உலகம் அதிக நிலையற்றதாகி வருகிறது. இது ஒருநாளில் கடந்துவிடும் புயல் அல்ல. உலகம் மாறிவிட்டதால், சில காலத்திற்கு உடன் இருக்கப் போகிறது.
பயணம் சுலபமாக இருக்குமென்று உறுதி தரமுடியாது. புயல்கள் வீசும். சிரமமான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டியிருக்கும். ஆனால், புயல் எவ்வளவு கடுமையாக இருந்தாலும் மக்களின் ஆதரவுடன், மக்கள் செயல் கட்சி மக்களுக்குப் பக்கபலமாக இருக்கும்.
சிங்கப்பூரைக் கட்டிக்காக்க அனைத்தையும் செய்யும் என்று மக்கள் செயல் கட்சி (மசெக) சார்பில் அக்கட்சியின் ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி வேட்பாளாரான திரு தினேஷ் வாசு தாஸ் உறுதியளித்தார்.
வசந்தம் தொலைக்காட்சியில் வியாழக்கிழமை (மே 1) இரவு ஒளிபரப்பான கட்சி அரசியல் ஒலிபரப்பில் மசெக சார்பில் திரு தினேஷ் தமிழில் உரையாற்றினார்.
“உடனடியான பொருளியல் சவால்களுக்கு அப்பால், நிறைவான திட்டங்களையும் கொண்டு வரவிருக்கிறோம்.
“வாழ்க்கைச் செலவினமும் வேலைகளைப் பாதுகாப்பதும் தலையாய முன்னுரிமை. ஊழியர்களையும் குடும்பங்களையும் பாதுகாக்க திட்டங்களைச் செயல்படுத்துவோம். வளர்ச்சிக்குத் தொடர்ந்து துணைபுரிவோம்.
“கொவிட் சமயத்தில் செய்ததைப்போல், இம்முறையும் செய்யவேண்டியதைச் செய்து ஒன்றிணைந்து கடந்து செல்வோம்,” என்றார் அவர்.
“கடந்த ஓராண்டாக, திரு லாரன்ஸ் வோங் தமது புதிய பொறுப்புக்குத் தன்னை அர்ப்பணித்து வருகிறார். மக்கள் செயல் கட்சி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும், அவரைப் போல் அதே கொள்கையுணர்வுடன் சேவையாற்றுவார்கள்,” என்று அவர் உறுதிகூறினார்.
தொடர்புடைய செய்திகள்
பிரதமர் லாரன்ஸ் வோங், வரவுசெலவுத் திட்டத்தில் முழுமையான உதவித்தொகுப்பை அறிவித்தார். இது ஒருமுறை மட்டும் அளிக்கப்படும் உதவியாக இருக்காது. தேவைப்படும்வரை மசெக அணி தொடர்ந்து உதவி செய்யும் என்றார் திரு தினேஷ்.
இத்தேர்தல் எதிர்காலத் தலைமைத்துவத்தை உருவாக்கும் என்பதையும் திரு தினேஷ் குறிப்பிட்டார்.
“மக்கள் செயல் கட்சியின் இந்த அணி, அனுபவத்துடன் புதிய கண்ணோட்டங்களைப் பிரதிநிதிக்கிறது.
“எதிர்க்கட்சிக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் மக்கள் செயல் கட்சி அணியைப் பலவீனமாக்கும், குறிப்பாக நாடு கடுமையான சவால்களை எதிர்நோக்கிவரும் காலகட்டத்தில்.
“ஒன்றிணைந்து செயல்பட்டால், எதிர்காலச் சவால்களைச் சமாளித்து, நாம் விரும்பும் சிங்கப்பூரை உருவாக்கலாம்,” என்றார் அவர்.
இந்தத் தேர்தலில், பல்வேறு கட்சிகளின் கருத்துகளைக் கேட்டிருக்கும் மக்கள் மே 3ஆம் தேதி வாக்களிக்கச் செல்லும்போது, இரு முக்கியக் கேள்விகள் குறித்து சிந்திக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
“சிங்கப்பூர் இன்றைய புயலைக் கடந்துசெல்ல யாரால் வழிகாட்ட முடியும், உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் ஒளிமயமான எதிர்காலத்தை யாரால் உருவாக்கித்தர முடியும்,” என்பதை யோசிக்க வேண்டும் என்ற அவர், “இத்தனை ஆண்டுகளாக, மக்கள் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியிலும், மசெக கைகோத்து, தோள்கொடுத்து துணை நிற்கிறது. ஒன்றிணைந்து வளமிக்க இல்லத்தை அமைத்திருக்கிறது என்பதைச் சுட்டினார்.
“சிங்கப்பூர் தொடர்ந்து வெற்றி அடைவதையே அனைவரும் விரும்புவோம். நமக்காகவும் அடுத்த தலைமுறைக்காகவும் மேம்பட்ட எதிர்காலத்தை உருவாக்க விரும்புவோம்,” என்று கூறிய அவர், அந்நிலையை எப்படி அடையப் போகிறோம் என்ற கேள்வியை எழுப்பினார்.
இது மக்கள் செயல் கட்சியின் வேலை என்று எதிர்க்கட்சிகள் அனைத்தும் சொல்கின்றன. அவர்கள் அதிகமான மாற்றுக் கருத்துகளை முன்வைப்பதற்காக நாடாளுமன்றத்தில் கூடுதல் இடங்களை மட்டும் பெற விரும்புகிறார்கள், ஆனால் கூடுதல் பொறுப்புகள் அல்ல என்பதை திரு தினேஷ் வலியுறுத்தினார்.
எதிர்க்கட்சிகள் இனிப்பாகப் பேசி ஆசை காட்டுகின்றன என்று அவர் கூறிய அவர், முடிவு சிங்கப்பூரர்களின் கைகளில் இருக்கிறது. மக்கள் கவனமாகச் சிந்தித்து முடிவெடுப்பார்கள் என்று நம்புகிறோம் என்றார்.
“கடந்த அறுபது ஆண்டுகளைவிட மேலும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவோம். எதிர்காலம் இன்னும் சிறப்பாக இருக்கப் போகிறது. உங்களுக்கு அனைத்தையும் செய்ய, எங்கள் அணிக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள். அன்புகூர்ந்து மக்கள் செயல் கட்சிக்கு வாக்களியுங்கள்,” என்று மசெக சார்பாக அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.
“மக்களின் குரலாக ஒலித்து, மக்களுக்காகச் செயல்படுவோம்,” என்ற மக்கள் செயல் கட்சியின் உறுதிமொழியை அவர் வலுவோடு முன்வைத்தார்.