உயர்நிலைப் பள்ளிகளில் அடுத்த ஆண்டிலிருந்து (2026) திறன்பேசிப் பயன்பாட்டுக்கு எதிராகக் கடுமையான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டதற்குப் பொதுவாகப் பெற்றோர் பேராதரவு தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே வீட்டில் நடைமுறையில் இருக்கும் விதிமுறைகளைப் போலவே அவையும் உள்ளதாக அவர்கள் கூறினர்.
ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் ஊடகம் திறன்பேசிப் பயன்பாட்டு விவகாரம் குறித்துச் சில பள்ளிகளிடம் பேசியது. நீண்டகாலமாகவே அத்தகைய விதிமுறைகள் நடப்பிலிருப்பதாக அவை குறிப்பிட்டன. அதன் காரணமாக மாணவர்கள் வகுப்பறைகளில் அதிக கவனத்துடன் இருக்கின்றனர். சக மாணவர்களுடனும் அவர்கள் கூடுதலாய்க் கலந்துபேசுவதாகவும் பள்ளிகள் தெரிவித்தன.
அடுத்த ஆண்டு ஜனவரியிலிருந்து உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் பாட நேரத்தைத் தவிர்த்த மற்ற வேளைகளிலும் திறன்பேசிகளையும் திறன் கைக்கடிகாரங்களையும் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இடைவேளை, வகுப்புகளுக்கு இடைப்பட்ட நேரம், இணைப்பாட நடவடிக்கைகள் முதலியவற்றின்போதும் மாணவர்கள் அந்தத் திறன்சாதனங்களைப் பயன்படுத்த முடியாது. திறன்பேசிகளைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் புதிய விதிமுறைகளைக் கல்வி அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 30) வெளியிட்டது.
தற்போது பாட நேரங்களில் மட்டும்தான் திறன்பேசிகளைப் பயன்படுத்த மாணவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்போது அந்தத் தடை விரிவுபடுத்தப்படுகிறது. மின்னிலக்கச் சாதனங்களை ஆரோக்கியமான முறையில் பயன்படுத்தும் பழக்கவழக்கங்களைப் பிள்ளைகளிடையே ஊக்குவிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளில் கடுமையான விதிமுறைகளும் அடங்கும்.
அந்த வழிகாட்டி நெறிமுறைகள் ஏற்கெனவே தொடக்கப்பள்ளிகளில் இவ்வாண்டு அறிமுகம் கண்டன.
பிள்ளைகளின் திரை நேரத்தை நிர்வகிப்பதற்காக வீட்டில் எடுக்கப்படும் முயற்சிகளுக்குப் புதிய விதிமுறைகள் ஆதரவாய் அமைந்துள்ளதாகப் பதின்மவயதினர் சிலரின் பெற்றோர் கூறினர். மின்னிலக்கச் சாதனங்களின் பயன்பாட்டை மாணவர்களிடையே கட்டுப்படுத்தவும் சில பள்ளிகள் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.
தொடர்புடைய செய்திகள்
பல பள்ளிகள் ஏற்கெனவே கடுமையான திறன்பேசிக் கொள்கைகளை அமல்படுத்தியுள்ளன. பள்ளிப் பைகளில் திறன்பேசிகளை வைத்திருக்கலாம் என்று ஆலோசனை வழிகாட்டி கூறினாலும், பலர் பூட்டப்படும் பெட்டிகளில் வைத்திருக்கத் தொடங்கியுள்ளனர்.
ஈஸ்ட் ஸ்பிரிங் உயர்நிலைப் பள்ளி, 2024ஆம் ஆண்டில் ஒரு ‘திறன்பேசி ஹோட்டல்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அங்கு மாணவர்கள் தினமும் காலையில் தங்கள் திறன்பேசிகளை வைத்துவிட்டு, நாள் முடிவில் மட்டுமே அவற்றைப் பெற்றுக்கொள்கிறார்கள்.
“மாணவர்கள் வகுப்பில் சிறப்பாகக் கவனம் செலுத்த முடிகிறது. மேலும் அவர்கள் அருகில் திறன்பேசிகள் இல்லாததால், அவற்றைத் தொடர்ந்து பார்க்க வேண்டும் என்ற வேட்கை அவர்களிடம் இல்லாமல் போகிறது,” என்று அப்பள்ளியின் துணை முதல்வர் கோ சீ ஹுயி கூறினார்.

