இந்தியச் சமூகம் கல்வியிலும் வருமானம் ஈட்டுவதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் நல்ல வளர்ச்சியையும் கண்டுள்ளது என்று தெரிவித்தார் உள்துறை, சட்ட அமைச்சர் திரு கா.சண்முகம்.
சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் ‘சிண்டா பாராட்டு விழா 2025’ நிகழ்ச்சி சனிக்கிழமை (ஏப்ரல் 19) மதியம் நடைபெற்றது.
உள்துறை, சட்ட அமைச்சரும் சிண்டாவின் அறங்காவலர் குழுத் தலைவருமான திரு சண்முகம் விழாவில் பங்கேற்று உரையாற்றினார்.
இந்தியச் சமூகம் எட்டியுள்ள பல்வேறு முன்னேற்றங்களைப் புள்ளிவிவரங்களுடன் தமது உரையில் விவரித்தார் அமைச்சர் சண்முகம்.
‘‘மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 2000 முதல் 2020 வரையிலான 20 ஆண்டுகளில் சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தில் 25 வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடையவர்களில், பட்டம் பெற்றவர்களின் விகிதம் 16.5 விழுக்காட்டிலிருந்து 41 விழுக்காடாக உயர்ந்து, சுமார் இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது,” என்றா் திரு சண்முகம்.
இந்த உயர்வுக்கு குடியேற்றமும் பங்காற்றியுள்ளது என்றபோதும், சமூகத்தின் மேம்பாட்டினாலேயே இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்றார் அமைச்சர்.
மேலும், அதே காலகட்டத்தில், அதே வயதுப் பிரிவில், உயர்நிலைக் கல்வியைவிடக் குறைந்த தேர்ச்சியுடன் பள்ளியைவிட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளதையும் அவர் சுட்டினார்.
“2000ல் முழுமையான உயர்நிலைக் கல்வித் தேர்ச்சியின்றி 38 விழுக்காட்டினர் பள்ளியைவிட்டு வெளியேறினர். இது, 2020ல் 18 விழுக்காடாகக் குறைந்தது,” என்று சுட்டிய திரு சண்முகம், “நாம் இன்னும் சிறந்து செயல்பட முடியும்,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
1970கள், 1980கள், 1990களின் முற்பகுதியில் இந்தியச் சமூகத்தைப் பார்த்தவர்களுக்கு, இன்று சமூகம் எட்டியுள்ள நிலை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்தார் திரு சண்முகம்.
இந்தியர்களின் மாதாந்தர இடைநிலை குடும்ப வருமானமும் குறிப்பிடத்தக்க உயர்வைக் கண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இங்குள்ள இந்தியச் சமூகத்தின் மாதாந்தர இடைநிலை வருமானம் 2010க்கும் 2020க்கும் இடையிலான 10 ஆண்டுகளில் கணிசமான அளவில் 40 விழுக்காடு அதிகரித்துள்ளது.
இந்த முன்னேற்றத்துக்கு வேலைவாய்ப்புகளும் அவற்றை மேம்பட்ட கல்வி செயல்திறன் வாயிலாக அணுகும் சமூகத்தின் ஆற்றலும் காரணம் என்றார் திரு சண்முகம்.
“இதில் குறிப்பாக, மக்களுக்கு அதிக உதவி தேவைப்படும் பிரிவுகளை இலக்காகக் கொண்டு செயல்படுவதில் சிண்டா மிக முக்கிய அங்கம் வகித்து வருகிறது,” என்று அவர் கூறினார்.
இந்தியச் சமூகத்துக்கான சிண்டாவின் திட்டங்களுக்கும் முயற்சிகளுக்கும் மேலும் வலுவான, அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்க நேரம் ஒதுக்கி, திறன் வளங்களையும் தன்னலமின்றி வழங்கிய 328 தனிமனிதர்களுக்கும் அமைப்புகளுக்கும் சிண்டா விருது வழங்கிச் சிறப்பித்தது.
இந்த விழா குறித்து தமிழ் முரசிடம் பேசிய சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன், “சமூகத்தின் சவால்களைக் களையவும் சமுதாயத்தை மேம்படுத்தவும் ஒன்றிணைந்து முயன்று வருகிறோம்,” என்றார்.
“இந்தச் சமுதாயத் தேரை இழுப்பதற்கு ஏராளமானோர் தேவைப்படுகிறார்கள். அதற்குக் கைகொடுத்தவர்களுக்குக் கைதட்டல்களையும் அங்கீகாரத்தையும் ஊக்கத்தையும் இன்றைய விழா வாயிலாக நல்குகிறோம்,” என்றார் அவர்.