ஈசூன் ரிங் ரோடு குடியிருப்புப் பகுதியில் கடன் முதலை துன்புறுத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 25 வயது ஆடவர் ஒருவர் பிப்ரவரி 4ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
ஜனவரி 29 அன்று காலை 11.30 மணியளவில் அந்தச் சம்பவம் குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
அந்த வீட்டின் முன்வாசல் கம்பிக் கதவிலும் உள்கதவிலும் சிவப்புச் சாயம் தெளிக்கப்பட்டிருந்தது. கடன்பெற்றவரின் துண்டுக் குறிப்பு ஒன்றும் வீட்டுக்கு வெளியே கண்டெடுக்கப்பட்டது.
தீவு முழுவதும் கடன் முதலை துன்புறுத்தல் தொடர்பான குறைந்தது 14 இதேபோன்ற சம்பவங்களில் அந்த ஆடவர் ஈடுபட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடன் கொடுப்போர் சட்டம் 2008ன் கீழ் அந்த ஆடவர் பிப்ரவரி 6ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
கடன் முதலை துன்புறுத்தல் செயலில் ஈடுபடும் முதல் முறை குற்றம் புரிபவர்களுக்கு $5,000 முதல் $50,000 வரை அபராதம் விதிக்கப்படும். ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
கடன் முதலை தொல்லை நடவடிக்கைகளை அறவே சகித்துக்கொள்ள முடியாது என்று கூறிய காவல்துறை, “வேண்டுமென்றே சொத்துகளை நாசம் செய்பவர்கள் அல்லது பொதுப் பாதுகாப்புக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று குறிப்பிட்டது.
கடன் முதலைகளிடமிருந்து விலகி இருக்கும்படியும், அவர்களுடன் எந்த வகையிலும் பணியாற்றவோ அல்லது உதவவோகூடாது என்றும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். கடன்முதலைகள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து சந்தேகித்தாலோ அல்லது அறிந்தாலோ “999” என்ற எண்ணில் காவல்துறையை அழைக்கவும்.