சிங்கப்பூரில் உள்ளவர்கள் தத்து எடுப்பதற்காக இந்தோனீசியாவிலிருந்து குழந்தைகள் கடத்தப்படுவதாகக் கூறப்படுவதை மறுஆய்வு செய்வதன் தொடர்பில் இரு நாட்டு அரசாங்கங்களும் இணைந்து பணியாற்றி வருகின்றன.
இதனால் பாதிக்கப்பட்ட, தத்தெடுத்த பெற்றோரைத் தொடர்புகொண்டு அதிகாரிகள் நிலைமையை விளக்கிக் கூறுவதாகச் சிங்கப்பூர் உள்துறை அமைச்சும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் தெரிவித்துள்ளன. இரு அமைச்சுகளும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) இதன் தொடர்பில் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன.
மேற்கு ஜாவாவில் செயல்படுவதாகக் கூறப்படும் குழந்தைக் கடத்தல் கும்பலிடம் இரு நாட்டுக் காவல்துறையினரும் விசாரணை நடத்துவதாகக் கடந்த ஆண்டு (2025) செப்டம்பரில் இந்தோனீசிய ஊடகங்கள் தெரிவித்திருந்தன. இந்தோனீசியக் காவல்துறையும் சமுதாய விவகார அமைச்சும் விசாரித்து அறிந்துகொண்ட தகவல்களைப் பகிரும்படிச் சிங்கப்பூர்க் காவல்துறையும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் கோரியிருந்தன.
சிங்கப்பூரில் தத்து எடுக்க கொண்டுவரப்பட்ட பிள்ளைகள் தொடர்பான சூழலைச் சரிபார்க்கும்படிக் கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் தெரிகிறது. சிங்கப்பூர்க் காவல்துறை இந்தோனீசியக் காவல்துறையின் விசாரணையில் உதவிவருவதாகவும் கூட்டறிக்கை கூறுகிறது. விசாரணை நீடிப்பதால், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சிங்கப்பூர்க் குடியுரிமை விண்ணப்பங்கள் தொடர்பான நடைமுறைகள் தாமதமானதாகக் கூறப்பட்டது. அக்குழந்தைகளைத் தத்து எடுக்கும் பெற்றோரிடம் இதுபற்றி விளக்கமளிக்கக் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையமும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் தொடர்பில் உள்ளன.
அந்தப் பெற்றோரின் கவலை குறித்து அறிந்திருப்பதாகவும் இந்த விவகாரத்திற்கு விரைந்து தீர்வுகாணப்படுவதை உறுதிசெய்ய, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாகவும் இரு அமைச்சுகளும் தெரிவித்தன. சம்பந்தப்பட்ட குழந்தைகளின் நலனை உறுதிசெய்யவும் அமைச்சுகள் பணியாற்றிவருகின்றன.
இடைப்பட்ட காலத்தில் நிதியுதவி தேவைப்படும் குடும்பங்கள் சமூகச் சேவை அலுவலகத்திடம் உதவி கோரலாம் என்று அமைச்சுகள் குறிப்பிட்டுள்ளன.
மேல்விவரங்களுக்குக் காவல்துறையையும் இரு அமைச்சுகளையும் தொடர்பு கொண்டிருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

