குடும்ப வன்முறைக்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டை ஆதரிக்கும் வகையில், தேசிய வன்முறை எதிர்ப்பு, பாலியல் துன்புறுத்தல் உதவிச்சேவை எண்ணை பொதுமக்கள் தங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்ய அரசாங்கம் ஊக்குவிக்கிறது.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு ‘ஒன்றிணைந்து மௌனத்தை உடைப்போம்’ என்ற புதுப்பிக்கப்பட்ட விழிப்புணர்வு இயக்கத்தை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 26) தொடங்கியது.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டுவரும் ‘மௌனத்தை உடைப்போம்’ திட்டத்தின் தொடர்ச்சியாக இந்த இயக்கம் செயல்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாமல், குடும்பத்தினரையும் சமூகத்தினரையும் வன்முறைக்கு எதிராகப் பேச ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்.
2021ல் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய உதவிச்சேவை எண், 24 மணி நேர ஒருங்கிணைந்த சேவையை வழங்கி, குடும்ப வன்முறை, புறக்கணிப்பு, பாலியல் வன்முறை தொடர்பான புகார்களை எளிதாக அளிக்க உதவுகிறது.
நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் உள்ள ‘அவர்ஸ்பேஸ்@72’ அறையில் நடைபெற்ற இந்த இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சியில், குடும்ப வன்முறையைத் தடுப்பதில் முக்கியப் பங்காற்றும் சமூக, துறைசார் பங்காளர்கள் ஒன்றிணைந்தனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணை அமைச்சர் கோ பெய் மிங், ஒவ்வொரு குடும்ப வன்முறைச் சம்பவமும் அளவுக்கு அதிகமானது என்பதை வலியுறுத்தினார்.
வலுவான குடும்பங்களே ஒரு சமூகத்தின் அடித்தளம் என்றும் வன்முறை தனிமனிதர்களை மட்டுமல்லாமல் முழுச் சமூகத்தையும் பலவீனப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
மேலும், அமைச்சின் 2023 குடும்ப வன்முறைப் போக்குகள் அறிக்கையைச் சுட்டிக்காட்டிய அவர், 2021 முதல் 2023 வரை வன்முறைக் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார். இது, பாதிக்கப்பட்டவர்களும் பொதுமக்களும் வன்முறைக்கு ஆளானவர்களை அடையாளம் கண்டு, புகாரளித்து உதவி நாடுவதில் அதிக விழிப்புணர்வு கொண்டிருப்பதைக் காட்டுவதாகச் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
“குடும்ப வன்முறை மிகவும் சிக்கலான பிரச்சினை. இதைத் தீர்க்க சமூகத்தின் ஒன்றிணைந்த முயற்சி தேவை.
“உதவிச்சேவை எண்ணைப் பதிவிறக்கம் செய்து, மற்றவர்களையும் அவ்வாறு செய்ய ஊக்குவிப்பதன் மூலம், வன்முறையின் சுழற்சியை உடைப்பதில் நாம் ஒவ்வொருவரும் ஒரு பங்கை வகிக்க முடியும்,” என்றும் திரு கோ கூறினார்.
இயக்கத்தில் பங்காளியாக உணவக நிறுவனமான ‘கோஃபு’ இணைந்துள்ளது.
அந்நிறுவனத்தைச் சேர்ந்த 77 மேலாளர்களுக்கு குடும்ப வன்முறைக்கு ஆளானவர்களை எளிதில் அடையாளம் காணும் வகையில், உரிய இடங்களில் புகாரளிக்க பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘கோஃபு’, ‘ஹேப்பி ஹாக்கர்’ உணவகங்களில் வழங்கப்படும் கோப்பைகளில் தேசிய உதவிச்சேவை எண் அச்சிடப்பட்டுள்ளது.
2020 முதல் குழந்தை பராமரிப்பு, கல்வி உட்பட பல்வேறு துறைகளில் 11,000க்கும் மேற்பட்டோர் இதேபோன்ற பயிற்சிகளைப் பெற்றுள்ளனர்.
நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியுடன் இணைந்து, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு 2022 முதல் அத்தொழிற்கல்லூரி வளாகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த மாணவர்களுடன் 11 திட்டங்களில் செயல்பட்டு வருகிறது.
தொடக்க நிகழ்ச்சியில் மிகைமெய் (Augmented Reality) விளையாட்டுகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரகசிய வளங்களை வழங்கும் ‘டெலிகிராம்’ செயலி ‘போட்’கள் உள்ளிட்ட நான்கு மாணவர் திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக, எழுத்தாளரும் ஆதரவாளருமான டனியா அடீரா, 33, தனது குழந்தைப் பருவத்தில் குடும்ப வன்முறையை அனுபவித்து, அதிலிருந்து மீண்ட தனது தனிப்பட்ட பயணத்தைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார்.
பள்ளி ஆசிரியரிடம் அவர் அளித்த முதல் புகார், அமைச்சின் குழந்தைப் பாதுகாப்பு சேவையின் தலையீட்டுக்கு வழிவகுத்தது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குமுன் திருவாட்டி டனியாவுக்கு மனநல ஆதரவு வழங்கிய சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் உளவியல் ஆய்வு மற்றும் மதிப்பீட்டு இயக்குநரும், மூத்த மருத்துவ உளவியலாளருமான டாக்டர் விவியன் எங்குடன் அவர் இன்றும் நெருங்கிய நட்பைத் தொடர்கிறார்.
இன்று, பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கு டனியா உத்வேகம் அளித்து வருகிறார். அவரது அனுபவங்களைப் பற்றிய நினைவுக்குறிப்புப் புத்தகம், ‘ஈவன் இன் சைலன்ஸ்’ இந்த ஆண்டு அதன் 10வது ஆண்டுநிறைவைக் கொண்டாடுகிறது.
“எந்தவொரு தவற்றையும் சாதாரணமாக ஏற்றுக்கொள்ளாதீர்கள். அதற்கு எதிராகக் குரல் எழுப்புங்கள். உங்களுக்கு ஆபத்து என்று தோன்றாத ஒன்று மற்றொருவருக்கு ஆபத்தை விளைவிக்கலாம்.
“குடும்ப வன்முறையைச் சமாளிப்பது சமூக சேவைகளின் பணி மட்டுமன்று, அது நம் அனைவரின் பொறுப்பும் ஆகும். பாதுகாப்பை மெத்தனமாகக் கருதாமல், ஆழமான மதிப்பாக மனத்தில்கொள்ளுங்கள்,” என்றார் திருவாட்டி டனியா.