ஜூனில் விற்பனைக்கு வரும் 1,300 பிடிஓ வீடுகள்

ஜூனில் விற்பனைக்கு வரும் 1,300 பிடிஓ வீடுகள்

2 mins read
காத்திருப்பு நேரம் மூன்று ஆண்டுகள்: வீவக
1ececb84-7e1b-41ec-9c59-be25e4d897ab
உட்லண்ட்சில் மார்சிலிங் பீக் 1 திட்டத்தின்கீழ் கட்டப்படும் 791 வீடுகளுக்கான காத்திருப்பு நேரம் ஈராண்டு 11 மாதங்கள் என்று தெரிவிக்கப்பட்டது. - படம்: வீடமைப்பு வளர்ச்சிக் கழகம்
multi-img1 of 2

உட்லண்ட்சிலும் தெம்பனிசிலும் ஏறக்குறைய மூவாண்டுக் காத்திருப்பு நேரம் கொண்ட மொத்தம் 1,352 பிடிஓ வீடுகள் ஜூன் மாத இறுதிக்குள் விற்பனைக்கு விடப்படும்.

உட்லண்ட்சில் மார்சிலிங் பீக் 1 திட்டத்தின்கீழ் கட்டப்படும் 791 வீடுகளுக்கான காத்திருப்பு நேரம் ஈராண்டு 11 மாதங்கள் என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) ஜூன் 16ஆம் தேதி தெரிவித்தது.

குறைவான காத்திருப்பு நேரத்துடன் இவ்வாண்டு (2024) விற்பனைக்கு விடப்படும் வீடுகளின் முதல் தொகுதி இது.

தெம்பனிஸ் வெஸ்ட் ரயில் நிலையத்துக்கு அருகே தெம்பனிஸ் கிரீன்டோபாஸ் திட்டத்தின்கீழ் கட்டப்படும் 561 வீடுகளுக்கான காத்திருப்பு நேரம் மூன்று ஆண்டுகள் ஒரு மாதமாக இருக்கும்.

2024ல் குறைவான காத்திருப்பு நேரம் கொண்ட 2,800க்கும் மேற்பட்ட வீடுகள் விற்பனைக்கு விடப்படும். இவற்றில் 2,000க்கும் மேற்பட்டவை அக்டோபர் மாதம் விற்பனைக்கு வரும்.

2025ஆம் ஆண்டுக்குள் குறைவான காத்திருப்பு நேரங்கொண்ட 2,000 முதல் 3,000 வீடுகளை விற்பனைக்குவிட 2023ல் உறுதியளித்ததைக் கழகம் நினைவுகூர்ந்தது.

மற்ற அமைப்புகளுடனும் கட்டுமானப் பங்காளிகளுடனும் இணைந்து அணுக்கமாகப் பணியாற்றியதால் திட்டமிட்டதற்கு ஓராண்டு முன்பாகவே அதை நிறைவேற்ற முடிந்ததாக கழகம் கூறியது.

மார்சிலிங் பீக் 1 திட்டத்தின்கீழ், அட்மிரல்டி ரோட்டிலும் மார்சிலிங் லேனிலும் ஈரறை ஃபிளெக்சி, மூவறை, நாலறை, ஐந்தறை வீடுகள் கட்டப்படும். 31 முதல் 35 மாடிகள் கொண்ட மூன்று புளோக்குகளில் அவை அமையவிருக்கின்றன.

உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடிக்கு அருகில் அமையும் அவ்வீடுகள், உட்லண்ட்ஸ் வட்டாரம், உட்லண்ட்ஸ் நார்த் ரயில் நிலையம் ஆகியவற்றிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் கட்டப்படுகின்றன.

ஜூன் மாதம் விற்பனைக்கு வரும் இவ்வீடுகளில் மூன்று தலைமுறையினர்க்கான வீடுகளும் அடங்கும்.

தெம்பனிஸ் கிரீன்டோபாஸ் திட்டத்தின்கீழ், தெம்பனிஸ் அவென்யூ 1க்கும் தெம்பனிஸ் ஸ்திரீட் 92க்கும் இடையில் ஈரறை ஃபிளெக்சி, நாலறை, ஐந்தறை வீடுகள் கட்டப்படும். 12 அல்லது 13 மாடிகள் கொண்ட நான்கு புளோக்குகளில் அவை அமையும். இவற்றில் ஒரு புளோக்கில் 24 வாடகை வீடுகள் அமைந்திருக்கும்.

இவ்வீடுகளுக்கு அருகே உணவுக்கடைகள், பேரங்காடி, பாலர் பள்ளி, கடைகள், பிடோக் நீர்த்தேக்கப் பூங்காவுக்கு இட்டுச்செல்லும் தெம்பனிஸ் பூங்கா இணைப்புப்பாதை ஆகியவை அமைந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்