நாடும் சமுதாயமும் சிறந்த முறையில் முன்னேற உலகளாவிய திறனாளர்களாக சிங்கப்பூரர்கள் திகழ்வது அவசியம் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் அறிவுறுத்தியுள்ளார்.
அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் சிங்கப்பூரர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஆதரவுத் திட்டங்கள் குறித்து தமிழ் முரசுடன் கலந்துரையாடினார் திரு சண்முகம்.
எதிர்காலத்தைக் கருத்தில் கொண்ட பட்ஜெட்
“நிலவும் அனைத்துலகச் சூழல், உலகளாவிய பொருளியல், தேவையான திறன்கள், பிள்ளைகள் படித்து முடித்தவுடன் கிடைக்கவிருக்கும் வேலைகள் எனப் பல்வேறு அம்சங்களையும் கருத்தில் கொண்டு மிகக் கவனமாக இவ்வாண்டின் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது,” என்றார் அமைச்சர் சண்முகம்.
அனைத்துலக அளவில் நிகழும் யுத்தங்களையும் அரசியல் புவிசார் சூழல்களையும் சுட்டிய அமைச்சர் சண்முகம், சிங்கப்பூர் பரவலாகப் பலவற்றை இறக்குமதி செய்வதால் விலைவாசி உயர்வும் ஓர் அக்கறைக்குரிய கூறாக மாறியுள்ளது என்று சொன்னார்.
“எனினும் சிங்கப்பூரர்கள் வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளிக்க ஆதரவுக்கரம் நீட்டும் வகையில் குடும்பங்களுக்கு இருதவணைகளாக $800 மதிப்பிலான சிடிசி பற்றுச்சீட்டுகள் வழங்கப்படவுள்ளன.
“மேலும், நாடு அதன் 60வது சுதந்திரத் தினத்தை கொண்டாடும் வேளையில் எஸ்ஜி60 ஆதரவுத் தொகுப்பின் முக்கிய அங்கமாக, 21 முதல் 59 வயதுக்கு உட்பட்டோருக்கு $600, 60 மற்றும் அதற்குமேல் வயதுடையோருக்கு $800 எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகள் வழங்கப்படவுள்ளன. இவையனைத்தும் சிங்கப்பூரர்களுக்கு உதவி செய்யும் வகையில் அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள்,” என்றார் அமைச்சர்.
சிங்கப்பூரையே பாதிக்கும் பிரச்சினை
தொடர்ந்து அமைச்சர், வீவக வீடுகளில் வசிப்போருக்கு யு-சேவ் கட்டணக்கழிவு, 12 வயதிற்குட்பட்ட சிங்கப்பூர்ப் பிள்ளைகளுக்கு $500 LifeSG சிறப்புத்தொகை, 13 முதல் 20 வயதிற்குட்பட்ட சிங்கப்பூர்ப் பிள்ளைகளுக்கு $500 நிரப்புத்தொகை, முழுநேரக் குழந்தைப் பராமரிப்புக் கட்டணக் குறைப்பு, பெரிய குடும்பங்களுக்கான ஆதரவுத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் பல்வேறு உதவிகள் குறித்தும் பேசினார்.
“அளிக்கப்படும் உதவிகளும் மானியங்களும் பிள்ளை வளர்ப்பில் குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைச் சமாளிக்க ஆதரவாக உள்ளன. என்றாலும் இவை மட்டுமே பிள்ளை பெறுவதை ஊக்குவிக்கும் என்று சொல்லிவிட முடியாது,” என்றார் அவர்.
சரிந்து வரும் பிறப்பு விகிதம், சிங்கப்பூரையே பாதிக்கும் பிரச்சினையாக உருவெடுத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், “சிங்கப்பூர் சிறப்பாக நீடிக்க சிங்கப்பூரர்கள் தேவை. எனவே, தேசம் செழித்தோங்க சிங்கப்பூரர்கள் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு பராமரிக்க இதன் தொடர்பில் மக்களுக்கு வலுவான உதவிகளை நல்க அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளது,” என்றார்.
தற்போதுள்ள சூழலில் திருமணம் நடப்பதும் பிள்ளைகள் பெறுவதும் குறிப்பாக இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வதும் குறைந்திருப்பது குறித்தும் அக்கறை தெரிவித்தார் திரு சண்முகம். எனினும், பெரிய குடும்பங்களைத் தொடர்ந்து பேணுவதில், அவர்களுக்கான உதவிகளை வலுப்படுத்துவதில் அரசு உறுதியான இலக்கு கொண்டுள்ளதாக உறுதியளித்தார் அவர்.
மூத்தோர் நிம்மதி கொள்வது முக்கியம்
முன்னோடித் தலைமுறையினர் நிம்மதியாகத் தங்களின் வாழ்நாளைக் கழிக்கத் துணைபுரிவதும் அரசாங்கத்தின் இலக்கு என்று குறிப்பிட்ட சட்ட அமைச்சர், அது தொடர்பாக வகுக்கப்பட்டுள்ள திட்டங்களைச் சுட்டினார்.
“சில்வர் ஜெனரேஷன் எனப்படும் மூத்தத் தலைமுறையினருக்கு வாழ்விடம் சார்ந்த மேம்பட்ட உதவிகள், மூத்தோரை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு ஆதரவு, குறைந்த வருமானம் ஈட்டும் மூத்தோருக்கு வெள்ளிக்கு வெள்ளி அடிப்படையிலான மெடிசேவ் இணை நிதித்திட்டம் ஆகியவை மூத்தோரின் நல்வாழ்வை இலக்காகக் கொண்டு வகுக்கப்பட்டவை.
“அனைவருக்குமான உள்ளார்ந்த பட்ஜெட் என்பதால் மானியம், கூடுதல் உதவிகளுடன் அரசாங்கம் வழங்கும் சலுகைகள் மூத்தோரை எளிதில் சென்றடைய அதற்கேற்ற வழிகாட்டுதல்களை அளிப்பதிலும் அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது,” என்றார் அவர்.
மூத்தோரில் சிலருக்குத் திறன்பேசி வாயிலாகச் சலுகைகளைப் பெறுவது சவாலாக இருக்கக்கூடும். இவர்களுக்கும் அரசாங்கத்தின் உதவிகள் குறித்த நேரத்தில் சென்றடைவதை உறுதிசெய்வதை நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடித்தள அமைப்புகளும் தங்களின் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.
அன்றுமுதல் தொடரும் ‘அனைவருக்கும் வீடு’
உலக நாடுகள் கொண்டிருக்கும் வீட்டு வசதி சார்ந்த அம்சங்களில் சிங்கப்பூரின் பொது வீடமைப்புக் கொள்கைகள், அனைத்துலக கவனத்தை ஈர்த்திருப்பது அனைவரும் அறிந்ததே.
அனைவருக்கும் வீடு என்பது சிங்கப்பூர் அந்நாளிலேயே கையாளத் தொடங்கிய கொள்கை. அதனை மேலும் வளப்படுத்தும் வகையில் இம்முறை வந்துள்ள பட்ஜெட்டில் மானியங்கள் உள்ளதாகச் சொன்னார் அமைச்சர்.
“வாடகை வீட்டில் இருப்போர் சொந்த வீடு வாங்கத் துணைபுரிய அரசாங்கம் பல உதவிகளைச் செய்துவருகிறது. முதல் முறை மற்றும் இரண்டாம் முறை வீடு வாங்குவோருக்கான உதவிகளும் உள்ளன”, என்றார் அவர்.
சிங்கப்பூரில் ஏறத்தாழ 90 விழுக்காட்டினர் சொந்த வீட்டைக் கொண்டிருக்கும் நிலையில் எஞ்சியுள்ள மக்களின் சொந்த இல்லம் சார்ந்த கனவுகளை நனவாக்கும் முயற்சியும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார் திரு சண்முகம்.