தூதரக விவகாரங்களைக் கையாளும் ஆற்றலை மேம்படுத்தும் நோக்கில், வெளியுறவு அமைச்சு தனது கட்டமைப்புகளையும் செயல்பாடுகளையும் வலுப்படுத்தி வருவதாக வெளியுறவு துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) கூறியுள்ளார்.
சிங்கப்பூரின் வெளிநாட்டு உறவுகளை விரிவுபடுத்தும் அதே வேளையில், வெளிநாட்டு சிங்கப்பூரர்களைக் கவனித்துக்கொள்வதிலும் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாக அமைச்சுக்கான ஒதுக்கீட்டு விவாதத்தில் உரையாற்றிய அவர் குறிப்பிட்டார்.
திடீர் புவிசார் அரசியல் மோதல்கள், இயற்கைப் பேரிடர்கள் காரணமாக, தூதரக விவகாரங்களின் தன்மை முன்பைவிட மிகவும் சிக்கலாகியுள்ளது.
கடந்த 2025ல் மட்டும் சிங்கப்பூரர்கள் சுமார் 10.6 மில்லியன் முறை வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு வெளிநாடுகளில் வசிக்கும் மற்றும் பயணம் மேற்கொள்ளும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என அவர் சுட்டிக்காட்டினார்.
பயணிகளுக்குச் சிறப்பான சேவையாற்ற அமைச்சு மின்னிலக்கக் கருவிகளைத் தீவிரமாகப் பயன்படுத்தி வருகிறது. குறிப்பாக, மேம்படுத்தப்பட்ட ‘இ-ரிஜிஸ்டர்’ (eRegister) மின் பதிவு முறை மூலம், குடிமக்கள் தங்களது ‘சிங்பாஸ்’ கணக்கைப் பயன்படுத்திப் பயண விவரங்களை எளிதாகப் பதிவு செய்யலாம்.
கடந்த ஆண்டு, 600,000-க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள் இம்முறையைப் பயன்படுத்தியுள்ளனர் என்றார் திருவாட்டி கான். இது 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இரு மடங்காகும்.
மேலும், 24 மணிநேரமும் இயங்கும் தூதரகப் பதிலளிப்பு நிலையம் (Consular Response Centre) உலகளாவிய நிலவரங்களைக் கண்காணித்து, அவசர காலங்களில் பயணிகளைத் தொடர்புகொண்டு உதவி வருகிறது.
இத்தகைய மின்னிலக்க மேம்பாடுகளுக்கு அப்பாற்பட்டு, மனிதநேய அடிப்படையிலான சேவையே அமைச்சின் தூதரகப் பணியின் மையமாகத் திகழ்கிறது என்று துணை அமைச்சர் வலியுறுத்தினார். வெளிநாடுகளில் சிங்கப்பூரர்கள் பிரச்சினைகளைச் சந்திக்கும்போது, அமைச்சின் அதிகாரிகளே அவர்களுக்கு முதல் கட்ட ஆதரவை வழங்குகிறார்கள் என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரின் தூதரகம் இல்லாத இடங்களில், பங்காளித்துவ நாடுகளுடனான ஒத்துழைப்பு மிக முக்கியமானது என்றார் திருவாட்டி கான். செயல்பாட்டிலுள்ள ஆசியான் வழிகாட்டுதல்கள், பங்காளிகளுடனான புரிந்துணர்வுகள் மூலம் அத்தகைய இடங்களில் உள்ள சிங்கப்பூரர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

