புகழ்பெற்ற குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் (QS) நிறுவனம் வெளியிட்டுள்ள 2026ஆம் ஆண்டிற்கான பாடவாரியான உலகப் பல்கலைக்கழக தரவரிசையில், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (என்யுஎஸ்) முன்னிலை வகிக்கிறது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் 28 பாடங்கள் உலக அளவில் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த 2023ஆம் ஆண்டில் 14 ஆகவும், 2025ல் 22 ஆகவும் இருந்தது.
ஏழு பாடங்கள் உலகத் தரவரிசையில் முதல் மூன்று இடங்களில் வந்துள்ளன. தரவு அறிவியல் (Data Science), செயற்கை நுண்ணறிவு (AI) ஆகிய துறைகள் நான்கு இடங்கள் முன்னேறி முதல் மூன்று இடங்களுக்குள் வந்துள்ளன.
பொறியியல், தொழில்நுட்பத் துறையில் ஐந்து பாடங்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. வரலாறு, உடற்கூறியல், உடலியல் போன்ற துறைகளும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளன.
“பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்களின் அர்ப்பணிப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் இது,” என்று பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் ஆரோன் தியான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஆசிய அளவில் முன்னணிக் கல்வி நிறுவனமாகத் திகழும் என்யுஎஸ், அமெரிக்கா, பிரிட்டனைத் தவிர்த்து, அதிக பாடங்களில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த ஒரே பல்கலைக்கழகம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

