சிங்கப்பூரின் நிலவழிச் சோதனைச்சாவடிகளில் கடந்த ஆண்டு (2024) மார்ச் மாதம் கடப்பிதழைப் பயன்படுத்தாமல் ‘கியூஆர்’ குறியீட்டைப் பயன்படுத்தும் நடைமுறை அமலுக்கு வந்த பிறகு 50.3 மில்லியனுக்கு மேற்பட்டோர் அதைப் பயன்படுத்தியுள்ளனர்.
2024 மார்ச் 19ஆம் தேதி அந்த நடைமுறை நடப்புக்கு வந்ததிலிருந்து இந்த ஆண்டு (2025) மார்ச் 19ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகள் வழியாகக் கடந்து சென்ற பயணிகளின் எண்ணிக்கை இது.
அவர்களில் 30 மில்லியனுக்கு மேற்பட்டோர் கார்த் தடங்களில் ‘கியூஆர்’ குறியீட்டைப் பயன்படுத்திக் குடிநுழைவு நடைமுறையைப் பூர்த்தி செய்தனர். காரில் சென்ற பயணிகளின் மொத்த எண்ணிக்கையில் இது 70 விழுக்காடு என்று கூறப்பட்டது.
குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம், வியாழக்கிழமை (மார்ச் 27) இந்தத் தகவல்களை வெளியிட்டது.
இந்த ஆண்டு ஜனவரியிலிருந்து நிலவழிச் சோதனைச்சாவடிகள் இரண்டிலும் ‘கியூஆர்’ குறியீட்டைப் பயன்படுத்தும் முறை முழுமையாக நடப்புக்கு வந்திருப்பதாக அது குறிப்பிட்டது.
ஒப்புநோக்க, மார்ச் மாதப் பள்ளி விடுமுறைக் காலத்தின்போது கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு, ஒரு மணி நேரத்தில், கூடுதலாக 2,000 பயணிகள் குடிநுழைவு நடைமுறையைப் பூர்த்தி செய்ததாக ஆணையம் கூறியது. இது கிட்டத்தட்ட 10 விழுக்காடு அதிகம்.
கூடுதலான பயணிகள் ‘கியூஆர்’ குறியீட்டைப் பயன்படுத்தியது இதற்குக் காரணம்.
இந்த நடைமுறையைப் பயன்படுத்துவதற்குப் பயணிகள் ‘மைஐசிஏ’ செயலியைப் பதிவிறக்கம் செய்து, தங்கள் கடப்பிதழ் விவரங்களைப் பதிவுசெய்வது அவசியம்.
தொடர்புடைய செய்திகள்
இது, கடப்பிதழைப் பயன்படுத்தத் தேவையில்லாத நடைமுறை என்றபோதும் பயணத்தின்போது கடப்பிதழைக் கொண்டுசெல்லும்படி பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

