சிங்கப்பூர்ப் பயனீட்டாளர் சங்கம் நடத்திய கருத்தாய்வில் பங்கேற்ற 700 பேரில் பெரும்பாலோர் இலவசமாக இவ்வாண்டின் உலகக் கிண்ணக் காற்பந்து ஆட்டங்களைப் பார்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து விழுக்காட்டினர் மட்டுமே கட்டணம் செலுத்தி ஆட்டங்களைப் பார்ப்பதாகத் தெரிவித்தனர்.
கருத்தாய்வில் பங்கேற்றோரில் 45 விழுக்காட்டினர் இலவசமாகத் திரையிடப்படும் ஆட்டங்களைப் பார்ப்பதாகத் தெரிவித்தனர் என்று சிங்கப்பூர்ப் பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் மெல்வின் யோங் புதன்கிழமை (ஜூலை 8) ஃபேஸ்புக்கில் அறிவித்தார். மீடியாகார்ப் போன்றவை இலவசமாகத் திரையிடும் ஆட்டங்களை அவர்கள் பார்க்கின்றனர்.
மற்றவர்கள் இணையம் அல்லது சமூக ஊடகத் தளங்களில் இடம்பெறும் ஆட்டங்களின் குறும்படங்களைப் பார்த்துவருவதாகத் தெரிவித்தனர். ஐந்து விழுக்காட்டினர் மட்டும் கட்டணம் செலுத்தி ஆட்டங்களைப் பார்ப்பதாகத் தெரிவித்தனர்.
கட்டணம் குறித்து கருத்து
“உலகக் கிண்ண ஆட்டங்களைப் பார்ப்பதற்கான கட்டணம் நியாயமானதே எனக் கருதுகிறேன்,” என்ற கருத்தில் 49 விழுக்காட்டினர் நடுநிலையாக இருப்பதாகக் குறிப்பிட்டனர். 40 விழுக்காட்டினர் அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.
எல்லா உலகக் கிண்ண ஆட்டங்களையும் நேரடியாகப் பார்க்கக் கட்டணம் 118 வெள்ளி. 2022ஆம் அண்டு நடந்த போட்டிக்கும் இதே கட்டணம்தான்.
கருத்தாய்வில் பங்கேற்றோரில் 39 விழுக்காட்டினர் தாங்கள் ஆட்ட நிகழ்வுகளைக் கொண்ட குறுங்காணொளிகளை மட்டுமே பார்ப்பதாகத் தெரிவித்தனர். சில ஆட்டங்களை மட்டும் பார்ப்பதாக 26 விழுக்காட்டினர் கூறினர்.
ஆறு விழுக்காட்டினர் மட்டுமே அடிக்கடி ஆட்டங்களைப் பார்ப்பதாகத் தெரிவித்தனர்.
இவ்வாண்டு உலகக் கிண்ணப் போட்டிகளை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் ஏற்று நடத்துகின்றன. பெரும்பாலான ஆட்டங்கள் சிங்கப்பூர் நேரப்படி முதல் நாள் நள்ளிரவுக்கும் மறுநாள் நண்பகலுக்கும் இடையே நடைபெற்று வருகின்றன.
இலவசமாகக் கூடுதல் ஆட்டங்கள்
இம்முறை கூடுதலான உலகக் கிண்ண ஆட்டங்கள் இலவசமாக ஒளிபரப்பப்படுவதால் அதிகமானோர் கட்டணமின்றி ஆட்டங்களைக் கண்டுகளிக்க முடிவதாகத் திரு யோங் குறிப்பிட்டார். ஆட்ட நிகழ்வுகள் விரைவிலேயே இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதாகவும் அவர் சொன்னார்.
உலகக் கிண்ணப் போட்டிகளின் 104 ஆட்டங்களில் 28ஐ சேனல் 5 ஒளிவழியில் இலவசமாகத் திரையிடப்போவதாக மீடியாகார்ப் பிப்ரவரி மாதம் அறிவித்தது. சென்ற உலகக் கிண்ணப் போட்டிகளில் ஒன்பது ஆட்டங்கள் மட்டுமே இலவசமாக ஒளிபரப்பப்பட்டன.

