ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பிற்கு அந்நாட்டு ராணுவம் விளக்கமளிக்க உள்ளதாக செய்தி வெளிவந்ததைத் தொடர்ந்து, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் வியாழக்கிழமை (ஏப்ரல் 30) உயர்ந்துள்ளது.
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை புதன்கிழமையைவிட 6.9 விழுக்காடு உயர்ந்து ஒரு பீப்பாய் 126.20 அமெரிக்க டாலரானது. 2022 ஜூன் மாதத்திற்குப் பிறகு பதிவான ஆக அதிக விலை இது.
பிப்ரவரி இறுதியில் போர் தொடங்கியதிலிருந்து ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதால் கச்சா எண்ணெய், திரவ எரிவாயு விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டு எரிசக்தி விலை அதிகரித்து வருகிறது.
அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படும்வரை ஈரானுக்கு எதிரான கடற்படை முற்றுகை நீக்கப்படாது என்று திரு டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு வட்டாரத்தில் ‘ஹைப்பர்சோனிக்’ ஏவுகணைகளை நிலைநிறுத்த அமெரிக்க ராணுவம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆயினும், அமெரிக்காவின் இந்த அழுத்தத்திற்குப் பணியப்போவதில்லை என்று ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அனைத்துலக எரிசக்தி அமைப்பு இப்போராட்டத்தை ‘வரலாற்றிலேயே மிகப்பெரிய விநியோக அதிர்ச்சி’ என வருணித்துள்ளது.

