‘சிங்கப்பூர்’ எனும் ஒற்றைச் சொல் சிங்கப்பூரர்களை ஒன்றிணைக்கும் ஒற்றுமையின் அடிநாதம் என்றும், சமயங்களுக்கு இடையிலான ஒற்றுமையும் மரியாதையும் நாட்டின் தனித்துவமிக்க வலிமை என்றும் கூறியுள்ளார் ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய சிஙகப்பூர் வட்டார மேயருமான டெனிஸ் புவா.
சிங்கப்பூர் அதன் 60வது சுதந்திர தினத்தைக் கொண்டாடவுள்ள வேளையில், இவ்வாண்டு நான்காவது முறையாக தெக் சோலிங் பௌத்த ஆலயம் ‘அவர் ஜாயஸ் 2025 விசாக்’ எனும் மூன்று நாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
சனிக்கிழமை காலை (மே 10) தொடங்கிய அந்த நிகழ்ச்சியில் நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றுக்காகச் சிறப்புப் பிரார்த்தனைகள் இடம்பெற்றன.
இந்த விசாக தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திருவாட்டி புவா கிறிஸ்தவராக இருந்தபோதிலும், பௌத்த நண்பர்களுடன் இதைக் கொண்டாட வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி தெரிவித்தார்.
“நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் அடிநாதம் சிங்கப்பூர். சிங்கப்பூர் நிலைப்பதற்கும் வெற்றிகரமாகச் செழிப்பதற்கும் இனம், சமயம் ஆகியவற்றைக் கடந்தும் மேலோங்கி நிற்கின்ற பரஸ்பர மரியாதையும் ஒற்றுமையும் மிக முக்கியம்,” என்று வலியுறுத்தினார் திருவாட்டி புவா.
வரும் திங்கட்கிழமை (மே 12) விசாக தினம். இந்த ஆண்டுக் கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாக, கலைநயம்மிக்கதும், தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய திபெத்திய பௌத்தக் கலை சித்திரத்தின் பிரதியுமான புத்தர் ஓவியம் விழா மேடையில் திறந்துவைக்கப்பட்டது.
சிராங்கூன் எம்ஆர்டி அருகில் உள்ள திறந்தவெளியில் மே 10 முதல் 12 வரை மூன்று நாள்களுக்கு விசாக தினக் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. இவற்றில் விலங்குகள், பறவைகளுக்கு ஆசி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு அமர்வுகள் நடைபெறவுள்ளன.
இதுவரை இல்லாத அளவாக, இந்த ஆண்டு ஐயாயிரம் வருகையாளர்கள் விசாக தின நிகழ்ச்சியில் பங்கேற்கக்கூடும் என்று ஆலயம் கருதுகிறது. இதற்கிடையே சிராங்கூன் வட்டாரவாசியான தமிழ்செல்வி, 63, இவ்விழாவில் பங்கேற்க வந்திருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
“இனம், மொழி, சமயம் என எல்லைகள் கடந்து மக்கள் புத்தரை வழிபட வருவதைப் பார்ப்பது மனத்திற்கு நிறைவளிக்கிறது,” என்றார் அவர்.
ஏறத்தாழ 14 ஆண்டுகளாக இத்தகைய நிகழ்ச்சிகளில் தொண்டூழியம் செய்துவரும் சத்யநாராயணா மைலாவரப்பு, 51, இந்த ஆண்டும் முதலுதவி நிலையத் தொண்டூழியத்தில் ஈடுபடுகிறார்.
“இங்கு வருவதற்குக் கட்டுப்பாடு எதுவுமில்லை. அமைதி வேண்டி அனைத்து சமய மக்களும் ஆண்டுதோறும் கூடுவதைப் பார்ப்பதே உள்ளத்தில் இன நல்லிணக்கத்தைப் பூக்கச் செய்யும்,” என்று சொன்னார் திரு சத்யா.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்புநோக்க தற்போது இத்தகைய கொண்டாட்டங்களில் தொண்டூழியம் செய்ய முன்வரும் தன்னார்வலர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.