சிங்கப்பூர் அதிக முதியோரைக் கொண்ட சமுதாயமாக உருவெடுத்து வருகிறது.
இந்த ஆண்டுக்குள் (2026) சிங்கப்பூரின் மக்கள்தொகையில் 20 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் 65 வயதை எட்டியவர்களாக இருப்பார்கள். ஒருவர் சுதந்திரமாகச் சொந்த வீட்டில் நடமாடுவதும் வாழ்வதும் முக்கிய விவகாரமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
முதியோர் குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் இருக்க விரும்புகின்றனர். ஆனால் நிதி, பராமரிப்புப் போன்றவற்றில் அவர்களுக்கு உதவி தேவைப்படலாம். அது அவர்களுக்குச் சவால்களாக மாறக்கூடும்
அத்தகைய சவால்களில் சிலவற்றைக் கையாள முறையான நிதித் திட்டத்தை வகுப்பது கைகொடுக்கும் என்று நிதி நிபுணர்கள் கூறினர்.
பணத்திற்கு அப்பால், நிதித் திட்டம் என்பது முதுமையடைவதிலும் சுதந்திரமாக வாழ்வதிலும் உள்ள சமுதாய, உணர்வு ரீதியான அம்சங்களைக் கவனத்தில்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கருத்துரைத்தனர்.
எந்த நிதித் திட்டத்திற்கும் தேசிய ஓய்வூதியத் திட்டமான மத்திய சேம நிதியே (சிபிஎஃப்) முக்கிய ஆதாரமாக இருக்கும்.
எந்தவோர் ஓய்வுக்காலத் திட்டத்திற்கும் மத்திய சேமநிதிச் சேமிப்பே அடித்தளமாக அமையும் என்று டிபிஎஸ் வங்கியின் நிதித் திட்ட விழிப்புணர்வுப் பிரிவுத் தலைவர் லோர்னா டான் கூறினார். ஓய்வுக்காலத்தில் ஒருவரின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற அது உதவும் என்றார் அவர்.
அதில் சேமிக்கப்படும் தொகை, ‘சிபிஎஃப் லைஃப்’ காப்புறுதிக் கட்டணத்தைச் செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படும்.
தொடர்புடைய செய்திகள்
முதியோர் அவர்கள் வாழும் காலம்வரை மாதாந்தர வழங்குதொகையைப் பெறுவர் என்றும் போதிய சேமிப்பு இருப்பதை அது உறுதிசெய்யும் என்றும் திருவாட்டி டான் கூறினார்.
மத்திய சேமநிதியின் சாதாரணக் கணக்கில் இருக்கும் தொகைக்குக் குறைந்தது 2.5 விழுக்காட்டு வட்டியும் சிறப்புக் கணக்கில் இருக்கும் தொகைக்குக் குறைந்தது 4 விழுக்காட்டு வட்டியும் கிடைக்கும். அதனால் எந்தவொரு நிதித் திட்டத்தையும் பார்க்கும்போது சேம நிதி என்பது சிக்கல் குறைந்தது என்று திருவாட்டி டான் சொன்னார்.
சேம நிதிக்குள் இருக்கும் மெடிசேவ் மருத்துவச் சேமிப்புக் கணக்கை, மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவதற்கோ ஒரே நாளில் முடிக்கப்பட்டு வீடு திரும்பக்கூடிய அறுவை சிகிச்சைக்கோ பயன்படுத்தலாம். தடுப்பூசி, மருத்துவப் பரிசோதனை போன்றவற்றுக்கும் அது கைகொடுக்கும்.
மருத்துவச் செலவுகளைத் திட்டமிடுவதில் மெடிசேவ் முக்கியப் பங்களிப்பதாக மேனுலைஃப் சிங்கப்பூரின் தலைமை நிர்வாக அதிகாரி பெனோய்ட் மெஸ்லெட் கூறினார்.
வயதாக ஆகக் கட்டணம் அதிகரிக்கும். உயர் ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற நாள்பட்ட பிரச்சினைகள் வரக்கூடும் என்பதே அதற்குக் காரணம்.
மருத்துவக் கட்டணங்களைக் குறைக்கப் போதிய காப்புறுதித் திட்டங்கள் உதவியாக இருக்கும் என்று திருவாட்டி டான் கூறினார். மெடிஷீல்டு லைஃப் திட்டத்திற்கும் ஒருங்கிணைந்த மருத்துவக் காப்புறுதித் திட்டத்திற்கும் இடையில் எதைத் தெரிவுசெய்வது என்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது என்றார் அவர்.
நீண்டகால அடிப்படையில் தனியார் காப்புறுதித் திட்டத்தைப் பெறுவதற்குப் போதிய வசதி உள்ளதா என்பதையும் ஒருவர் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
நிதித் திட்டமிடலில் நீண்டகாலப் பராமரிப்புக் காப்புறுதியையும் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அடிப்படை கேர்ஷீல்டு லைஃப் திட்டம், ஒருவர் அன்றாட வாழ்க்கையில் ஆறு நடவடிக்கைகளில் குறைந்தது மூன்றைச் செய்ய முடியாமல் போனால் உதவி வழங்கும்.
உடை உடுத்திக்கொள்ளுதல், குளித்தல், கழிப்பறைக்குச் செல்லுதல், நடமாடுதல், உணவு அருந்துதல், படுக்கையிலிருந்து நாற்காலிக்கு அல்லது சக்கரநாற்காலிக்கு மாறுதல் ஆகியவையே அந்த ஆறு நடவடிக்கைகள்.
திட்டம் சென்ற ஆண்டு (2025) ஆகஸ்ட்டில் மேம்படுத்தப்பட்டது. அதன்படி மாதாந்தர வழங்குதொகை இவ்வாண்டில் $689க்கு அதிகரிக்கப்படும். அது ஆண்டுக்கு 4 விழுக்காடு எனும் அடிப்படையில் உயர்த்தப்பட்டு 2030ல் $806யை எட்டும்.
முதியோருக்கு இல்லப் பராமரிப்புச் சேவைகள் இன்னும் எளிதாகக் கிடைப்பதை உறுதிசெய்வதில் வாழ்நாள் காப்புறுதித் துறைக்கு முக்கியப் பங்கிருப்பதாக இங்குள்ள வாழ்நாள் காப்புறுதிச் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் சான் வாய் கிட் கூறினார்.

