அனைத்துலக அளவில் பணமோசடியில் சம்பந்தப்பட்ட குற்றக்கும்பல் சிங்கப்பூர் வங்கிகளில் உள்ள கணக்குகளைக் குறிவைத்து செயல்பட்டது.
அக்கும்பலைச் சேர்ந்தவர் என்ற சந்தேகத்தின்பேரில் டான் கியான் ஹோவா என்ற 28 வயது மலேசிய ஆடவர் ஜூலை 22 (புதன்கிழமை) அன்று கைது செய்யப்பட்டார்.
சட்டவிரோதமாகப் பெற்ற பயன்களைப் பிறர் அடைவதற்கு சதிச் செயல்களில் ஈடுபட்டதாக அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
சிங்கப்பூர் அதிகாரிகள் அவருக்கு எதிரான பிடி ஆணையை அவரது கைதுக்கு முன்னதாகப் பிறப்பித்திருந்தனர். அவர் திங்கட்கிழமை (ஜூலை 20) மலேசியத் தலைநகர் கோலாலம்பூரின் அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
மறுநாள் அவர் சிங்கப்பூர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.
டே ஜியா யீ, வோங் ஹூ பிங் ஆகிய இருவரையும் கொண்ட கும்பலுடன் வெளியிடப்படாத சட்டவிரோதச் செயலில் ஈட்டிய சொத்துகள் சார்ந்த குற்றத்தில் இவர் சம்பந்தப்பட்டுள்ளார்.
குற்றச்செயல் வழியாக வந்த பணம், பல வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டது. ஆனால் நீதிமன்ற ஆவணங்கள் அந்தப் பணத்தின் மொத்த மதிப்பைக் குறிப்பிடவில்லை.
டே, வோங் ஆகிய இருவரின் விவரங்களையும் நீதிமன்ற ஆவணங்கள் வெளியிடவில்லை.
அனைத்துலகக் குற்றக்கும்பல்கள் சம்பந்தப்பட்ட மோசடிக்குற்றங்களைக் கண்டறிய ஒன்பது வெளிநாட்டு காவல்துறை அமைப்புகளுடன் இரண்டு மாதங்களாக ஒருங்கிணைந்து செயலாற்றியதாகச் சிங்கப்பூர் காவல்துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.

