ஊடக நிறுவனங்களின் இணைப்பைக் கடுமையாக்கும் சட்டம் நிறைவேற்றம்

தகவல் தொடர்பு மேம்பாட்டு ஆணையத்துக்குக் கூடுதல் அதிகாரம்

ஊடக நிறுவனங்களின் இணைப்பைக் கடுமையாக்கும் சட்டம் நிறைவேற்றம்

2 mins read
aa39a47d-4fdb-4c5c-907c-6374353a6d3a
தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணைய மசோதாவின்கீழ் கொண்டுவரப்படும் திருத்தங்கள், சந்தையில் நியாயமான நடைமுறைகளை உறுதிசெய்வதற்கு அந்த ஆணையத்திற்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ஸ்ட் டைம்ஸ்

ஊடகத் துறையில் உரிமையாளர் மாற்றம், கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைக் கண்காணிப்பதில் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்திற்கு (ஐஎம்டிஏ) கூடுதல் அதிகாரங்களை வழங்கும் மசோதா வியாழக்கிழமை (மே 7) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

தற்போதைய சட்டப்படி, உரிமம் பெற்ற பத்திரிகை, ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு இடையேயான இணைப்புகளுக்கே ஆணையத்தின் அனுமதி தேவை.

புதிய திருத்தத்தின்படி, ஓர் ஊடக நிறுவனத்தின் 30 விழுக்காடு அல்லது அதற்கு மேற்பட்ட பங்குகளை வாங்க ஆணையத்திடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும்.

ஒளிபரப்புச் சொத்துகளை வைத்திருக்கும் வணிக அறக்கட்டளை போன்ற அமைப்புகளும் இந்த வரம்பிற்குள் கொண்டு வரப்படும்.

“ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட நிறுவனங்களை நிர்வகிப்பவர்கள், அவற்றின் உரிமையாளர்கள் குறித்து அரசாங்கம் அதிக அக்கறை காட்டுகிறது. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (ஏஐ), பொய்ச் செய்திகள் பரவிவரும் இக்காலத்தில், பொதுமக்களுக்கான தகவல் சூழலைத் தீர்மானிப்பதில் இந்த நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன,” என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டுமூத்த துணையமைச்சர் டான் கியட் ஹாவ் கூறினார். “சிங்கப்பூர் குடிமக்களை மட்டுமே இயக்குநர்களாகக் கொண்டிருக்கக்கூடிய ‘செய்தித்தாள் நிறுவனம்’ போன்ற வரையறைக்குள் வராத பிற நிறுவன அமைப்புகளும் செய்தித்தாள் அனுமதி பெற்று வெளியீடுகளை நடத்தக்கூடும். அவை பாரம்பரிய ஊடகங்களைப் போன்றே பெரும் செல்வாக்கையும் மக்களைச் சென்றடையும் வசதியையும் கொண்டிருக்கலாம்,” என்று அவர் தெரிவித்தார்.

சந்தையில் நியாயமற்ற போட்டிகளைத் தவிர்க்கவும் பயனீட்டாளர் நலனைப் பாதுகாக்கவும் ஊடக நிறுவனங்களுக்கு உடனடி உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரம் இனி ஐஎம்டிஏவிடம் இருக்கும். எடுத்துக்காட்டாக, சந்தா ஒப்பந்தக் காலத்தில் விலையை உயர்த்துவது போன்ற நடவடிக்கைகளை இதன் மூலம் தடுக்க முடியும்.

புதிய ஊடக உரிமைச் சட்டத்திருத்தம் குறித்து 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலைகளையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.

முக்கிய ஊடகங்கள் ஏற்கெனவே அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சூழலில், இச்சட்டம் உண்மையிலேயே சுதந்திரமான ஊடகங்களின் வளர்ச்சியைத் தடுக்கக்கூடும் என்று பாட்டாளிக் கட்சியின் தொகுதியில்லா உறுப்பினர் ஆண்ட்ரே லோ அச்சம் தெரிவித்தார்.

ஊழியர் நலன், சந்தைப் போட்டிக்கு ஆதரவாக இச்சட்டம் செயல்பட வேண்டும் என பைனியர் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பேட்ரிக் டே வலியுறுத்தினார்.

புதிய திருத்த மசோதா, உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்தும் சட்டம் அன்று எனவும் பெரிய நிறுவனங்களின் மேலாதிக்கத்தைத் தடுத்து, புதியவர்கள் வளர்வதற்கும் பயனீட்டாளர் பாதுகாப்பிற்கும் வழிவகுக்கும் எனவும் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய திரு டான் விளக்கமளித்தார்.

நிறுவன மாற்றங்களின்போது ஊழியர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படாமல் இருக்க அரசாங்கம் ஆதரவளிக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இதர சமூக ஊடகங்கள், உள்ளூர் உள்ளடக்க உருவாக்க நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவது குறித்தும் அரசாங்கம் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்