தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நிக்கல் நெடுஞ்சாலையில் கார் தீ: ஒருவர் மரணம்

1 mins read
9b2f8608-82cb-41b4-b6e5-6327a793bf53
தீப்பிடித்து எரிந்த காருக்குள் ஒருவர் சிக்கிக் கொண்டார். - படங்கள்: அலெக்ஸ் ஃபேஸ்புக், சாவ் பாவ்

நிக்கல் நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) ஏற்பட்ட கார் தீ விபத்தில் ஒருவர் மாண்டார். தீப்பிடித்து எரிந்த காருக்குள் பாதிக்கப்பட்டவர் சிக்கிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

குலிமார்ட் ரோட்டை நோக்கிச் செல்லும் நிக்கல் நெடுஞ்சாலையில், காலாங் பாய லேபார் விரைவுச் சாலையின் நுழைவாயிலுக்கு முன், ஒரு கார் தீப்பற்றி எரிகிறது என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு பிற்பகல் 2.10 மணிக்குத் தகவல் கிடைத்தது.

தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் சாதனம் மூலம் தீயை அணைத்தனர். பாதிக்கப்பட்டவர் காரின் இடிபாடுகளுக்குள் கண்டுபிடிக்கப்பட்டார். அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவ அதிகாரி அறிவித்தார்.

மற்ற வாகனங்களில் இருந்த ஏழு பேரை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை பரிசோதித்தது. இருவர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மற்றவர்கள் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டனர்.

ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்ட, மற்ற வாகனங்களின் உட்புற கேமராக்களில் பதிவான காட்சிகளிலிருந்து எடுக்கப்பட்ட இரண்டு காணொளிகளில், சாலையின் வலப்பக்கமாக மிக வேகமாக வந்த நீல நிற கார் பல கார்களைக் கடந்து சென்று, இடப்பக்கமாகச் சாய்ந்தது. சாய்ந்தவுடன் கார் தீப்பற்றிக் கொண்டது.

விபத்துக்குள்ளான கார் மோதிய பல கார்களில் இரண்டு, கடுமையான சேதத்துக்குள்ளாகின. விபத்து தொடர்பான விசாரணை தொடங்கியுள்ளது.

குறிப்புச் சொற்கள்