தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
பள்ளிவாசல் துறை உச்சநிலை மாநாட்டில் முயிஸ் அறிவிப்பு 

சமூகச் சமய வாழ்வின் ஒத்துழைப்பை மேம்படுத்த 1 மில்லியன் வெள்ளி நிதி

2 mins read
5354ec97-84a0-4328-88bb-f2ad65238c85
சமயம் சார்ந்த வாழ்வை மேலும் வளமாக்கும் நோக்குடன் ‘ஒரே பள்ளிவாசல் துறை’ உச்சநிலை மாநாட்டின் ஓர் அங்கமாக ‘சலாம்எஸ்ஜி 2025’ ஐ அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி. - படம்: முயிஸ்
multi-img1 of 2

பள்ளிவாசல் துறையில் ஒத்துழைப்பையும் புத்தாக்கத்தையும் மேலும் செழிக்கச் செய்யும் இலக்குடன் 1 மில்லியன் வெள்ளி மதிப்பில் ‘சமுதாயச் சமய வாழ்வு ஒத்துழைப்பு நிதி’ நிறுவப்படும் என்று முயிஸ் அறிவித்துள்ளது.

சனிக்கிழமை (பிப்ரவரி 8) அன்று நடைபெற்ற ‘ஒரே பள்ளிவாசல் துறை’ உச்சநிலை மாநாட்டில் இதற்கான அறிவிப்பு வெளியானது.

மூன்றாண்டுகளில் செயலாக்கம் காணவிருக்கும் இந்த நிதி, பள்ளிவாசல் துறையுடன் இதரத் துறைகளும் பங்காளிகளும் மேலும் வலுவான ஒத்துழைப்பை நல்கிட ஊக்குவிக்கும் என்று முயிஸ் அறிக்கை விவரித்தது.

‘புத்தாக்கம், ஒத்துழைப்புடன் புதிய பாதைகளை வகுத்தல்’ என்ற கருப்பொருளுடன் நடந்தேறிய மாநாட்டில் சிறப்பு விருந்தினராக சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சரும் சுகாதார இரண்டாம் அமைச்சரும், முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திரு மசகோஸ் ஸுல்கிஃப்லி கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களைச் சந்தித்த திரு மசகோஸ், “பள்ளிவாசல்கள் தற்போது வழிபாடு செய்வதற்கான இடம் என்பதைத் தாண்டி சமூகத்தின் தேவைகளைச் சந்திக்கச் சேவையாற்றும் இடமாகத் திகழ்ந்து வருகின்றன,” என்றார்.

பள்ளிவாசல்களின் சமய நடவடிக்கைகளில் துடிப்புடன் பங்கேற்று சமயம் சார்ந்த வாழ்வை மேலும் வளமாக்கும் நோக்குடன் மாநாட்டின் ஓர் அங்கமாக ‘சலாம்எஸ்ஜி 2025’ ஐ அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார் அமைச்சர் மசகோஸ்.

ஒருங்கிணைக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்தை மேம்படுத்தும் ஒட்டுமொத்த இலக்குடன் அவற்றுள் இளையோரின் பங்கு குறித்து தமிழ் முரசு எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த திரு மசகோஸ், “இறைவழிபாட்டோடு தம் சமூகத்துடன் மட்டுமல்லாது பிற சமூகத்துடனும் அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றைப் பேணுவதன் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில் முஸ்லிம் சமூகம் தங்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்திட உதவும் வகையில் இந்நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன,” என்றார்.

“ரமலான் உள்ளிட்ட காலங்களில் வழிபாடுகளில் பங்கேற்க வருவோர், குறிப்பாக இளையர்கள் தங்கள் சமூகத்தையும் தாண்டி உதவி தேவைப்படுவோருக்குச் சேவைகள் வழங்குதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இச்செயல்கள் பயன்படும்,” என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

மாநாடு குறித்து கருத்துரைத்த சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் தலைவர் ராஜ் முஹம்மது, முஸ்லிம் சமூகமும் முயிஸ் தரப்பும் சாதித்த, சாதிக்க வேண்டிய அம்சங்களைப் பற்றிப் பகிர்ந்துகொள்ள இந்தப் பள்ளிவாசல் துறை உச்சநிலை மாநாடு ஏற்றதொரு வாய்ப்பை வழங்குவதாகத் தெரிவித்தார்.

ஒரே பள்ளிவாசல் துறையின் மூத்த இயக்குநர் திரு ஸல்மான் புத்ரா அஹ்மது அலி, உச்சநிலை மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய ஒத்துழைப்பு நிதி குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

இந்நிதியின் வாயிலாக இளையர்கள், மூத்தோரைச் சென்றடைய புத்தாக்கமிக்க வழிகளைக் கண்டுகொள்ள முடியும். சமூகத்துடனான பிணைப்பை வலுப்படுத்தப் பள்ளிவாசல்கள் வழிகாட்டியாகத் திகழவும் இத்திட்டம் துணைபுரிந்திடும் என்று தாம் நம்புவதாகக் கூறினார் திரு ஸல்மான்.

மாநாட்டு அரங்கில் சிறப்புரை ஆற்றிய முயிஸ் தலைமை நிர்வாகி திரு காதிர் மைதீன், நம்பிக்கையுடன் ஆற்றல்மிக்க சமூகத்தையும், மீள்திறன் வாய்ந்த குடும்பங்களையும் வளர்ப்பதே தங்களின் அடிப்படை நோக்கம் என்று வலியுறுத்தினார்.

பள்ளிவாசல் தலைவர்கள், ஊழியர்கள், தொண்டூழியர்கள் எனச் சுமார் 1,000க்கும் அதிகமானோர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

குறிப்புச் சொற்கள்