புகழ்பெற்ற நூல்களை விரைவில் இரவல்பெற நூலகத்தில் புதிய வசதி

2 mins read
02b26555-519f-4447-8082-887d16a666fb
பிரபலமான நூல்களை விரைவில் இரவல் பெற வசதி செய்யும் ‘ஃபாஸ்ட்பேக்’ சேகரிப்பு சோதனைத் திட்டம் பொங்கோல், மத்திய நூலகங்களில் இடம்பெறவிருக்கிறது. - படம்: சாவ் பாவ்

பிரபலமான நூல்களை விரைவில் இரவல் பெறும் வசதி பொங்கோல் நூலகத்திலும் மத்திய நூலகத்திலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவ்விரு நூலகங்களிலும் ‘ஃபாஸ்ட்பேக் கலெக்‌‌ஷன்’ எனும் புதிய தொக்குப்பின்கீழ் ஜனவரி 7 முதல் ஜூன் 30 வரை 900க்கும் மேற்பட்ட பிரபலமான நூல்களை வாசகர்கள் இரவல் பெறலாம்.

பிரபலமான புத்தகங்களை வாசகர்கள் விரைவாக வாசிப்பதை ஊக்குவிக்கவும் அந்நூல்களுக்கான காத்திருப்பு நேரத்தைக் குறைப்பதையும் நோக்கமாகக்கொண்டு, சோதனை முயற்சியாக இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாகத் தேசிய நூலக வாரியம் கூறியது.

‘ஃபாஸ்ட்பேக்’ தொகுப்பில் உள்ள நூல்களை ஏழு நாள்களுக்கு இரவல் பெறலாம். இரவல் காலம் நீட்டிக்கப்படாது. இந்நூல்களை முன்பதிவு செய்யவும் முடியாது. பங்கேற்கும் இரு நூலகங்களில் மட்டுமே இரவல் பெற முடியும்.

நூல்களை உரிய தேதிக்குள் திருப்பித்தராவிட்டால், ஒரு நாளைக்கு ஒரு நூலுக்கு 15 காசு அபராதம் விதிக்கப்படும்.

இதில் பெரியோருக்கான புனைவிலக்கியம் (fiction), புனைவிலக்கியம் அல்லாத (non-fiction) புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. ஆங்கில மொழி நூல்கள் உள்ளன. இச்சேகரிப்பில் உள்ள நூல்கள் தனியாக வைக்கப்பட்டிருக்கும். அவற்றின் முன் அட்டையில் உள்ள ‘ஸ்டிக்கர்’ மூலம் அவற்றை அடையாளம் காணலாம்.

அதிகமானோர் வாசிக்கும், முன்பதிவுக்கு நீண்ட காலம் காத்திருப்புள்ள நூல்கள் இச்சேகரிப்பில் இணைக்கப்பட்டுள்ளதாகத் தேசிய நூலக வாரியம் கூறியது.

‘ஃபாஸ்ட்பேக்’ நூல்கள் தேசிய நூலக வாரியத்தின் இணையப் பட்டியலில் இடம்பெறாது.

சிங்கப்பூரில் வாசிப்புப் பழக்கம் வலுவாக உள்ளதை தேசிய நூலக வாரியத்தின் தேசிய வாசிப்புப் பழக்கம் 2024 பற்றிய ஆய்வு காட்டுகிறது. 10 இளையர்களில் கிட்டத்தட்ட ஒன்பது பேரும் 10 பெரியவர்களில் எட்டுப் பேரும் கடந்த ஆண்டில் குறைந்தது ஒரு நூல் வாசித்திருப்பதை ஆய்வு காட்டுகிறது.

குறிப்புச் சொற்கள்