சார்ந்த நெருக்குதல்கள், சோர்வு ஆகியவற்றுடன் இணைப்பதற்கான தரவுகள் மனிதவள அமைச்சிடம் இல்லை என்றார் அவர்.

இருப்பினும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளாலும் வருமானம் போய்விடுமோ என்ற கவலையாலும் ஊழியர்கள் நெருக்குதல்களை எதிர்கொள்வதாக இணையவழி ஊழியர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது என்றார்.

சங்கங்கள் முன்வைத்துள்ள காரணங்களில் உச்ச நேரத்தில் அதிகப்படியான வேலைகளைச் செய்துமுடிக்க ஊழியர்கள் விரைவாகச் செல்வதும் நடைபெற்றிருந்ததாக அமைச்சர் சொன்னார்.

இவை பணியிடப் பாதுகாப்பு ஆபத்துகளை அதிகரிக்கக்கூடும் என்பதைக் குறிப்பிட்ட டாக்டர் டான், ஊழியர்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் இலக்குடன் உருவான இணையவழி ஊழியர்களுக்கான பணிக்குழு மார்ச் மாதம்  அதன் முதல் சந்திப்பை நடத்தியது என்றார்.

மேலும் குழு கண்டறிந்த தகவல்களும் அதன் பரிந்துரைகளும் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்