தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘சிங்கப்பூரர்கள் அனைவருக்காகவும் மேம்பட்ட சிங்கப்பூரை உருவாக்கும் மக்கள் கட்சியாக விளங்குவோம்’

2 mins read
மசெக மாநாட்டில் கட்சியின் துணைத் தலைமைச் செயலாளர் லாரன்ஸ் வோங்
4fcfe69a-7b5f-49ee-8da0-a344a4a81029
மக்கள் செயல் கட்சியின் துணைத் தலைமைச் செயலாளரும் பிரதமருமான லாரன்ஸ் வோங், கட்சியின் மாநாட்டில் நவம்பர் 24 ஆம் தேதி உரையாற்றினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மக்கள் கட்சியாக, செயல்திறன் மிக்க கட்சியாக, மேம்பட்ட சிங்கப்பூரைக் கட்டியெழுப்புவதில் மக்கள் செயல் கட்சி (மசெக) தொடர்ந்து செயலாற்றும் என்று அக்கட்சியின் துணை தலைமைச் செயலாளரும் பிரதமருமான லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

கட்சியின் மாநாட்டில் நவம்பர் 24 ஆம் தேதி உரையாற்றிய திரு வோங், “பொதுத் தேர்தலில் மக்கள் ஆதரவை மசெக நாடுகிறது. இருப்பினும் கட்சி எப்போதும் மக்களின் பேராதரவாளராகத் திகழும், “ என்று சொன்னார்.

இது பொதுத் தேர்தலுக்குமுன் நடைபெறும் கட்சியின் கடைசி மாநாடு என்று குறிப்பிட்ட திரு வோங், “செயல்களால் மக்களின் நம்பிக்கையை, மனங்களை வெல்லப் போராட வேண்டும்,” என்று மாநாட்டில் திரண்டிருந்தோரைக் கேட்டுக்கொண்டார்.

கடந்த பதினைந்து தேர்தல்களிலும் மக்களின் ஆதரவை வென்ற மசெக, வரவிருக்கும் பொதுத் தேர்தலில் முன்னெடுக்க வேண்டிய முக்கிய அம்சங்களைத் தமது உரையில் அவர் பட்டியலிட்டார்.

“சிங்கப்பூரர்கள், மசெக அரசாங்கம் அமைத்து, ஆட்சி செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றனர். அதற்காக அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்.  இருப்பினும், நாடாளுமன்றத்தில் அதிக எதிர்க்குரல்களும் வேண்டும் என்றும் அவர்கள் நினைக்கின்றனர். 

“அதிக அளவிலான எதிர்க்குரல்கள் ஒலிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால், நிலையான, நல்ல அரசாங்கத்தை இழக்கக்கூடிய அபாயத்தை நாம் எதிர்நோக்குகிறோம்,” என்றார் திரு வோங்.

மசெக வெற்றி பெற்று நிலையான அரசாங்கம் அமைந்திடும் என்று அசட்டையாக இருந்துவிட வேண்டாம் என்று கட்சியினரிடம் வலியுறுத்திய அவர், சிங்கப்பூரர்களின் நம்பிக்கையை வென்று, சக சிங்கப்பூரர்களுக்குச் சேவையாற்ற கடின உழைப்பு முக்கியம் என்பதைச் சுட்டினார்.

தலைமைத்துவத்தில் பல மாற்றங்களைக் கட்சி நடைமுறைப்படுத்தியுள்ளதாகச் சொன்ன திரு வோங், “பின்னால் இருந்து இயங்குவதைக் காட்டிலும், நம் கொள்கைகளை மக்களுக்கு விளக்கவும் சிங்கப்பூரர்களுக்கான அக்கறைக்குரிய அம்சங்களை நாமும் கவனத்தில் கொள்கிறோம் என்று அவர்களுக்கு எடுத்துரைப்பதற்கும் முனைப்புடன் செயலாற்றுவது முக்கியம்,” என்று வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்