நேப்பாள வெள்ளம் தொடர்பில் இணையத்தில் கருத்துகள்; ஐவரிடம் விசாரணை

நேப்பாள வெள்ளம் தொடர்பில் இணையத்தில் கருத்துகள்; ஐவரிடம் விசாரணை

எஸ்ஐஏ-ஏர்இந்தியா ஒப்பந்தம் தொடர்பில் இணையத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளும் இந்த விவகாரத்தில் அடங்கும்
படம்: ஏஎஃப்பி

09 Sep 2026 - 9:45 am

2 mins read

நேப்பாளத்தில் ஏற்பட்ட மோசமான திடீர் வெள்ளம், ஏர் இந்தியா நிறுவனத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) முதலீடு செய்தது ஆகியவற்றின் தொடர்பில் இணையத்தில் இனவாதக் கருத்துகள் தெரிவிக்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறை ஐவரை அடையாளம் கண்டு அவர்களை விசாரித்துள்ளது.

அந்த ஐவரும் 29லிருந்து 66 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று காவல்துறை புதன்கிழமை (செப்டம்பர் 9) தெரிவித்தது.

“இணையத்தில் தெரிவிக்கப்பட்ட அந்தக் கருத்துகள் தொடர்பில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு அவற்றுக்குப் பொறுப்பானவர்களை அடையாளம் காண்போம்,” என்று காவல்துறை கூறியது.

“இனரீதியான உணர்வுகளைப் புண்படுத்தக்கூடிய அல்லது வெறுப்பைத் தூண்டக்கூடிய, இனங்களுக்கிடையே கசப்பான உணர்வை எழுப்பக்கூடிய நடத்தையைக் காவல்துறை மிகுந்த அக்கறையுடன் கையாளும்,” என்றும் காவல்துறை குறிப்பிட்டது.

விசாரணை தொடர்வதால் தனிப்பட்ட நபர்களைப் பற்றித் தங்களால் தகவல் அளிக்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

‘இனவாதப் போக்குக்கு இடமில்லை’

நேப்பாள வெள்ளம், ஏர் இந்தியாவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முதலீடு செய்தது ஆகியவற்றின் தொடர்பில் பதிவிடப்பட்ட இனவாதக் கருத்துகள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்திவருவதாக மூத்த அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்ததைத் தொடர்ந்து காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த இரு விவகாரங்களிலும் இணையத்தில் பதிவிடப்பட்ட இனவாதக் கருத்துகளுக்கு வெட்கப்படவேண்டும் என்றும் அவை மிகவும் மோசமானவை, அறவே ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் திரு சண்முகம் கூறியிருந்தார்.

இந்திய சமூகத்துக்கு எதிரான அந்தக் கருத்துகளைப் பற்றிப் பேசிய பிரதமர் லாரன்ஸ் வோங், எந்த சமூகத்துக்கும் எதிரான பாரபட்சமான போக்கும் ஏற்றுக்கொள்ளப்படுவதையோ சாதாரணமாக்கப்படுவதையோ சிங்கப்பூர் என்றும் அனுமதிக்கக்கூடாது என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 6) ஃபேஸ்புக்கில் எடுத்துரைத்தார். சிங்கப்பூரில் உள்ள வேறுபாடுகளைத் தவறாகப் பயன்படுத்திக்கொள்ள என்றும் சிலர் முயற்சி செய்வர், ஆனால் அவற்றுக்கு நாடு எப்படி நடந்துகொள்கிறது என்பது சிங்கப்பூரர்களின் கைகளில்தான் இருக்கிறது என அவர் குறிப்பிட்டார்.

இணையத்தில் வெறுப்பைத் தூண்டும் எல்லா கருத்துகளையும் தடுக்க முடியாது என்றாலும் அவற்றை நம்மால் மறுக்க முடியும் என்றும் அவற்றுக்கு மேலும் இடம் கொடுத்து நியாயப்படுத்துவதை நிராகரிக்க முடியும் என்றும் திரு வோங் சுட்டினார்.

வெறுப்பை நிராகரிக்குமாறு மூத்த அமைச்சர் லி சியன் லூங்கும் ஞாயிற்றுக்கிழமை ஃபேஸ்புக் வாயிலாக சிங்கப்பூரர்களைக் கேட்டுக்கொண்டார். நேப்பாள திடீர் வெள்ளப் பேரிடர் தொடர்பில் இந்திய சமூகத்தைக் குறிவைத்து இனவாத, வெறுப்பைத் தூண்டும் கருத்துகள் வெளியிடப்பட்டது மிகவும் கவலை தருவதாக திரு லீ தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி நேப்பாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிங்கப்பூரர்கள் ஒன்பது பேரை இதுவரை காணவில்லை.

குறிப்புச் சொற்கள்