விரைவு ரயில் (ஆர்டிஎஸ்) இணைப்பு உட்லண்ட்ஸ் நார்த் ரயில் நிலையத்தில் நவம்பர் 11, 12ஆம் தேதிகளில் நடைபெற்ற அவசரகாலத் தயார்நிலைப் பயிற்சியில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர்.
ஆர்டிஎஸ் இணைப்பு திறக்கப்படவிருப்பதை முன்னிட்டு, ரயில் நிலையத்தில் ஏற்படும் பொதுப் பாதுகாப்புச் சம்பவங்களைக் கையாள்வதில் உள்ள செயல்பாட்டுத் தயார்நிலை, துரித நடவடிக்கை ஆற்றல்கள், அமைப்புகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு ஆகியவற்றை மதிப்பிடுவதே ‘குவிக்சில்வர் 12’ (Exercise Quicksilver 12) எனப்படும் அந்த இரண்டு நாள் பயிற்சியின் நோக்கம் என்று காவல்துறை தெரிவித்தது.
ஒரு ரயிலில் 600க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய அந்த ஆர்டிஎஸ் இணைப்பு மூலம், சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் நார்த் ரயில் நிலையத்திலிருந்து கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்களில் ஜோகூர் பாருவில் உள்ள புக்கிட் சாகரைச் சென்றடையலாம்.
‘ஆர்டிஎஸ் ஆப்பரேஷன்ஸ்’ (RTS Operations), சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையம், மலேசியப் போக்குவரத்து அமைச்சு ஆகியவை அக்டோபர் 2ஆம் தேதி வெளியிட்ட கூட்டறிக்கையின்படி, ஆர்டிஎஸ் இணைப்புச் சேவை 2027ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பங்கேற்கும் அமைப்புகள், சம்பந்தப்பட்ட தரப்புகள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு, முடிவெடுக்கும் ஆற்றல், அதிகாரிகளை விரைவாகப் பணியில் ஈடுபடுத்தும் செயல்திறன்களைச் சோதிக்கும் வகையில் குவிக்சில்வர் 12’ பயிற்சியில் தொடர்ச்சியாக பாவனைப் பயிற்சிகள் நடத்தப்பட்டன.
அந்தப் பயிற்சியில் சிங்கப்பூர் காவல்துறை, குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, நிலப் போக்குவரத்து ஆணையம், செர்டிஸ் சிஸ்கோ, எஸ்எம்ஆர்டி ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
பயிற்சியின்போது, ரயில் நிலையத்தில் பாவனைப் பிணைப்பிடிப்புச் சம்பவம் ஒன்றைச் சிங்கப்பூர் காவல்துறை அதிகாரிகள் கையாண்டனர். அப்போது, குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து ஒருங்கிணைந்ததன் மூலம் ஒருவர் கைது செய்யப்பட்டு, அந்தப் பாவனை அவசரகாலச் சூழல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
அதோடு, தீப்பிடித்து எரிந்த வாகனம் ஒன்றைத் தண்ணீர்க் குழாய் மூலம் அணைக்கும் பணியில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டனர்.
“குறிப்பாக முக்கியப் போக்குவரத்து உள்கட்டமைப்புகளில் பொதுமக்களின் பாதுகாப்பை நிலைநாட்டுவதில் உள்ள அமைப்புகளின் கூட்டுக் கடப்பாட்டை இத்தகைய பயிற்சிகள் கோடிகாட்டுகின்றன,” என்று காவல்துறை தெரிவித்தது.
“அமைப்புகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், செயல்பாட்டுத் தயார்நிலையை மேம்படுத்தவும், பொதுப் பாதுகாப்புச் சம்பவங்களுக்குத் துரிதமான, ஒருங்கிணைந்த, பயனுள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்யவும், சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புகளுடனும் முக்கியத் தரப்புகளுடனும் இணைந்து சிங்கப்பூர் காவல்துறை தொடர்ந்து அணுக்கமாகப் பணியாற்றும்,” என்றும் அது கூறியது.
