போர் தொடங்கியவுடன் குடும்பத்தார் அழைத்தபோதும், அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாமல் விட்டுவிட்டார் திரு செந்தில்நாதன், 61.
“எனினும், வானில் ஏவுகணைகள் ஒன்றோடொன்று மோதியதைக் கண்களால் பார்த்தவுடன் அந்த எண்ணம் மாறியது,” என்று தமிழ் முரசிடம் கூறினார் அவர்.
சவூதி அரேபியாவில் உள்ள சிங்கப்பூரர்களை ரியாத்திலிருந்து அழைத்துவரச் சென்ற சிங்கப்பூர்க் குடியரசு ஆகாயப் படையின் A330 வகை விமானத்தில் புதன்கிழமை (மார்ச் 11) பாதுகாப்பாக தாயகம் வந்துசேர்ந்த 218 பேரில் திரு செந்தில்நாதனும் ஒருவர்.
கடந்த 16 ஆண்டுகளாக தோஹா, மஸ்கட், சிட்னி உள்ளிட்ட விமான நிலையங்களில் கட்டுமானப் பொறியாளராகப் பணியாற்றிய இவர், அண்மையில் ரியாத் விமான நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
“பிப்ரவரி 27 அன்றுதான் ரியாத் சென்றார். மறுநாளே போர் தொடங்கியதாக செய்திகள் வெளியாயின.
‘‘உடனே சிங்கப்பூருக்கு வந்துவிடுமாறு அழைத்தோம். ஆனால் இங்கு ஒன்றுமில்லை என்று கூறியவாறு அங்கேயே இருந்துவிட்டார்,” என்றார் திருமதி சுகந்தி செந்தில்நாதன், 53.
“ஆனால், எனக்கு நல்லது நடக்கும் என்ற உறுதி அதிகமாக இருந்தது. அதனால் நிச்சயம் வந்துவிடுவார் என்ற நம்பிக்கையுடன் இருந்தோம். அவரை நேரில் பார்த்துவிட்டோம்,” என்று பூரித்தனர் குடும்பத்தினர்.
கடந்த 22 ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் பணியாற்றிய திரு சதீஷ் மேனன், 49, கடந்த ஆறு வாரங்களுக்கு முன்புதான் துபாயில் உள்ள அலுவலகத்துக்குப் பணிநிமித்தம் அனுப்பப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
கடல்சார் தொழில்துறை ஊழியரான இவரை வரவேற்க இவரின் மனைவி, தாயார், மகன் ஆகியோர் சாங்கி விமான நிலையத்தில் அதிகாலைமுதல் காத்திருந்தனர்.
“இப்படியொரு சூழல் உருவாகும் என்று கனவிலும் நினைக்கவில்லை. மார்ச் 9ஆம் தேதி நாடு திரும்பத் திட்டமிட்டேன். ஆனால் அது நடக்கவில்லை. குழுவினர் நால்வருடன் தற்போது சிங்கப்பூர் வந்து சேர்ந்ததும், குடும்பத்தாரை மீண்டும் கண்டதுதில் மகிழ்ச்சி,” என்று நெகிழ்ந்தார் திரு மேனன்.
தாயார் தம் மகனைப் பார்த்த மாத்திரத்தில் மனநிறைவில் கண்கலங்கிட, திரு மேனனின் மனைவி அனிதா, ஆகாயப் படையின் சிறப்பு விமானம் ரியாத் செல்லவுள்ளதாக வந்த அறிவிப்பு மனத்திற்கு மிகுந்த நம்பிக்கையைத் தந்தது என்றார்.
“சிங்கப்பூர் திரும்பும்படி ஒவ்வொரு முறை விமானத்திற்கு முன்பதிவு செய்யும்போதும், கடைசி நேரத்தில் அவை ரத்தாகின. எனினும் தற்போது ஆகாயப்படையின் சிறப்பு விமானம் மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைக்கு மிக்க நன்றி,’’ என்றார் திரு மேனன்.
இந்தப் பயணக்குழுவில் திரு கேஷ்வானி குடும்பத்தினரும் இடம்பெற்றிருந்தனர்.
இது குறித்து கருத்துரைத்த திருமதி மாலதி கேஷ்வானி, ‘‘ஆகாயப்படை விமானத்தில் அளிக்கப்பட்ட சேவைகள், அவர்கள் எங்களிடம் பேசிய விதம், மிகவும் பாதுகாப்பாக உணர வைத்தது,” என்றார்.
திரு நிசார் கேஷ்வானி, தொடர் அச்சுறுத்தல்களைப் பார்க்கையில் பதற்றமாக இருந்தது என்றும் ஆகாயப்படை விமானத்தில் பயணம் செய்வதற்கான தகவல் உறுதியாகும் வரையில் நம்பிக்கை அவ்வளவு பெரிதாக இல்லை என்றும் கூறினார்.
சிங்கப்பூரில் விமானம் பத்திரமாக தரையிறங்கிய தருணம் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் கூற இயலாமல் கண்கலங்கினார். அதை வார்த்தையால் விவரிக்க இயலாது என்றார் பல்கலைக்கழகத்தில் உதவித் துறைத் தலைவராகப் பணியாற்றி வந்த திரு கேஷ்வானி.
சவூதி அரேபியாவுக்கு பிரதமர் லாரன்ஸ் வோங் நன்றி
இதற்கிடையே, மத்திய கிழக்கிலிருந்து சிங்கப்பூரர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு உறுதியான ஆதரவை வழங்கிய சவூதி அரேபியா மற்றும் அவ்வட்டாரத்தில் உள்ள இதர பங்காளிகளுக்கு பிரதமர் லாரன்ஸ் வோங் நன்றி தெரிவித்துள்ளார்.
அவ்வட்டாரத்தில் தங்கியிருக்கும் சிங்கப்பூரர்கள் விழிப்புடனும் ஒருவருக்கொருவர் துணையாக இருக்கும்படியும் திரு வோங் கூறினார்.
மேலும், அவசியம் ஏற்பட்டால் உடனுக்குடன் தொடர்புகொள்வதற்கு ஏற்ற வகையில் சிங்கப்பூரர்கள் வெளியுறவு அமைச்சுடன் தங்கள் விவரங்களை மின்னணு முறையில் பதிவு செய்திருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

