இம்மாதம் புதிதாக விற்பனைக்கு விடப்படவுள்ள 2,085 தேவைக்கேற்ப கட்டப்படும் (பிடிஓ) வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளுக்கான காத்திருப்பு நேரம் மூவாண்டுகளுக்கும் குறைவாக இருக்கும்.
புக்கிட் பாத்தோக், செங்காங் ஆகிய வட்டாரங்களில் அமையும் மூன்று பிடிஓ திட்டங்களுக்கு இது பொருந்தும்.
புக்கிட் பாத்தோக்கில் அமையும் பிரிக்வில்@புக்கிட் பாத்தோக் (BrickVille @ Bukit Batok) திட்டத்தில் 689 வீடுகள் விற்பனைக்கு விடப்படும். அந்த வீடுகளுக்கான காத்திருப்பு நேரம் ஈராண்டுகளாகும்.
பொதுவாக பிடிஓ வீடுகளுக்குக் காத்திருக்கவேண்டிய நேரம் இவ்வளவு குறைவாக இருக்காது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அத்திட்டமும் சம்பந்தப்பட்ட மூன்று திட்டங்களில் அடங்கும் என்று வீவக ஞாயிற்றுக்கிழமையன்று (அக்டோபர் 6) தெரிவித்தது.
இவ்வாண்டிறுதிக்குள் வீவக மூவாண்டுகளுக்குக் குறைவான காத்திருப்பு நேரத்தைக் கொண்ட 2,876 பிடிஓ வீடுகளை விற்பனைக்கு விட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் காத்திருப்பு நேரம் மூவாண்டுகளுக்கும் குறைவாக இருக்கும் 2,000லிருந்து 3,000 பிடிஓ வீடுகளை விற்பனைக்கு விடுவது இலக்காக இருந்தது. அந்த வகையில் இலக்கு முன்னதாகவே எட்டப்பட்டுவிடும்.
அக்டோபர் மாதம் நடைபெறும் பிடிஓ விற்பனை நடவடிக்கை இவ்வாண்டுக்கான கடைசி விற்பனை நடவடிக்கையாகும். ஓராண்டில் இடம்பெறும் பிடிஓ விற்பனை நடவடிக்கைகளின் எண்ணிக்கையை நான்கிலிருந்து மூன்றாக குறைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அக்டோபரில் நடக்கும் பிடிஓ விற்பனை இவ்வாண்டுக்கான கடைசி நடவடிக்கையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிக்வில்@புக்கிட் பாத்தோக் திட்டத்தைத் தவிர செங்காங்கில் அமையும் மற்ற இரு பிடிஓ திட்டங்களில் வீடு வாங்க விரும்புவோர் சற்று கூடுதல் நேரம் காத்திருக்க வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
ஃபெர்ன்வேல் செயில்ஸ் திட்டத்தில் விற்பனைக்கு விடப்படவுள்ள 545 வீடுகளுக்கான காத்திருப்பு நேரம் ஈராண்டு மூன்று மாதங்கள். ஃபெர்ன்வேல் ஒயேசிஸ் திட்டத்தில் விற்பனைக்கு விடப்படும் 851 வீடுகளுக்கான காத்திருப்பு நேரம் ஈரரண்டு ஒன்பது மாதங்கள்.
பிடிஓ வீடுகளுக்கான காத்திருப்பு நேரத்தைக் குறைக்க வீவக, பல்வேறு அரசாங்க அமைப்புகளுடன் அணுக்கமாகச் செயல்பட்டதாக அதன் தலைமை நிர்வாகி டான் மெங் டுய் கூறினார்.

