பத்தாண்டுத் தேடல்; ஈராண்டுத் திட்டப் பணி; குறளின் குரலை அனைவருக்கும் எடுத்துச்செல்ல வேண்டும் என்கிற தணியாத தமிழ்த் தாகம்; அவற்றின் விளைவாக இளம் இசைக் கலைஞர்கள் லிடியன் நாதஸ்வரம், அமிர்தவர்ஷினி கைவண்ணத்தில் உருவாக்கம் கண்டுள்ளது குறளிசைக்காவியம்.
குறளிசைக்காவியத்தின் பாகம்-8 சிங்கப்பூரில் சனிக்கிழமை (மார்ச் 14) வெளியீடு காண்கிறது. அதற்காக லிடியன் குழுவினர் சிங்கப்பூர் வந்துள்ளனர்.
சாங்கி விமானநிலையத்தில் இறங்கியதும் தமிழ் மொழியுடன் வரவேற்கும் சிங்கப்பூரில், தமிழ்ச் சொந்தங்கள் முன்னிலையில் இதனை வெளியிடுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று தமிழ் முரசிடம் கூறினார் லிடியன் நாதஸ்வரம், 20.
தமிழ்நாடு, இலங்கை, ஆஸ்திரேலியா, துபாய், பிரான்ஸ் எனப் பல நாடுகளில் ஏற்கெனவே ‘குறளிசைக்காவியம்’ வெளியீடு கண்டுள்ளது. சிங்கப்பூர்ப் பாடகர்களும் இந்த இசைத் தொகுப்பில் பாடியுள்ளனர்.
1330 குறள்களுக்கான இசை; 25க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1000த்துக்கும் மேற்பட்ட பாடகர்கள்; நூற்றுக்கணக்கான இசை வடிவங்கள்; தனித்துவமான இசைப் பரிமாணங்கள்; 3 வயது மழலை தொடங்கி 94 வயதுக் கலைஞர் உள்ளிட்டோரின் குரல்களில் குறள்கள் எனக் குறளிசைக்காவியம் பல்வேறு சாதனைகளை ஏந்திவருகிறது.
தமிழ் மொழியின் இசைத் தூதுராக உலக அரங்கில் முத்திரை பதித்துவருவது பற்றிக் கேட்டோம்.
‘‘மொழியின் அடையாளமாக, இளம் இசைக்கலைஞராகத் தமிழிசையை எல்லைகள் கடந்தும் எடுத்துச்செல்வது என்பது மிகப் பெரிய பொறுப்பு,’’ என்று புன்னகைத்தார் லிடியன். குறள்களுக்கு இசையமைத்த காரணத்தையும் அவர் விளக்கினார்.
வள்ளுவரின் நல்லாசி என்றுமுண்டு!
‘‘திருக்குறள் என்பது வயது, இனம், மொழி என அனைத்துக்கும் அப்பாற்பட்டது. காலத்தை வென்று நிற்கும் பொக்கிஷம். தனித்துவமிக்கது.
தொடர்புடைய செய்திகள்
அவ்வகையில் அனைத்துலக அரங்கில் இசைக் கருவிகள் பலவற்றை வாசித்தாலும் தமிழுக்காகப் பங்களிக்க வழிவகுக்கும் இந்த முயற்சியில் ஈடுபட்டது நிறைவைத் தருகிறது.
‘‘திருக்குறளுக்குப் பல்வேறு உரைகள் உள்ளன. இணையவெளியில் உலாவினால் அவற்றில் பலவற்றைக் காணலாம். ஆனால் சில நேரம் அவற்றைப் படிப்பது சிரமமாக இருக்கலாம். அவ்வகையில் எல்லாருக்கும் எளிமையான வழியில் குறளின் கருத்துகளைக் கொண்டுசேர்த்திட முத்தமிழின் வடிவமான இசைத்தமிழைத் தெரிவுசெய்தோம்,’’ என்றார் லிடியன்.
குறளின் அர்த்தம் எளிய மக்களையும் சென்றடைந்துள்ளதா என்றால் அது கேள்விக்குறி. எனவே கேட்கும் எவருக்கும் குறளின் பொருள் சட்டென்று புரிந்துவிடும் அளவுக்குக் குறளிசைக்காவியம் இசையமைக்கப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிட்டார் லிடியன்.
குறளிசைக்காவியத்தின் அடுத்த 2 பாகங்களை அமெரிக்காவிலும் கனடாவிலும் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார் வர்ஷன், 47.
‘‘குறளின் இசைக்கு ஈடு எதுவுமில்லை. அவ்வகையில் தமது மகன் லிடியன், மகள் அமிர்தவர்ஷினி வடிவமைத்துள்ள இந்த இசைத்தொகுப்பு நல்கிய நினைவுகள் மறக்க முடியாதவை,’’ என்றார் அவர்.
‘‘திருக்குறள் என்பது மனனம் செய்து மதிப்பெண் பெறுவதற்காக மட்டுமல்ல. வாழ்க்கைக்கான விழுமியம் அது. அடுத்த கட்டமாகப் பள்ளிகளிலும் இந்தக் குறளிசை ஒலிக்க வேண்டும். அதற்கான முயற்சிகள் செயல்வடிவம் பெற வள்ளுவரின் ஆசி எப்போதும் துணைபுரியும்,’’ என்று நிறைவு செய்தார் லிடியன்.
குறளிசைக்காவியம் சிங்கப்பூர் வெளியீடு பாகம்-8
எங்கு?
உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்
என்று?
சனிக்கிழமை (மார்ச் 14)
நேரம்?
மாலை 5.30 மணி

