பண்டைய இலக்கியம் போற்றும் பன்னிரு திருமுறைக் காவடி

பண்டைய இலக்கியம் போற்றும் பன்னிரு திருமுறைக் காவடி

2 mins read
0c80d9fd-8b7f-420c-9ac5-3ba027b1f2d7
சிவனடியார்கள் சூழ எடுத்துச் செல்லப்படும் பன்னிரு திருமுறைகளைத் தாங்கும் மரத்தாலான இடபம். - படம்: ராஜவேலு பழனிவேலு

பால்குடங்களைச் சுமந்து செல்லும் பக்தர்களுக்கு இடையே, சைவ சமயத்திலும் தமிழ் இலக்கியத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ள கணினிப் பொறியாளர் ராஜவேலு பழனிவேலு, பன்னிரு திருமுறைகளை ஏந்தியவாறு தைப்பூச ஊர்வலத்தில் நடந்து சென்றார்.

காரைக்காலுக்கு அருகிலுள்ள ஊரைச் சேர்ந்த திரு பழனிவேலு, 1997ல் சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்தார். கேலாங் ஈஸ்ட் வட்டாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சிவன் கோயிலில் சக இறையன்பர்களுடன் அடிக்கடி தேவார, திருவாசகப் பாடல்களைப் பண்ணிசையுடன் பாடுவதில் இவர் இன்பம் காண்கிறார்.

‘திருஞானசம்பந்தர் சிவநெறித் திருக்கூட்டம்’ என்ற இவரது குழுவினர், வழிபாடு மட்டுமன்றித் தொண்டூழியத்திலும் ஈடுபடுகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் சிவனடியார்களுடன் சிராங்கூன் ரோட்டிலுள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலிலிருந்து புறப்பட்டு, கிட்டத்தட்ட 10 மணிக்கு தேங் ரோடு அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலயத்தை அவர் அடைந்தார்.

மரத்தால் செய்யப்பட்ட இடப (காளை) வாகனத்தின் மீது திருமுறை நூல்கள் வைக்கப்பட்டு, அவற்றிற்கு மலர்மாலை, உருத்திராட்சம் ஆகியவை சாற்றப்படுகின்றன. இதனைச் சிவனடியார்கள் தங்கள் தலையில் தாங்கிச் சுமந்து செல்கின்றனர்.

தம்முடைய குருநாதர் சிவபக்தவச்சலம் ஏற்பாடு செய்திருந்த மாநாடு ஒன்றில், பங்கேற்பாளர்கள் இதேபோலத் திருமுறைகளைத் தலையில் ஏந்திச் சென்றதைக் கண்டதாக அவர் கூறினார்.

தீந்தமிழில் வடிவம் பெற்ற திருமுறைகள் நாடெங்கும் அறியப்பட வேண்டும் என்ற நோக்கில் இதற்கு ஏற்பாடு செய்திருந்ததாகத் திரு பழனிவேலு கூறினார்.

“திருமுறைகளைத் தலையில் தாங்கினால் தலையெழுத்து மாறும் என என் குருநாதர் கூறுவார். அதையும் தாண்டி, இச்செயல் தமிழ் வேதமான திருமுறையைச் சிறப்பிப்பதாக அமைகிறது,” என்று திரு பழனிவேலு கூறினார்.

“தமிழகத்தில் திருமுறைகளை வீதிகளில் பாடும் வழக்கம் எங்களுக்கு உண்டு. எனவே, சிங்கப்பூரில் தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய தினங்களில் பலரும் கேட்கும்வண்ணம் நாங்கள் பாடுகிறோம்,” என்று அவர் கூறினார். திரு பழனிவேலுடன் சென்றிருந்த பக்தர்களில் ஒருவரான 78 வயது திரு ஆர். கந்தசாமி, ஊர்வலத்தின்போது தேவார, திருப்புகழ் பாடல்களைப் பாடி மகிழ்ந்ததாகத் தெரிவித்தார்.

“சிலர் எங்களுடன் இணைந்து பாடினர். வேறு சிலர் கைத்தாளம் போட்டனர். பக்தியுணர்வு எங்களைச் சூழ்ந்திருந்தது,” என்று அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்