சிங்கப்பூர் இளையர்கள், சீனாவை அதன் பெருநகரங்களுக்கு அப்பாலும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அந்நாடு ஒற்றைக்கல் கட்டுமானம் போன்றது என்று தாங்களாகவே ஊகிக்கக்கூடாது என்றும் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.
அதேவேளையில் சீனாவிலிருந்து இங்கு வந்துள்ள மாணவர்கள் சிங்கப்பூரைச் சீனர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் சமூகமாகக் கருதக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சிங்கப்பூர் - சீனா உலகளாவிய இளம் தலைவர்கள் கருத்தரங்கில் அமைச்சர் உரையாற்றினார்.
தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் ‘ஐடிஇ காலேஜ் ஈஸ்ட்’டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சீனாவையும் சிங்கப்பூரையும் சேர்ந்த 450 மாணவர்களும் விருந்தினர்களும் கலந்துகொண்டனர். அமைச்சரின் உரை ஆங்கிலத்திலும் மாண்டரின் மொழியிலும் அமைந்திருந்தது.
இளையர்கள் நாம் ஒரே மாதிரியானவர்கள் என்று ஊகிக்காமல், உண்மையிலேயே ஒருவரையொருவர் ஆழமாகப் புரிந்துகொள்ள நேரம் ஒதுக்கி, முயன்றால்தான் எதிர்கால ஒத்துழைப்புக்கான விதைகளை நாம் விதைக்க முடியும் என்றார் திரு சான்.
“நாம் வேறுபட்டவர்களாக இருந்தபோதும் இணைந்து பணியாற்ற முடியாது என்றில்லை,” என்றார் அவர்.
சொல்லப்போனால், இரு நாடுகளுக்கு இடையிலான வேற்றுமைகளால்தான் ஒவ்வொரு தரப்பும் அவரவரின் தனிப்பட்ட வலிமைகளைப் பங்காளித்துவத்திற்குள் கொண்டுவர இயலும் என்றார் அமைச்சர்.
இரு நாடுகளுமே, பொருளியல், பாதுகாப்பு எனப் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பதற்கான திட்டங்களில் வெவ்வேறு கண்ணோட்டங்களை முன்வைக்கின்றன. ஒருவருக்கொருவர் மரியாதையுடனும் மற்றவரின் தேவைகள், நடைமுறைகள் குறித்த ஆழமான புரிதலுடன் இது மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அந்த அடிப்படையில், இன்றைய தலைமுறை இளையர்கள் பரஸ்பர ஒத்துழைப்பு எனும் சுடரை இனி வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து ஏந்திச் செல்லவேண்டும் என்று தாம் விரும்புவதாகத் திரு சான் கூறினார்.
சிங்கப்பூருக்கும் சீனாவிற்கும் இடையிலான அரசதந்திர உறவுகளின் 35ஆம் ஆண்டுநிறைவைக் குறிக்கும் விதமாக இந்தக் கருத்தரங்கு நடைபெற்றது.
இதன் ஓர் அங்கமாக, பிரதமர் அலுவலக மூத்த துணையமைச்சர் டெஸ்மண்ட் டான், ‘இன்சிக்னியா’ நிறுவனத்தைத் தோற்றுவித்த அதன் நிர்வாகப் பங்குதாரர் டான் யிங்லான், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் சென் வென்சியான் ஆகியோர் பங்குபெற்ற கலந்துரையாடலும் இடம்பெற்றது.