‘ஒவ்வொரு வேளையிலும், எல்லா நேரங்களிலும் தேசமே அதன் சொந்த எதிர்காலத்தை உருவாக்குகிறது. முன்னரே விதிக்கப்பட்டது என்று எதுவும் இல்லை’ என்பதை நினைவூட்டும் அமரர் எஸ் ராஜரத்தினம் உண்மையிலேயே ‘சிங்கப்பூர் சிங்கம்’ என்று பிரதமர் லாரன்ஸ் வோங் புகழாரம் சூட்டியுள்ளார்.
சிந்தனையாளர், இலட்சியவாதி, செயல்வீரர் என போற்றப்படும் அமரர் எஸ் ராஜரத்தினத்தின் வாழ்க்கை வரலாற்று நூலான ‘The Lion’s Roar’ இரண்டாம் பாக வெளியீட்டு விழா திங்கட்கிழமை (ஜூலை 22) இடம்பெற்றது.
அந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் வோங், சுதந்திர சிங்கப்பூர் உருவாக்கத்தில் திரு ராஜரத்தினத்தின் முக்கியப் பங்களிப்புகளைப் பட்டியலிட்டார்.
கடந்த 2012ஆம் ஆண்டு சமூக, இளையர், கலாசாரத் துறைகளை ஒன்றிணைத்து, அப்புதிய அமைச்சை வழிநடத்த தனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதை நினைவுகூர்ந்த பிரதமர் வோங், அதற்கான பெயர் பின்னணியையும் விவரித்தார்.
“மேற்கூறிய காலகட்டத்தில் எனக்கு வழங்கப்பட்ட ஒரு சில முதன்மைப் பணிகளில் அமைச்சுக்கான பெயர் சூட்டுவதும் ஒன்று. திரு ராஜரத்தினத்தால் ஈர்க்கப்பட்டு, அவர் விட்டுச் சென்ற வளமான மரபைக் கட்டியெழுப்பும் நோக்கில், அமைச்சின் பெயரில் ‘கலாசாரம்’ புத்துயிர் பெற வேண்டும் என்று நான் விரும்பினேன். அச்சிந்தனையின் விளைவாகத்தான் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சின் பெயர் வடிவம்பெற்றது,” என்று திரு வோங் விவரித்தார்.
சிங்கப்பூர் நிலைக்குமா என்பதன் தொடர்பில் திரு ராஜரத்தினம் கொண்டிருந்த அக்கறைகளையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
“இன்றைய சிங்கப்பூர் என்பது புதிய கட்டம். இது வெறும் தலைமைத்துவ மாற்றம் மட்டுமன்று. தலைமுறை மாற்றம். நாம் புதிய சிந்தனைகளை உருவாக்க வேண்டும். பிரச்சினைகளுக்கு புதிய அணுகுமுறைகளை முயல வேண்டும். எனினும், நம் வெற்றிக்கு இணக்கமாக இருக்கும் நம் தேசத்தை நிறுவிய தலைவர்களின் அறிவுக்கூர்மையையும் அடிப்படைக் கொள்கைகளையும் நினைவில் கொள்வது அவசியம்,” என்று திரு வோங் வலியுறுத்தினார்.
சக சிங்கப்பூரர்கள் குறித்த அக்கறை கொண்டிருந்தால்தான் தேசம் நீடித்து நிலைபெறும் எனக் குறிப்பிட்ட பிரதமர், அதனை திரு ராஜரத்தினம் நன்றாகப் புரிந்து வைத்திருந்தார் என்றும் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
“நம் தேசிய உறுதிமொழியின் இரண்டாம் பகுதியை நாம் அனைவரும் அறிவோம். அது, ‘நம் நாடு, மகிழ்ச்சி, வளம், முன்னேற்றம் ஆகியவற்றை அடையும் வண்ணம் சமத்துவத்தையும் நீதியையும் அடிப்படையாகக் கொண்ட ஜனநாயகச் சமுதாயத்தை உருவாக்க உறுதி மேற்கொள்வோமாக’ என்று இருக்கும். திரு ராஜரத்தினம் இயற்றிய உறுதிமொழியின் பூர்வ வரிகள், ‘நீதியும் சமத்துவமும் மேலோங்கும், ஒருவருக்கொருவர் உதவுவதன் வாயிலாக மகிழ்ச்சியையும் முன்னேற்றத்தையும் நாடும் ஜனநாயகச் சமுதாயத்தை உருவாக்க உறுதி மேற்கொள்வோமாக’ என்று இருக்கும். இதுவே சிங்கப்பூரை எவ்வாறு முன்னெடுத்துச் செல்லமுடியும் என்பதற்கான முக்கிய அறிதிறன் கோட்பாடு என்று நான் கருதுகிறேன்,” என்று பிரதமர் வோங் மேலும் சொன்னார்.
இன்னும் சில வாரங்களில் தேசிய தினத்தைக் கொண்டாடவிருக்கும் வேளையில், நாம் கொண்டாடி மகிழ்வதற்கு எதுவாக இந்நூல் தற்போது அறிமுகம் கண்டது மிகவும் பொருத்தமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தென்கிழக்காசிய ஆய்வுக் கழகம் - யூசோப் இஷாக் கல்விக்கழகம் பதிப்பில் வெளியான இந்நூலின் அறிமுக விழா தேசிய நூலக வாரியத்தில் நடைபெற்றது.
மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன், அமைச்சர்கள் டான் சீ லெங், விவியன் பாலகிருஷ்ணன், ஜோசஃபின் டியோ, ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங், நூல் ஆசிரியர் திருவாட்டி ஐரீன் இங் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நூல் வெளியீட்டு விழாவை முன்னிட்டு தேசிய நூலக வாரியம், திரு ராஜரத்தினத்தின் வாழ்க்கை வரலாறு, அரசியல் பயணம், சமூகப் பங்களிப்பு குறித்த பல விவரங்களை அதன் தனிச்சிறப்பான ‘சாட்புக்’ (ChatBook) மென்பொருள் வாயிலாக வழங்குகிறது.

