‘நர்ஸ்ஃபர்ஸ்ட்’ உதவித் தொலைபேசிச் சேவை, கடந்த ஆறு மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையோட்டத்தில் 800க்கும் அதிகமான அழைப்புகளைப் பராமரிப்பு அமைப்புகளுக்கு மாற்றிவிட்டுள்ளது.
உயிருக்கு ஆபத்தில்லை எனக் கருதப்பட்ட மருத்துவப் பிரச்சினைகளின் தொடர்பில் அழைப்போரை, மருத்துவமனைகளின் அவசரகாலப் பிரிவுகளுக்கு அனுப்பாமல் பொது மருத்துவர்கள் போன்றோரை நாடுமாறு அது கூறியது.
‘நர்ஸ்ஃபர்ஸ்ட்’ சேவையை நேரடியாகவோ சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் மூலமோ நாடிய கிட்டத்தட்ட 2,500 பேரில் அவர்களும் அடங்குவர்.
‘நர்ஸ்ஃபர்ஸ்ட்’, ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு அழைப்புகளை மாற்றிவிட்டதால், அவசரகாலப் பிரிவுகள், உடனடி மருத்துவ உதவி தேவைப்பட்ட நோயாளிகள்மீது கவனம் செலுத்தமுடிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அழைத்த மற்றவர்களில் பெரும்பாலோர், அவசர மருத்துவ உதவி வாகனத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக அவசரகால மருத்துவர்களை நாடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். ‘நர்ஸ்ஃபர்ஸ்ட்’ திட்டத்தின் செயலாக்கத் தலைவர் டாக்டர் நிக்கலஸ் இங் அந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டார். உட்லண்ட்ஸ் மருத்துவமனை அந்தத் திட்டத்தை நடத்துகிறது.
சோதனையோட்டம் சென்ற ஆண்டு (2025) ஜூன் முதல் நவம்பர் வரை இடம்பெற்றது. உயிருக்கு ஆபத்தில்லை எனக் கருதப்பட்ட சுமார் 3,600 அழைப்புகளை ‘நர்ஸ்ஃபர்ஸ்ட்’ உதவிச் சேவை கையாண்டது. அவற்றுள் 70க்கும் மேற்பட்டவை, குடிமைத் தற்காப்புப் படையால் நேரடியாக மாற்றிவிடப்பட்டவை.
ஏராளமானோருக்கு அவர்களின் வீட்டுக்கு அருகில் இருக்கும் மருத்துவ வசதிகள் பற்றித் தெரிந்திருக்கவில்லை என்று டாக்டர் இங் சொன்னார். சிறிய காயங்கள் உட்பட பல பிரச்சினைகளைப் பொது மருத்துவர்களால் கையாளமுடியும் என்பதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை என்றார் டாக்டர் இங்.
3,600 அழைப்புகளில் கிட்டத்தட்ட 1,100, மருத்துவப் பிரச்சினை சம்பந்தப்பட்டதல்ல என்று அவர் சொன்னார். மருத்துவ முன்பதிவு குறித்தோ வேறொரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அன்புக்குரியவர்கள் பற்றியோ அழைத்தவர்கள் வினவியதாக டாக்டர் இங், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகத்திடம் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
ஆறு மாதச் சோதனையோட்டத்தின் முடிவுகள் மறுஆய்வு செய்யப்படுவதாக உள்துறை அமைச்சும் சுகாதார அமைச்சும் கூறியுள்ளன.

