தமிழ் உயர் கல்விக்கு முரசின் பங்களிப்பு

4 mins read
தமிழ்ப் பள்ளிகள் தொடங்கி பல்கலைக்கழகத்தில் தமிழ் வரையில் சிங்கப்பூரில் தமிழ்க்கல்விக்காகப் பாடுபட்டு வருகிறது தமிழ் முரசு
efe19fe4-983d-4906-9ca2-3c8165b53371
சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகத்தில் தமிழை நிறுவுவதற்கான போராட்டத்தில் தமிழ் முரசு வலுவான ஆயுதம் எனப் பேராசிரியர் திண்ணப்பன் வருணித்தார். - படம்: செய்யது இப்ராகிம்

காலனித்துவ சிங்கப்பூர் மலாயாவில் பெருவாரியான மக்கள் எளிய தொழில்களைச் செய்து வருகையில் சிங்கப்பூர் மலாயா மக்களுக்கு உயர்கல்வி தேவை என்ற முற்போக்கான எண்ணத்தை 1937ல் வெளிவந்த கட்டுரையின்வழி கோ. சாரங்கபாணி வெளிப்படுத்தினார்.

தமிழ்க் கல்விக் கழகத்தை அமைத்துத் தமிழ்ப் பள்ளிகளின் செயல்பாட்டை ஒருங்கிணைத்ததுடன், அன்றைய நாளில் சிங்கப்பூர் மலேசியாவில் உள்ள தமிழ்ப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்கும்படியும் தமிழ்முரசு வலியுறுத்தியது.

1950களில் மலேசியாவில் மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை தொடங்கப்பட்டபோது பல்கலைக்கழகத்தில் மொத்தமாக ஐந்து தமிழ் புத்தகங்களே தரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தியப் பகுதி அமைப்பதற்கும் தமிழ் நூல்களைத் திரட்டுவதற்கும் ‘தமிழ் எங்கள் உயிர் நிதி’ திட்டம் கோ. சாரங்கபாணி தமிழ் முரசு மூலம் அமைக்கப்பட்டது.

பலமுறை கோரியபின் பெற்ற பேறு 

“அன்றைய காலகட்டத்திலிருந்து சிங்கப்பூரின் உள்ளூர்ப் பல்கலைக்கழகம் ஒன்றில் தமிழ்த்துறை வேண்டும் என்று குரல்கொடுத்த தலையங்கக் கட்டுரைகள் பல வெளிவந்தன. தமிழ் முரசு தொடர்ந்து அவ்வாறு எழுதிவந்ததால்தான் இந்தக் கனவு நனவானது என்றே சொல்லலாம். டாக்டர் சித்ரா ராஜாராமின் கட்டுரைகளைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்,” என்று பேராசிரியர் திண்ணப்பன் கூறினார். 

சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகத்தில் தமிழை நிறுவுவதற்கான போராட்டத்தில் தமிழ் முரசு வலுவான ஆயுதம் எனப் பேராசிரியர் திண்ணப்பன் வருணித்தார். 

“தமிழ் முரசு இதழுடன் தமிழராசிரியர் சங்கம் உள்ளிட்ட சங்கங்களும் அமைச்சர்களும் ஆற்றிய பெருமுயற்சியால் இது விளைந்தது,” என்று அவர் கூறினார். 

தமிழாசிரியர்கள் தமிழ் முரசு படிப்பது கட்டாயம்

கடந்த 2000 முதல் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் தெற்காசிய இயல் துறையில் பணியாற்றியபோது முதன்முதலில் தமிழ்ப் பிரிவைத் தொடங்கி இலெக்டிவ் பாடத்தைத் நடத்தியதற்கு ஆதரவாகத் தமிழ் முரசில் வெளியிட்டதை பேராசிரியர் திண்ணப்பன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 

“தமிழர் அல்லாத மாணவர்களுக்கு இந்த வகுப்புகள் வழியாகத் தமிழ் கற்பித்தேன். சிரிச்சாய் என்ற தாய்லாந்து மாணவர் எழுதிய கட்டுரையில் தாய் மொழி என் தாய் மொழி எனக் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கட்டுரையைத் தமிழ் முரசு வெளியிட்டது,” என்று அவர் கூறினார். 

தமிழாசிரியர்கள் நாள்தோறும் தமிழ் முரசைப் படிக்க வேண்டும் என வலியுறுத்திய பேராசிரியர் திண்ணப்பன்,  மாணவர்களுக்கும் அதனைப் பற்றிச் சொல்ல வேண்டும் என ஆசிரியர்களிடம் கூறி வருவதாகக் குறிப்பிட்டார்.

“ஆசிரியர் கிணற்றுத்தவளைகளாக இருந்துவிடக்கூடாது. உலக நடப்புகளைத் தெரிந்துகொள்ளத் தமிழ் முரசை அன்றாடம் வாசிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

60 ஆண்டு கனவு நனவானது 

கடந்த 2005ஆம் ஆண்டில் சிம் பல்கலைக்கழகத்தில் சார்புநிலைப் பேராசிரியராகவும் மதியுரைஞராகவும் பணியாற்றிய பேராசிரியர் சுப திண்ணப்பன், அந்தப் பல்கலைக்கழகத்திலிருந்து ஆசிரியர்கள் படித்துப் பட்டம் பெற்றது குறித்தும் தமிழ் முரசு செய்தி வெளியிட்டு ஆதரவு காட்டியதைச் சுட்டினார். 

“பட்டமளிப்பு விழாவைப் பற்றி எழுதி முதல் பரிசு பெற்ற மாணவர்களைப் பேட்டியெடுத்து செய்தியாக வெளியிட்டது தமிழ் வளர்ச்சிக்குப் பங்களித்த நற்செயலாகும்,” என்று அவர் கூறினார்.

பல்கலைக்கழகத் தமிழ்த்துறையைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதில் தமிழ் முரசுக்கு பங்காற்றியுள்ளதாகவும் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழி மற்றும் இலக்கியப் பட்டக்கல்வித் துறையின் தலைவர் மணிவண்ணன் முருகேசன் தெரிவித்தார். 

அப்போது உள்ளூர் ஆசிரியர்களில் பலருக்குப் பட்டயக்கல்வி இருந்தது. அவர்களுக்காக சிங்கப்பூரிலேயே இளங்கலைப் பட்டப்படிப்பு வழங்கப்படவேண்டும் என்று சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க அப்போது தனியார்  பல்கலைக்கழகமாக இருந்த சிம் தொடங்கியதாக முனைவர் மணிவண்ணன் கூறினார்.  

“திட்டத்தின் தொடக்கத்தில்  400க்கும் மேறப்பட்ட தமிழ் ஆசிரியர்களும் தமிழ் ஆசிரியராகச் சேர விரும்பியோரும் சேர்ந்தனர். இந்தப் பட்டப்படிப்பைப் பற்றிய விவரங்களைப் பல்லாண்டுகளாக மக்களுக்குத் தமிழ் முரசு சமர்ப்பித்தது,” என்றும் அவர் கூறினார்.

சிங்கப்பூர் சமூக மானுடவியல் பல்கலைக்கழகமாக உருமாற்றப்பட்டுள்ள அங்கு இதுவரை ஏறத்தாழ 400க்கும் மேற்பட்டவர்கள் தமிழ்த்துறையில் பட்டம் பெற்றுள்ளனர்.

தற்போது ஆண்டுக்கு 25 லிருந்து 30 மாணவர்கள் உள்ளனர். தற்போது மூன்று ஆண்டுகளிலும் சேர்த்து 70க்கும் மேற்பட்டோர் பயின்று வருகிறார்கள்.

உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ் பயிற்றுவித்தல் என்பது தாய்மொழிப் புழக்கம் குறைந்து வரும் இச்சூழலில் மிக இன்றியமையாத ஒன்று என்றும் முனைவர் மணிவண்ணன் தெரிவித்தார். 

கூடுதல் பட்டதாரிகளை பெற்ற தமிழ்த் துறை

உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்மொழி மற்றும் இலக்கியத்தைக் கற்றுக்கொள்ளும் பட்டதாரிகள் போதிய  மொழி சார்ந்த திறன்களையும் இலக்கியம் சார்ந்த அறிவினையும் பெற்று வரும் பெரும்பாலான பட்டதாரிகள், ஆசிரியர் பணியைத் தேர்வு செய்வதாக அவர் கூறினார்.

பள்ளிகளில் தாய்மொழியை இரண்டாம் மொழியாகப் பயின்றுவரும் நம் மாணவர்களை ஊக்கப்படுத்தி போதிய மொழித் திறன்களை அவர்களிடம் ஏற்படுத்தி, இலக்கியம், பண்பாடு சார்ந்த ஆழ்ந்த புரிதல்களையும் அடைவதற்கு ஆசிரியர்களின் மேம்பட்ட கல்வித்தகுதி வகைசெய்கிறது என்று அவர் கூறினார்.

தமிழாசிரியர்களின் பணி மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்குமான வாய்ப்பு வசதிகள் சிங்கப்பூரிலேயே அமைய வேண்டும் என்னும் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் முயற்சிகளுக்குத் தமிழ்முரசு பக்கபலமாக இருந்துள்ளதாகச் சங்கத்தின் தலைவர் தனபால் குமார் தெரிவித்தார். 

“குறிப்பாக, சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழியில் பட்டப்படிப்பு அறிமுகம் காண தமிழ் முரசு சங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கியுள்ளது. சிங்கப்பூரில் தமிழ்மொழியின் இன்றைய வளமான நிலைக்குத் தமிழ்முரசின் பணி அளப்பரியது,” என்று கூறினார். 

குறிப்புச் சொற்கள்