செண்பக விநாயகர் கோயிலின் ஆவணப்படம் வெளியீடு

தொன்றுதொட்டு தழைத்து வந்துள்ள கலாசார, சமய மரபு இளையர்களைச் சென்றடைய வேண்டும் என்பது ஏற்பட்டாளர்களின் விருப்பம்

செண்பக விநாயகர் கோயிலின் ஆவணப்படம் வெளியீடு

படம்: கி.ஜனார்த்தனன்

27 Apr 2025 - 7:32 pm

2 mins read

ஸ்ரீ செண்பக விநாயகர் கோயிலின் மரபை ஆவணப்படுத்தும் திரைப்படத்தைச் சிங்கப்பூர் இலங்கைத் தமிழர் சங்கம் வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூரில் பத்தொன்பதாம் நூற்றாண்டின்போது கட்டப்பட்ட அந்த ஆலயத்தைப் பற்றிய ஆவணப்படம், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் கலாசார நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) திரையிடப்பட்டது.

‘சிங்கப்பூரில் புனிதப் பொதுவெளி’ ( A Sacred Space in Singapore) என்ற தலைப்பைக் கொண்டுள்ள அந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 600 பேர் வருகையளித்த இந்நிகழ்ச்சியில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

2027ன் முதலாம் காலாண்டின் நடைபெறவுள்ள ஸ்ரீ செண்பக விநாயகர் கோயிலின் திருக்குடமுழுக்கிற்காக நிதி திரட்ட இந்நிகழ்ச்சி முற்படுகிறது.

கோயிலின் கலைப்பள்ளி மாணவர்களின் வில்லுப்பாட்டு ஆலயத்தின் தெய்வத்தை மையப்படுத்தி, இலங்கைத் தமிழர்கள் சிங்கப்பூரில் செய்ய இயன்ற சாதனைகளுக்காகக் கடவுளுக்கு நன்றி கூறும் விதமாக அமைக்கப்பட்டது.

அத்துடன் ‘வேர்களும் பயணப் பாதைகளும்: சிங்கப்பூரின் இலங்கைத் தமிழர்கள்’ என்ற பதாகை வடிவிலான கண்காட்சிக் கூடமும் நிகழ்ச்சி வளாகத்தில் இடம்பெற்றது.

1923ஆம் ஆண்டு முதல் ஸ்ரீ செண்பக விநயாகர் ஆலயத்தைப் பொறுப்பேற்று நடத்தி வந்த சிங்கப்பூர் இலங்கைத் தமிழர் சங்கம், நூறாண்டுகளைக் கடந்து தங்கள் மரபு தழைப்பதைக் கண்டு நன்றியுணர்வுடன் இருப்பதாகச் சங்கத்தின் தலைவர் அசோகா மார்க்கண்டு தெரிவித்தார்.

“2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள திருக்குடமுழுக்கிற்கான நிதியாதரவு மக்களிடமிருந்து வருகிறது. கோயிலின் திருமண மண்டபமும் சைவ சமய வகுப்பிடமும் மேலும் பொலிவு பெறவுள்ளன,” என்று திரு மார்க்கண்டு கூறினார்.

இலங்கைத் தமிழர் சங்கம் கோயிலுக்குப் பொறுப்பு என்றாலும் கோயிலும் அதன் கலாசார, ஆன்மிகச் செறிவும் எல்லோர்க்குமானது என்று ஆலயத் தலைவர் இந்திரயோகன் யோகராஜா தமிழ் முரசுக்கு அளித்த நேர்காணலில் கூறினார்.

“பலதரப்பு இந்தியர்களுக்கும் இந்தியர் அல்லாத பக்தர்களுக்கும் ஆன்மிக நிழல்தரும் நம் ஆலயத்தின் மாண்பு இளையர்களுக்கும் தெரியவேண்டும். இதற்கான படிநிலையாக இந்த ஆவணப்படம் விளங்குகிறது,” என்று அவர் கூறினார்.

கண்காட்சிகளுக்கு இளையர்கள் வழிகாட்டிகளாக நியமிக்கப்பட்டதைச் சுட்டிய திரு மார்க்கண்டு, இளையர்கள் கூடுதலான நிர்வாகப் பொறுப்புகளை ஏற்க விரும்புவதாகக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்