ஈசூனில் அண்டை வீட்டுக்காரர்கள் இருவரிடையே மூண்ட சண்டையில் ஒருவர் மாண்டதாகவும் மற்றொருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புளோக் 334பி ஈசூன் ஸ்திரீட் 31ல் சனிக்கிழமை (ஜூலை 19) நடந்த சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணையில் அவர்களுக்கு இடையிலான சண்டை குறித்துத் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து சனிக்கிழமை மாலை 5.20 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் கூறின.
அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்றபோது, புளோக்கின்கீழ் 44 வயது ஆடவர் அசைவற்ற நிலையில் காணப்பட்டதாகவும் காயமடைந்த 53 வயது ஆடவரை அவரது வீட்டில் கண்டதாகவும் காவல்துறை கூறியது.
ஏற்கெனவே அந்த ஆடவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டதாகவும் அதன் தொடர்ச்சியாக 44 வயது ஆடவர், 53 வயது ஆடவரைக் கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் அந்த 44 வயது ஆடவர், புளோக்கின்கீழ் அசைவற்ற நிலையில் காணப்பட்டார். சம்பவ இடத்திலேயே அவர் மாண்டதாகக் குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவ உதவியாளர்கள் கூறினர்.
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், இதில் சூது ஏதும் நடந்திருப்பதாகச் சந்தேகிக்கப்படவில்லை என்று காவல்துறை தெரிவித்தது.
சம்பவம் தொடர்பான படங்களில், அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் அருகிலுள்ள புல்தரையில் காவல்துறையின் நீல நிறக் கூடாரம் அமைக்கப்பட்டிருப்பது தெரிகிறது.
தொடர்புடைய செய்திகள்
அந்த புளோக்கின் நான்காவது மாடியில் குடியிருக்கும் பெண் ஒருவர், பலத்த சத்தத்தைக் கேட்டதாகவும் பின்னர் முதிய ஆடவர் ஒருவர் வயிற்றுப் பகுதியில் காயங்களுடன் காணப்பட்டதாகவும் கூறியதாக சீனமொழி நாளிதழான சாவ்பாவ் தகவல் வெளியிட்டுள்ளது.
காயமடைந்த 53 வயது ஆடவர், சுயநினைவுடன் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
காவல்துறை விசாரணை தொடர்கிறது.

