அதிக ஆசிரியர்கள் நியமனம், சிறப்புப் பள்ளிகளில் கூடுதல் இடங்கள்

கல்வி அமைச்சு கவனம் செலுத்தும் முக்கியத் துறைகள் குறைத்து அமைச்சர் டெஸ்மண்ட் லீ

அதிக ஆசிரியர்கள் நியமனம், சிறப்புப் பள்ளிகளில் கூடுதல் இடங்கள்

3 mins read
785ccaec-cb2d-4854-a2ad-ad6de671446b
கல்வித் துறையின் இலக்கு குறித்தும் மேற்கொள்ளப்பட உள்ள மேம்பாடுகள் குறித்தும் ஜனவரி 26ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேர்காணல் வழங்கினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நாட்டின் கல்வி அமைச்சராக திரு டெஸ்மண்ட் லீ ஊடகத்துக்கு அளித்த முதல் நேர்காணலில் தமது அமைச்சு, மாணவர் சேர்க்கை, தேர்வு, ஆசிரியர்களுக்கான ஆதரவு, சிறப்புக் கல்வி என பலவற்றிலும் மேற்கொள்ளவிருக்கும் மேம்பாடுகள், வசதிகள் குறித்து விரிவாகப் பேசியுள்ளார்.

தேர்வுகளால் ஏற்படும் விளைவுகளைக் குறைப்பது குறித்து அமைச்சு மறுஆய்வு செய்து வருகிறது. அதில் மாணவர்களின் சிரமத்தை சரிசெய்வது, உயர்நிலைப் பள்ளி மாணவர் சேர்க்கையில் தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வு முடிவுகள் பயன்படுத்தப்படும் முறை போன்றவையும் அடங்கும்.

சமூகத்தில் வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்த பிள்ளைகள் கலந்து பழக வழியமைக்கும் விதமாக, தொடக்கநிலை 1 பதிவுக் கட்டமைப்பு மறுபரிசீலனை செய்யப்படுகிறது என்று அமைச்சர் டான் கூறினார்.

கல்வி அமைச்சு மேற்கொண்டு வரும் மற்ற நான்கு அம்சங்கள் குறித்தும் அமைச்சர் லீ எடுத்துரைத்தார். அவை சுருக்கமாக:

1. ஆசிரியர்களுக்குக் கூடுதல் ஆதரவு

அதிகமான ஆசிரியர்களை அமைச்சு வேலைக்கு அமர்த்தி வருகிறது. 2025ஆம் ஆண்டில் 1,300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த எண்ணிக்கை 2024ல் 950ஆக இருந்தது. 2025ல் பணியமர்த்தப்பட்டவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினர் பணியிடைக்கால நிபுணர்கள்.

பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த வல்லுநர்களும் ஆசிரியர் தொழிலில் சேர்வதை ஆதரிக்கும் வகையில், தேசிய கல்விக் கழகத்துடன் இணைந்து 16 மாத முதுகலைப் பட்டயக் கல்வித் திட்டத்தை அமைச்சு மறுஆய்வு செய்கிறது.

புதிதாக வரும் எல்லா ஆசிரியர்களும் கற்பித்தல் துறையில் முதன்மைப் பாடங்களைப் படிப்பதுடன், தொழில்சார் மேம்பாட்டிற்கு உதவ மற்ற படிப்புகளையும் தேர்வு செய்ய முடியும்.

புதிய பட்டதாரிகள், பணியிடைக்கால வேலைகளில் சேருபவர்கள் ஆகிய இருவரின் கற்றல் தேவைகளுக்கும் இடமளிப்பதன் மூலம், அனைத்து புதிய ஆசிரியர்களும் தங்கள் பொறுப்புகளுக்கு நன்கு தயாராக இருப்பதை உறுதிசெய்வதை மேம்பாடுகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.

ஆசிரியர் தொழிலை மறுகட்டமைப்பு செய்வதற்காக 2024ல் அமைக்கப்பட்ட கல்வி அமைச்சுப் பணிக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதில் அமைச்சு ஓரளவு முன்னேற்றம் கண்டுள்ளது.

எடுத்துக்காட்டாக, அனைத்துப் பள்ளிகளும் ஆசிரியர்களுக்கு பல்வேறு நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளைச் செயல்படுத்தியுள்ளன. சில பள்ளிகள், ஆசிரியர்களுக்கு நேரில் இருக்க வேண்டிய வகுப்புகள் அல்லது கடமைகள் இல்லாத நாள்களில் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கின்றன.

2. இருமொழித்திறனை வலுப்படுத்துதல்

இருமொழித்திறனின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கில் 2025ல் தொடக்கநிலை 1, 2 மாணவர்களுக்கு புதிய வாசிப்புத் திட்டம் உருவாக்கப்பட்டது. தாய்மொழிப் பாட வேளையின்போது 30 நிமிடங்கள் வாசிப்பு, நூலக நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்படும். இத்திட்டம் 2029ஆம் ஆண்டுக்குள் தொடக்கப்பள்ளியின் அனைத்து நிலைகளுக்கும் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும்.

பிள்ளைகளுக்கு அவர்களின் தாய்மொழிகளில் ஆர்வத்தை வளர்க்க, கல்வித் தொழில்நுட்பம் (எடுடெக்) சமகாலக் கருவிகள், நடைமுறை நடவடிக்கைகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும் அமைச்சு ஆராய்ந்து வருகிறது.

3. சிறப்புக் கல்விப் பள்ளிகளில் அதிக இடங்கள்

சிங்கப்பூரில் 2022 முதல் நான்கு புதிய சிறப்புக் கல்விப் (Special education (SPED) schools) பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதிகரித்துவரும் தேவையைப் பூர்த்திசெய்ய அப்பள்ளிகளில் மாணவர்களுக்கான இடங்கள் உயர்த்தப்பட உள்ளன. அதற்கு சமூகச் சேவை அமைப்புகளுடன் இணைந்து அமைச்சு செயல்படுகிறது.

சிறப்புக் கல்வியாளர்களை உருவாக்கவும் தக்கவைத்துக்கொள்ளவும் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. அது குறித்த மேல்விவரங்கள் விரைவில் பகிரப்படும்.

4. வாழ்நாள் கற்றல்

இவ்வாண்டு மார்ச் 1ஆம் தேதி முதல் பகுதிநேர பயிற்சிக்கும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பணியிடைக்காலப் பயிற்சிப் படித்தொகையாக $300 வழங்கப்படும்.

40 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுமுடைய சிங்கப்பூரர்கள் இதற்குத் தகுதிபெறுவர்.

பிப்ரவரி 9 முதல் அதற்கு விண்ணப்பிக்கலாம். தகுதிபெறும் படிப்புகளின் பட்டியலை MySkillsFuture இணையத்தளத்தில் பார்க்கலாம்.

குறிப்புச் சொற்கள்