சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதிகள் 4.6% குறைந்தன

2 mins read
77de51af-15a2-4a67-b750-12cc3ef3d31b
ஆண்டு அடிப்படையில் சிங்கப்பூரிலிருந்து சீனாவுக்கு அனுப்பப்பட்ட ஏற்றுமதிகள் 22.3 விழுக்காடு சரிந்தன. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதிகள், கடந்த அக்டோபர் மாதம் குறைந்தன.

அக்டோபரில் முக்கிய ஏற்றுமதிகள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவில்லை என்று எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் (Enterprise Singapore) அமைப்பு குறிப்பிட்டது.

ஆண்டு அடிப்படையில் எண்ணெய் சாரா ஏற்றுமதிகள் 4.6 விழுக்காடு குறைந்தன என்று திங்கட்கிழமையன்று (நவம்பர் 18) எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் வெளியிட்ட புள்ளி விவரங்களில் தெரிய வந்தது. அதோடு, செப்டம்பர் மாதம் பதிவான எண்ணெய் சாரா ஏற்றுமதிகளின் வளர்ச்சியும் மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு 0.9 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அவ்விகிதம் முதலில் 2.7 விழுக்காடாகக் கணிக்கப்பட்டது.

காலத்துக்கேற்ப சரிசெய்யப்பட்ட பிறகு மாத அடிப்படையில் எண்ணெய் சாரா ஏற்றுமதிகள் 7.4 விழுக்காடு சரிந்தன. கடந்த செப்டம்பரில் அவ்விகிதம் 0.6 விழுக்காடு குறைந்தது.

மாத அடிப்படையில் கணக்கிடப்படும் வளர்ச்சி விகிதம், வர்த்தகம் தொடர்பிலான போக்கை மேலும் துல்லியமாகக் கணிக்க வகைசெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபரில் மின்சாரப் பொருள்களின் ஏற்றுமதிகள் ஆண்டு அடிப்படையில் 2.6 விழுக்காடு கூடின. செப்டம்பர் மாதம் இப்பிரிவில் ஏற்றுமதிகள் 0.7 விழுக்காடு குறைந்தன.

பகுதி மின்கடத்தித் துறையில் ஏற்றுமதிகள் 16.6 விழுக்காடு அதிகரித்தன. இப்பிரிவில் இடம்பெறும் ஏற்றுமதிகள், மொத்த எண்ணெய் சாரா ஏற்றுமதிகளில் சுமார் 12 விழுக்காட்டுப் பங்கு வகிக்கின்றன.

அதேவேளை, மின்சாரம் சாரா பொருள்களின் ஏற்றுமதிகள் கடந்த அக்டோபரில் 6.7 விழுக்காடு சுருங்கின. செப்டம்பரில் அத்துறையின் ஏற்றுமதிகள் 1.4 விழுக்காடு வளர்ச்சியடைந்தன.

ஆண்டு அடிப்படையில் அக்டோபர் மாதம், சிங்கப்பூர் ஆக அதிகமாக வர்த்தகத்தில் ஈடுபடும் சந்தைகளில் ஏற்றுமதிகள் சுருங்கின. அவற்றில் சீனாவுக்கான ஏற்றுமதிகள்தான் ஆக அதிகமாகப் பாதிக்கப்பட்டன.

ஆண்டு அடிப்படையில் சிங்கப்பூரிலிருந்து சீனாவுக்கு அனுப்பப்பட்ட ஏற்றுமதிகள் 22.3 விழுக்காடு சரிந்தன.

சீனா, சிங்கப்பூரின் ஆக அதிகமாக ஏற்றுமதி செய்யும் சந்தையாகும்.

ஜப்பானுக்கான ஏற்றுமதிகள் 22.3 விழுக்காடு சரிந்தன. ஐரோப்பிய வட்டாரம், ஹாங்காங் ஆகியவற்றுக்கான ஏற்றுமதிகளும் பெரிய அளவில் குறைந்தன.

அதேவேளை, தைவானுக்கான ஏற்றுமதிகள் ஆண்டு அடிப்படையில் 20.4 விழுக்காடு கூடின.

குறிப்புச் சொற்கள்