மற்றவர்களுக்கு ‘தேக்கா’ என்ற சொல்லைக் கேட்டாலே லிட்டில் இந்தியாவில் உள்ள பரபரப்பான கடைத்தொகுதிகள் நினைவுக்கு வரக்கூடும்.
ஆனால், மதுரையிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டு வந்திருக்கும் திரு அ.முத்துக்கிருஷ்ணனுக்கு ‘தேக்கா‘ என்பது ஓர் உணர்வு.
அதற்குக் காரணம் காலஞ்சென்ற அவரது தாத்தா திரு ஆர்.எம்.பெருமாள்.
1930களில் கப்பல் ஏறி கடல் கடந்து சிங்கப்பூருக்கு வந்த அவரது தாத்தா, கால்நூற்றாண்டுகளுக்கும் மேல் சிங்கப்பூரில் வாழ்ந்தவர். சிங்கப்பூர் கடற்படைத் தளத்தில் தொழில்நுட்பராகப் பணியாற்றியவர். மறைந்த தாத்தாவின் நினைவுகளை ஏடாக நூற்க சிங்கப்பூருக்கு வந்திருக்கிறார் திரு முத்துக்கிருஷ்ணன், 52.
‘‘என்னைப் பொறுத்தவரையில் தேக்கா என்பது வெறும் ஓர் இடமன்று. சிறுவயது முதல் நான் கேட்டு வளர்ந்த பல விஷயங்களை மீட்டெடுக்கும் ஓர் உணர்வு.
‘‘என் தாத்தா சிங்கப்பூரைப் பற்றிப் பேசும் ஒவ்வொரு முறையும், தேக்காவை பற்றிக் குறிப்பிடுவார். அவருக்குத் தேக்கா என்றாலே இனிமையான நினைவுகளின் பொக்கிஷம். அந்த வாழ்க்கைப் பயணத்துக்கு வடிவம் கொடுக்கவே இந்தத் தேடல் பயணம்,’’ என்றார் திரு முத்துக்கிருஷ்ணன்.
1948ல் புக்கிட் தீமாவில் திருமணம் நடைபெற்றதை கூறும் தாத்தாவின் மணவிழா அழைப்பிதழ்; ஏறத்தாழ எண்பது ஆண்டுகளுக்கு முன் செம்பவாங் வாட்டாரத்தில் உள்ள புகைப்படக்கூடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்; அக்காலத்தில் எடுக்கப்பட்ட மேலும் சில நிழற்படங்கள், சிற்சில குறிப்புகள் இவற்றை வைத்துக்கொண்டு பரபரப்பான மனநிலையுடனும் மிகுந்த நம்பிக்கையுடனும் தாத்தாவின் கடந்த காலத்தை மீண்டும் கண்முன் கொண்டுவர தமிழ்நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார் எழுத்தாளர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர் எனப் பன்முகம் கொண்டிருக்கும் திரு முத்துக்கிருஷ்ணன்.
‘‘தாத்தா செம்பவாங் வட்டாரத்தில் வசித்து வந்தார். புக்கிட் தீமாவில் அவரது திருமணம் நடந்தது. அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படம் என்னிடம் உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
‘‘ஒரு காலத்தில் என் தாத்தா நடந்து சென்ற புக்கிட் தீமா, செம்பவாங் வீதிகளில், இன்று அவரது வாழ்க்கைப் பதிவுகளை எழுத விரும்பும் இலக்குடன் நான் நடந்து செல்கையில், அவரே என்னுடன் நடந்து வருவதுபோல் இருக்கிறது,’’ என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்ட திரு முத்துக்கிருஷ்ணன், சிங்கப்பூரில் தம் தாத்தா வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி மேலும் அறிந்திட தாம் உந்தப்படுவதாகவும் சொன்னார்.
தமிழ்நாட்டின் நாகை மாவட்டத்திலிருந்து இளையராகச் சிங்கப்பூருக்கு வருகையளித்த தாத்தா, இங்குப் பணியிலிருந்தபோது சிங்கப்பூருக்கு வருகையளித்த நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் தேசப்பற்றுமிக்க செயல்களால் ஈர்க்கப்பட்டார்; அதன் தொடர்ச்சியாக நேதாஜி நிறுவிய இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்ததையும் நினைவுகூர்ந்தார் திரு முத்துக்கிருஷ்ணன்.
‘‘ராணுவத்தில் பணியாற்றிய அனுபவம் அவருக்குப் பட்டாளத்தான் என்ற பெயரைப் பெற்றுத்தந்தது.
“மேலும், எங்கள் ஊருக்கு வரும்போது அங்குள்ளவர்களுக்காக அவர் தேக்காவிலிருந்து வாங்கிவரும் பொருள்கள் பல வண்டிகளில் வந்து எங்கள் வீட்டு வாசலுக்கு வந்துசேரும்.
“அதைப் பெற்றுக்கொள்ள திரளும் ஊர் மக்கள் நாளடைவில் எங்கள் தாத்தா வாழ்ந்த வீட்டை ‘சிங்கப்பூர்க்காரரின் வீடு’ என்றே குறிப்பிடவும் தொடங்கிவிட்டனர்.
‘‘தலைவர் நேதாஜியுடனான பயணம், சிங்கப்பூருக்கு வந்து தாம் கற்றுக்கொண்ட வாழ்க்கைப் பாடங்கள், குறிப்பாக தேக்கா கதை என வாழ்நாளில் தாம் கடந்து வந்த பல விஷயங்கள், சம்பவங்களை எல்லாம் தாத்தா எங்களுடன் பகிர்ந்துகொண்டே வந்தார். தேவைப்படுவோருக்கு சத்தமின்றி பல உதவிகளைச் செய்தார்.
‘‘அவரது வாழ்க்கை உற்றார் மட்டுமல்ல, ஊராருக்கும் பல்வேறு முக்கியப் பலன்களை ஈந்தது. தம் வாழ்க்கையால் குடும்பத்தையும் சமூகத்தையும் ஊக்கப்படுத்தியவர் அவர்,’’ என்று தாத்தா பற்றிய நினைவலைகளில் மூழ்கினார் திரு முத்துக்கிருஷ்ணன்.
வாழ்வின் பிற்பகுதியில் தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டாலும், அவர் வாழ்நாள்களின் முக்கியக் காலகட்டங்கள் சிங்கப்பூரில் செதுக்கப்பட்டவை என்று கூறிய எழுத்தாளர், தொடர்ந்து பேசினார்.
‘‘மேற்கூறிய பின்னணியை அடிப்படையாக வைத்து, நான் மேற்கொண்டிருக்கும் இந்த முயற்சி, என் தாத்தாவின் கடந்த காலத்தை மீண்டும் கண்டறிவது மட்டுமன்று. அவரின் கதைகளால் ஆழமாக ஈர்க்கப்பட்ட, மேலும் என் சொந்த அடையாளத்தை வடிவமைத்த மனிதரை இன்னும் சிறப்பாகப் புரிந்துகொள்வதையும் பற்றியது,’’ என்றார் திரு முத்துக்கிருஷ்ணன்.
தாத்தாவின் திருமணக் கதைகள் தமது மனத்தில் நீக்கமற நிறைந்துள்ளதாகக் கூறிய அவர், ஞாயிற்றுக்கிழமைகளில் தம் நண்பர்களையெல்லாம் தாத்தா அவரது வீட்டுக்கு அழைத்து ஒன்றுகூடல் நடத்துவது பற்றித் தன்னிடம் சொன்னதுண்டு என்ற தகவலையும் பகிர்ந்தார்.
‘‘அக்காலத்திலேயே தாத்தா நடத்திய ‘சண்டே வைப்ஸ்’ கலாசாரம் என்னை வெகுவாக வியப்பில் ஆழ்த்தியது. வார இறுதிக் கொண்டாட்டம் இப்போதுதான் வந்தது என்று எண்ணுவதற்கு ஒன்றுமில்லை எனப் புரியவைத்தது,” என்றும் புன்னகைத்தவாறே அவர் கூறினார்.
தாத்தாவின் வாழ்க்கையுடன் இழையோடும் சிங்கப்பூர் வரலாற்றை ஆவணப்படுத்தும் எழுத்துப் பணிகளை எளிமையாக்குவதற்குப் போதுமான தகவல்கள், ஆதாரங்கள் எனப் பரவலாகக் கையில் பெரிய வளங்கள் ஏதுமில்லை என்பது சவாலாகத் தோன்றினாலும் அவற்றைச் சமாளிக்க முனைப்புடன் இருப்பதாகவும் நம்பிக்கையோடு சொன்னார் திரு முத்துக்கிருஷ்ணன்.
தம் தாத்தா பெருமாளுடன் வாழ்ந்த மூத்தோர் யாரேனும் இப்போது உயிருடன் இருக்கிறார்களா? அவரது சமகாலத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் யாவை? அவருடன் பழகிய மக்களிடம் நேர்காணல்கள், எனப் பல செயல்கள் சேகரித்து இந்த நூலை எழுதிட திட்டமிட்டுள்ளதாக அவர் சொன்னார் அவர்.
இதன் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தப் பயணம் தம்மை எங்கு அழைத்துச் செல்லும் என்பதை அறியும் ஆவலுடன் இருக்கிறார் அவர்.
‘‘சிங்கப்பூருக்கு வரும்போதெல்லாம், என் தாத்தாவுடனான தொடர்பை உணர்கிறேன். எனவே, நான் தேடிவந்த தகவல்களைச் சிங்கப்பூர் எனக்கு வழங்கும்.
‘‘என் தாத்தாவின் அடிச்சுவடுகளுடன் அவரை வடிவமைத்த வாழ்வியல் சூழல்களைக் கண்டுபிடிக்கவே இந்த நெடும்பயணம். அந்தச் சாதனையாளரின் மாண்புக்கு ஒரு சான்றாகவும், ஒவ்வொரு நாளும் என்னை ஊக்கப்படுத்தும் மனிதனை கொண்டாடும் பாங்காகவும் இந்தப் பயணம் திகழும் என்று கருதும் அதேவேளையில், செம்பவாங்கில் என் தாத்தாவுடன் வாழ்ந்த மக்களின் கதைகளைக் கண்டறிந்திட முடியும் என்றும் உறுதியாக நம்புகிறேன்,’’ என்று திரு முத்துக்கிருஷ்ணன் உறுதியுடன் கூறினார்

