சாங்கி விமான நிலையம் மற்றும் கரையோரப் பூந்தோட்டம் ஆகிய இடங்களில் சட்டவிரோத வாகனச் சேவை வழங்கிய 20க்கும் மேற்பட்ட வாகனமோட்டிகள் பிடிபட்டுள்ளனர்.
நிலப் போக்குவரத்து ஆணையம் சனிக்கிழமை (ஜூலை 12) வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், 22 மோட்டார் சைக்கிளோட்டிகள் சிங்கப்பூருக்குள்ளும், மேலும் மலேசியாவிற்கு சென்று வரவும் இத்தகைய சட்டவிரோத வாகன சேவை வழங்கியதாகத் தெரிவித்துள்ளது.
தேசிய தனியார் வாடகை வாகனச் சங்கம், பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆணையம் கூறியது.
இதற்கிடையே, இதன் தொடர்பில் சிக்கியுள்ள வாகனமோட்டிகளிடம் மேற்கூறிய வாகன சேவை வழங்குவதற்கு உரிய வாகன உரிமமும் இல்லை என்று கூறியுள்ள ஆணையம், இத்தகைய சேவைக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டதா அல்லது வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்டதா என்பது குறித்த விவரங்களை ஆணையம் வெளியிடவில்லை.
வாகனச் சேவை வழங்க முறையான உரிமம் பெற்ற ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தையும் இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் பாதிக்கின்றன என்பதை சுட்டிய ஆணையம், முறையாகக் காப்புறுத் திட்டம் இல்லாததும், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதுமான இதுபோன்ற சட்டவிரோத போக்குவரத்து சேவையைப் பயணிகள் தவிர்த்திடுமாறும் வலியுறுத்தியது.
மேற்கூறிய சட்டவிரோத செயல்கள் புரியும் குற்றவாளிகளுக்கு $3,000 வரை அபராதம், ஆறு மாதச் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படலாம் என்பது கவனிக்கத்தக்கது.