காவல்துறை அதிகாரிபோல் நடித்து மோசடிக்கு உதவியவருக்கு சிறை, பிரம்படி

காவல்துறை அதிகாரிபோல் நடித்து மோசடிக்கு உதவியவருக்கு சிறை, பிரம்படி

படம்: பெரித்தா ஹாரியான்

01 Oct 2026 - 8:55 pm

2 mins read

காவல்துறை அதிகாரிபோல் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு, மோசடியில் சிக்கியோரிடம் இருந்து பணம், விலைமதிப்புள்ள பொருள்கள் போன்றவற்றை பெற்றுக்கொண்ட ஆடவருக்கு சிறையும் பிரம்படியும் தண்டனையாக விதிக்கப்பட்டது.

சட்டத்துக்கு புறம்பான செயல்களால் பெற்ற வெகுமதியைக் கையாண்ட குற்றத்தை ஒப்புக்கொண்ட சுகுமாறன் மோகன் என்ற 21 வயது மலேசிய ஆடவருக்கு வியாழக்கிழமை (அக்டோபர் 1) மூன்று ஆண்டுகள் இரண்டு வாரம் சிறையும் இரண்டு பிரம்படிகளும் நீதிமன்றத்தில் தண்டனையாக வழங்கப்பட்டது.

அனைத்துலகக் குற்றக் கும்பலின் கையாளாக அவர் செயல்பட்டுள்ளார். அதன்படி காவல்துறை அதிகாரியாக சில நேரங்களில் ஆள்மாறாட்டம் செய்து, ரொக்கத்தையும் மதிப்புள்ள பொருள்களையும் மோசடிக்கு ஆளான நான்கு நபர்களிடம் அவர் பெற்றுள்ளார்.

அரசாங்க அதிகாரிபோல் நடிக்கும் ஆள்மாறாட்ட மோசடியில் அந்த நான்கு பெண்களும் ஏமாந்ததோடு, ஏறத்தாழ $200,000 வரை இழந்துள்ளனர்.

பாதிப்படைந்த அந்த நால்வரும் 38 முதல் 73 வயதுக்குட்பட்டவர்கள் என்று அரசாங்கத் துணை வழக்கறிஞர் மெத்தியு சூ தெரிவித்தார்.

சுகுமாறனிடம் அப்பெண்களில் ஒவ்வொருவரும் $10,029 முதல் $132,206 வரை கொடுத்துள்ளனர்.

இவ்வாண்டு ஜனவரி 6ஆம் தேதிக்கு முன், வேலை தேடிக்கொண்டிருந்த சுகுமாறன், மற்றொரு மலேசியரான கதிரேசன் கிருஷ்ணன் என்ற 28 வயது ஆடவரைச் சந்தித்தார். அந்த ஆடவர் சுகுமாறனுக்கு ஒரு சிங்கப்பூர் நிறுவனத்தின் பொருள்களையும் பணத்தையும் விநியோகிக்கும் வேலையை வாங்கித் தருவதாகக் கூறினார்.

கதிரேசனின் வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது.

மாதம் S$625 (மலேசிய ரிங்கிட் 2,000) சம்பளம் தரப்படும் என்பதால் சுகுமாறன் அந்த வேலையை ஏற்றுக்கொண்டார். டெலிகிராம் செயலியில் ‘ஜேக்’ என்ற பெயருடைய முதலாளி கதிரேசனுக்கு வேலை குறித்த விவரங்களைத் தருவார் என்று சுகுமாறனிடம் கூறப்பட்டது.

பொய்கள் சார்ந்து சந்தேகப்படும்படியாக இருந்தபோதும் செய்த வேலையின் முழு விவரங்களை சுகுமாறன் அறிந்துகொள்ளவில்லை என்று நீதிமன்ற ஆவணங்களில் விவரிக்கப்பட்டது.

ஜனவரி 6 முதல் 28ஆம் தேதிவரை நான்கு முறை அவர் சிங்கப்பூருக்குள் நுழைந்து, பெண்களிடம் ரொக்கத்தையும் பொருள்களையும் பெற்றுக்கொண்டு அடையாளம் தெரியாதோரிடம் அவற்றைக் கொடுத்துவிட்டு மீண்டும் மலேசியாவுக்குத் திரும்பிவிடுவார்.

இறுதியாக அப்பெண்களில் ஒருவர் புகார் அளித்த பிறகு, சுகுமாறன் கைதானார்.

குறிப்புச் சொற்கள்