வசதி குறைந்த சிறுநீரகச் செயலிழப்பு நோயாளிகளுக்கு ஆதரவாகத் சிறுநீரகச் சுத்திகரிப்பு அறநிறுவனம் ஏற்பாடு செய்த பெருநடை, சைக்கிளோட்ட அறக்கொடை நிகழ்ச்சிகளில் கிட்டத்தட்ட 8,000 பேர் பங்கேற்றனர்.
உலக நீரிழிவு நாளை முன்னிட்டு பேஃபிரன்ட் நிகழ்ச்சித் திடலில் சனிக்கிழமை (நவம்பர் 14) ஐந்து கிலோமீட்டர் பெருநடையும் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை 20 கிலோமீட்டர் சைக்கிளோட்டமும் நடைபெற்றன.
சிறுநீரக நலன் சார்ந்த விளையாட்டுகள், கலைப் படைப்புகள், ரத்தச் சுத்திகரிப்பு அனுபவ நடவடிக்கைகள், உடற்பயிற்சிகள் ஆகியவையும் இடம்பெற்றன.
இந்நிகழ்ச்சியில் எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை அமைச்சர் (எரிசக்தி, தொழில்துறை) டாக்டர் டான் சீ லெங் கலந்துகொண்டார்.
முன்னதாக, கடந்த ஜூலை மாதம் ‘ஃபுட்சால்’ நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இம்மூன்று நிகழ்ச்சிகள் மூலமாக 2 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான நிதி திரட்டப்பட்டுள்ளது. இந்நிதி மானியக் கட்டணத்தில் ரத்தச் சுத்திகரிப்பு சிகிச்சை, போக்குவரத்து உதவி, இயன் சிகிச்சை, ஊட்டச்சத்து ஆலோசனை, உளவியல் ஆதரவு போன்றவற்றிற்குப் பயன்படுத்தப்படும்.
தசை வலுவிழப்பால் நோயாளிகள் கீழே விழுவதைத் தடுக்க 2023ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சிறப்புப் பயிற்சித் திட்டத்தின்கீழ் 2025-26 நிதியாண்டில் 6,489 அமர்வுகள் நடத்தப்பட்டன. இதன்மூலம் நோயாளிகளின் இயக்கத் திறனில் 30 விழுக்காடு முன்னேற்றம் காணப்பட்டது. அத்திட்டத்தில் பங்கேற்ற நால்வர் ஐந்து கிலோமீட்டர் பெருநடையில் பங்கேற்று, ஆளுக்கு 1.25 கிலோமீட்டர் தொலைவு நடந்தனர்.
சிங்கப்பூரில் 14 விழுக்காட்டினருக்கு நாட்பட்ட சிறுநீரகக் கோளாறு உள்ளது. புதிய சிறுநீரகச் செயலிழப்பு நோயாளிகளில் மூவரில் இருவர்க்கு நீரிழிவே காரணமாகச் சொல்லப்படுகிறது. நாளொன்றுக்குச் சராசரியாக ஆறு பேருக்குச் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படுகிறது.
“சமூகமாக இணைந்து செயல்பட்டால் நோயாளிகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். சிங்கப்பூரர்கள் தங்கள் உடல்நலத்தில் அக்கறை கொள்ள வேண்டும்,” என்று அறநிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் லீ கூறினார்.
1996ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அறநிறுவனம் 30ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. அவ்வமைப்பு இதுவரை 1,200க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு உதவியுள்ளது.
