தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மெட்டா ஆட்குறைப்பால் சிங்கப்பூரில் பாதிப்பு

1 mins read
f7d9281b-f080-4ffb-a28e-8605e4f3da1f
ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா ஆகியவற்றைச் சேர்ந்த 10க்கு மேற்பட்ட நாடுகளின் ஊழியர்கள், ஆட்குறைப்பு குறித்து பிப்ரவரி 11ஆம் தேதிக்கும் 18ஆம் தேதிக்கும் இடையே தகவல் பெறுவர் என்று கூறப்பட்டது. - படம்: ராய்ட்டர்ஸ்

சமூக ஊடகப் பெருநிறுவனமான மெட்டா மேற்கொள்ளும் உலகளாவிய ஆட்குறைப்பு நடவடிக்கையால் சிங்கப்பூரிலுள்ள ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

‘லிங்ட்இன்’ தளத்தில் காணப்படும் பதிவுகளும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய சிலரும் இவ்வாறு கூறினர்.

மெட்டா நிறுவனத்தின் மனிதவளப் பிரிவுத் துணைத் தலைவர் ஜேனெல் கேல், நிறுவன ஊழியர்களுக்கு பிப்ரவரி மாதம் அனுப்பிய குறிப்பு கசிந்ததைத் தொடர்ந்து இந்தத் தகவல் வெளிவந்துள்ளது.

அந்தக் குறிப்பில் உலகெங்கும் மெட்டா நிறுவனம் மேற்கொள்ளவிருக்கும் ஆட்குறைப்பு குறித்த திட்டங்கள் காணப்பட்டன.

சிங்கப்பூர் நேரப்படி பிப்ரவரி 10ஆம் தேதி காலை 9 மணியிலிருந்து, அமெரிக்கா உட்படப் பெரும்பாலான நாடுகளில் ஆட்குறைப்பு செய்யப்படும் ஊழியர்களுக்கு அதுகுறித்துத் தகவல் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்தக் குறிப்பில் கூறப்பட்டிருந்தது.

ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா ஆகியவற்றைச் சேர்ந்த 10க்கு மேற்பட்ட நாடுகளின் ஊழியர்கள், ஆட்குறைப்பு குறித்து பிப்ரவரி 11ஆம் தேதிக்கும் 18ஆம் தேதிக்கும் இடையே தகவல் பெறுவர் என்றும் அதில் குறிப்பிடப்படிருந்தது.

பிப்ரவரி 11ஆம் தேதி, மெட்டாவில் பணியாற்றுவதாகக் கூறிய ‘லிங்க்டுஇன்’ பயனாளர் ஒருவர், ஆட்குறைப்பு தங்களில் பலருக்குச் சவால்மிக்கதாக அமைந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

ஆட்குறைப்பால் பாதிக்கப்பட்ட ஊழியர்களில் சிலர், சென்ற ஆண்டு மகப்பேற்று விடுப்பு எடுத்தவர்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்