திரு லியோவ் செர் ஹுவா அன்றாடம் நடப்பது சிரமமாக இருக்கும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு நினைத்திருந்ததில்லை.
2022ஆம் ஆண்டு பக்கவாதம் வந்தபோது, 66 வயது திரு லியோவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரின் உடலில் ஒருபக்கம் செயலிழந்தது. மருத்துவமனையில் இரண்டு மாதம் தங்கியிருந்தார். உடல் ரீதியான பிரச்சினைகளுடன் உணர்வுபூர்வமான சவால்களையும் அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
“மிகவும் நம்பிக்கையின்றி, மனச்சோர்வுடன் இருந்தேன். முதல் இரண்டு மாதம் மிகவும் சிரமமாக இருந்தது,” என்று திரு லியோவ் நினைவுகூர்ந்தார்.
ஆனால் சென்ற ஆண்டு (2025) ஆகஸ்ட் மாதத்திலிருந்து நிலைமை மாறியது. தெம்பனிசில் லயன்ஸ் பிஃபிரெண்டர்ஸ் துடிப்புடன் மூப்படையும் நிலையத்தில் புதிய இயந்திர மனிதக் கருவி மறுவாழ்வு நடவடிக்கைகளில் சோதித்துப் பார்க்கப்பட்டது. அவற்றில் பங்கெடுக்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
விழக்கூடிய நிலையில் இருக்கும் முதியோரைத் தாங்கிப் பிடிக்கும் ஆற்றல் பெற்றது அந்த இயந்திர மனிதக் கருவி. ஒருவர் கீழே விழுந்துவிடாமல் நிலையாக இருப்பதற்கு உதவும் அது, தரவுகளின் மூலம் இயங்குகிறது. உலகில் அத்தகைய ஆற்றலுடன் உருவாக்கப்பட்ட முதல் இயந்திர மனிதக் கருவி அது என்று கூறப்படுகிறது.
ஒருவர் கீழே விழப்போகிறார் என்பதைக் கண்டறியும் உணர்கருவிகளும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப அம்சங்களும் அதில் பொருத்தப்பட்டிருக்கும். சம்பந்தப்பட்டவருக்குக் கடும் காயங்கள் ஏற்படுவதைத் தடுக்க இயந்திர மனிதக் கருவி உதவும் என்று நம்பப்படுகிறது.
புதன்கிழமை (ஜனவரி 21) நடைபெற்ற ஸும்பா வகுப்பில் அது அறிமுகம் கண்டது. திரு. லியோவும் முதியோர் சிலரும் அதில் பங்கெடுத்தனர். தெம்பனிஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லின் சென்னும் நிகழ்வில் கலந்துகொண்டார்.
சிங்கப்பூரில் முதியோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமூகப் பராமரிப்புக் குழுக்களின் மூலம் மறுவாழ்வுக்கு ஆதரவளிக்க இயந்திர மனிதக் கருவிகள் கைகொடுக்கும் என்று அவற்றை உருவாக்கியோர் நம்புகின்றனர். எவரையும் சார்ந்திருக்காமல் முதியோர் வாழவும் அவை துணைபுரியும் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
இயந்திர மனிதக் கருவிகளின் விலை சற்று அதிகம்.
அதன் விலை கிட்டத்தட்ட $90,000 என்று சொல்லப்படுகிறது.
இயந்திர மனிதக் கருவிகளை உருவாக்கியோர், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள். சமூகச் சுகாதார அமைப்புகளுக்கெனக் கருவிகளை வாடகை முறையில் விடுவது குறித்தும் அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

