குழந்தையைக் கொடுமைப்படுத்திய ஆடவருக்கு 14 ஆண்டு சிறை

குழந்தையைக் கொடுமைப்படுத்திய ஆடவருக்கு 14 ஆண்டு சிறை

1 mins read
துன்புறுத்தல்களைக் காணொளியாக எடுத்து அவற்றைப் பார்த்து மகிழ்ந்தார்
d857f25e-c90a-44a2-846d-58b09eb59f19
சிங்கப்பூர் நீதிமன்றம் வளாகம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தனது மனைவியின் தம்பிமீது இருந்த வன்மத்தைத் தீர்த்துக்கொள்ள 32 வயது ஆடவர், அவர்களின் ஒன்பது மாதக் குழந்தையை இரக்கமின்றிக் கொடுமைப்படுத்தினார்.

அக்குற்றத்துக்காக நீதிமன்றத்தில் அவருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை புதன்கிழமை (மே 20) விதிக்கப்பட்டது.

ஆடவரின் விவரங்கள் விதிமுறைகளின்படி வெளியிட முடியாது. தண்டனையின் அங்கமாக, குழந்தையின் பெற்றோருக்கு அவர் $4,000 இழப்பீடாக வழங்கவேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.

2024ஆம் ஆண்டின் மத்தியில் குழந்தையை அவ்வப்போது பராமரிக்க ஆடவர் வாழ்ந்த வீட்டில் பெற்றோர்கள் விட்டுச்சென்றனர். அந்த வீட்டில் ஆடவரும், குழந்தையின் பாட்டியுமான அவரது தாயாரும் அவரின் உதவியாளரும் சேர்ந்து குழந்தையைப் பராமரித்தனர்.

வீட்டில் குழந்தையுடன் தனித்துவிடப்பட்ட சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கொண்டு, தமது மைத்துனர் மீதான கோபத்தை தீர்த்துக்கொள்ள ஆடவர் குழந்தையை துன்புறுத்தினார். மைத்துனர்மீது எதனால் ஆடவருக்கு வன்மம் ஏற்பட்டது என்பது நீதிமன்றத்தில் விளக்கப்படவில்லை.

தண்ணீரில் அழுத்தி மூச்சைத் திணறடித்தல், அடித்தல், கிள்ளுதல் போன்ற கொடுமைகளைச் செய்ததோடு அதனைக் காணொளியாகவும் அவர் பதிவு செய்தார்.

மைத்துனர்மீது கோபம் வரும்போதெல்லாம் குழந்தை வலியால் துடித்து அழும் காட்சிகளைக் கொண்ட அக்காணொளிகளை அவர் பார்த்து மகிழ்ந்துள்ளார்.

குழந்தையின் வளர்ச்சி பாதிப்படைந்தது

ஆடவரின் செயலால் குழந்தையின் வளர்ச்சி பாதிப்படைந்ததாக மருத்துவர்கள் சான்றுகள் வழங்கியுள்ளனர்.

குழந்தையின் வேதனையை பதிவுசெய்தது மனிதத்தன்மையற்றக் கொடூரச் செயல் என்று நீதிபதி கண்டித்து ஆடவருக்கு தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

குறிப்புச் சொற்கள்